Mirzapur S3 Review: மிர்சாபூர் சீசன் 3 விமர்சனம்.. சூப்பரா? சூர மொக்கையா?.. யாருக்கு சிம்மாசனம்!
மும்பை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஏற்கனவே வெளியான மிர்சாபூர் வெப்சீரிஸின் 2 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதன் 3வது சீசன் 4 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியானது. 2018ம் ஆண்டு வெளியான முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதனை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு மிர்சாபூர் 2வது சீசன் வெளியானது. இந்நிலையில், 4 ஆண்டுகள் கழித்து 3வது சீசன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அரசியல் மற்றும் ரவுடிசம் எந்தளவுக்கு மிர்சாபூரில் கலந்து இருக்கிறது என்பதை இந்த வெப்சீரிஸ் கதையாக்கி உள்ளது.

மிர்சாபூரின் சிம்மாசனத்துக்காக நடைபெறும் போட்டியில் கடந்த சீசன் இறுதியில் முதலமைச்சர் மாதுரியின் கணவர் முன்னாவையே கொன்று விடுகின்றனர். மிர்சாபூர் சிம்மாசனத்தில் தாதாவாக இருந்த கலீன் திரிபாதியையும் சுட்டுத் தள்ள அடுத்த சீசனில் என்ன ஆகும் என்கிற எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு 3வது சீசன் சூப்பராக இருந்ததா? அல்லது சோதித்து விட்டதா? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
கோமாவில் திரிபாதி: காலின் திரிபாதியை (பங்கஜ் திரிபாதி) சுட்ட பின்னர் ஷரத் சுக்லா (அன்ஜும் சர்மா) அவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்று ரகசியமாக சிகிச்சை அளித்து வருகிறார். பங்கஜ் திரிபாதி கோமாவில் இருக்க, மிர்சாபூரின் சிம்மாசனத்தை குட்டு பண்டித் (அலி ஃபசல்) பிடிக்க முயற்சிக்கிறார். அவருக்கு எதிராக ஷரத் சுக்லா போட்டி போடுகிறார்.

குட்டுவை கொல்ல முயற்சிக்கும் முதலமைச்சர்: தனது கணவர் முன்னாவின் கொலைக்கு காரணமான குட்டுவை கொல்வதற்காக முதலமைச்சர் மாதுரி (இஷா தல்வார்) ரகசியமாக ஸ்னைபர் ஆட்களையும் ஐஜி மூலமாக ஒரு கும்பலையும் செட் செய்து கொலை செய்ய பிளான் செய்கிறார். குட்டு பண்டித்தின் மூளையாக செயல்பட்டு வரும் கொலு பக்கத்து ஊருக்கு சென்ற நேரம் பார்த்து நடக்கும் ஆணழகன் போட்டியை பயன்படுத்தி குட்டு பண்டித்தை போட்டுத் தள்ள பிளான் செய்கின்றனர். ஆனால், தனியாளாக அந்த சம்பவத்தில் இருந்து தப்பித்து அனைவரையும் காலி செய்து விடுகிறார் குட்டு பண்டித்.

மிர்சாபூரின் கிங்: இனிமேல் மிர்சாபூரின் சிம்மாசனத்துக்கு சொந்தக்காரன் நான் தான் என ஆயுதங்களை தயாரிக்கும் வேலையை அதிகரிக்கும் குட்டு பண்டித் திரிபாதியின் சிலையையும் உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கோமாவில் இருந்து முழிக்கும் திரிபாதி என்ன செய்தார். முதலமைச்சர் குட்டு பண்டித்தை பழி வாங்கினாரா இல்லையா? நிஜமாகவே அந்த சிம்மாசனம் யாருக்கு கிடைத்தது? என ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன் இந்த சீசனும் 10 எபிசோடுகளுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், இன்னமும் மிர்சாபூர் கதை முடியவில்லை. பல பிரபலங்கள் ஒவ்வொரு சீசனிலும் உயிரிழந்த நிலையில், சில புதிய பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களும் முளைத்துள்ளன.

பார்க்கலாமா? வேண்டாமா?: தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் மிர்சாபூர் சீசன் 3 வெளியாகி இருக்கிறது. ஆபாச வசனங்கள், கொடுரமான கொலைகள் என ராவான வெப்சீரிஸாகவே இது உருவாகி இருக்கிறது. ஆனால், முதல் 2 சீசனில் இருந்த அளவுக்கு ஒரு விறுவிறுப்பு மற்றும் ஸ்ட்ராங்கான திரைக்கதை இந்த சீசனில் மிஸ்ஸிங் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அதை முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு சரி செய்திருக்கிறது. மிர்சாபூர் ரசிகர்களுக்கு இது ட்ரீட்டாக அமையும். ஆனால், இயக்குநர்களான குர்மீத் சிங் மற்றும் ஆனந்த் ஐயர் இன்னமும் மெனக்கெட்டு அடுத்த சீசனுக்கான கதையை வலுவாக உருவாக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











