Haraa OTT: ’வெள்ளிவிழா நாயகன்’ மோகனுக்கு அடித்த ஜாக்பாட்.. ’ஹரா’ ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெள்ளி விழா நாயகன் மோகன் ஆக்ஷன் அவதாரம் எடுத்து அதகளப்படுத்திய 'ஹரா' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. 'ஹரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை இங்கே பார்க்கலாம்.
தாதா 87, பொல்லாத உலகில் பயங்கர கேம், பவுடர் படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான படம் தான் ஹரா. கடந்த மாதம் ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நடிகர் மோகன் பல வருடங்கள் கழித்து இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அடுத்ததாக தளபதி விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் நடிகர் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமராஜனை முந்திய மோகன்: இந்த ஆண்டு ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் கடந்த மே 23ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. அந்த படத்தின் கதை நல்லா இருந்தும் படத்துக்கு சரியான புரமோஷனை தயாரிப்பு தரப்பு செய்யாததால் தான் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என ராமராஜன் தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார். அந்த படத்திற்கு பிறகு வெளியான மோகனின் 'ஹரா' திரைப்படம் சாமானியன் படத்துக்கு முன்பாகவே ஓடிடியில் விற்பனையாகி ரிலீஸுக்கு தயாராகி விட்டது. ரஜினிகாந்த் கேமியோவாக நடித்த லால் சலாம் திரைப்படமும் இன்னமும் ஓடிடியில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருடனை தொடர்ந்து ஹரா: சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரேவதி சர்மா, ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்ட பலர் நடித்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான கருடன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. இந்நிலையில், கருடன் படத்தைத் தொடர்ந்து மோகன் நடித்த ஹரா படத்தையும் நல்ல தொகைக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளம் வாங்கியுள்ளது.
ஓடிடி ரிலீஸ் எப்போ?: இந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த வாரம் வெளியான கல்கி திரைப்படம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் வெளியாகிறது. இந்நிலையில், சரியான கேப்பை பயன்படுத்தி மோகன் நடித்த ஹரா படத்தை இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூலை 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











