Thandel OTT: ஓடிடியில் வெளியாகும் தண்டேல்.. எந்த தளத்தில் எப்போது தெரியுமா?
சென்னை: நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் பிப்ரவரி 7ந் தேதி தியேட்டரில் வெளியான திரைப்படம் தண்டேல். இப்படத்திற்கு மக்களிடம் நல்ல விமர்சனம் வந்ததைத் தொடர்ந்து, படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினர். இத்திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தண்டேல். இப்படத்தில், நாகசைத்தன்யா, சாய் பல்லவி, ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், பிரகாஷ் பெலாவடி, நாகசைதன்யாவின் அம்மாவாக வரும் கல்பலதா என பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ் , தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.

தண்டேல் படத்தின் கதை: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் காதலித்து வருகின்றனர். குஜராத் சேட் ஒருவருக்காக நாக சைத்தன்யா, ஊரைச் சேர்ந்தவர்களுடன் அரபிக்கடலில் மீன் பிடிக்கிறார்கள் அப்போது புயல் காரணமாகப் பாகிஸ்தான் கடல் எல்லைக்குச் சென்றுவிடுகிறது நாக சைதன்யா குழுவின் படகு. இதனால், பாகிஸ்தான் கடலோரக் காவல்படை அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறது. சிறையிலிருந்து அவர்களை மீட்கப் போராடுகிறார் சாய் பல்லவி. அந்த போராட்டத்தில் சாய் பல்லவி ஜெயித்தாரா? இவர்களின் காதல் ஒன்று சேர்ந்ததா என்பது தான் தண்டேல் திரைப்படத்தின் கதை.
ஓடிடி ரிலீஸ்: பிப்ரவரி 7ந் தேதி தியேட்டரில் வெளியான இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்ததைத் தொடர்ந்து படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அமரன் படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கிற கதாபாத்திரத்தில் வாழ்ந்த சாய் பல்லவி. இந்த படத்திலும் சிறப்பாக நடித்து இருப்பதாக படம் பார்த்த அனைவரும் அவரை பாராட்டினார்கள். பலரின் பாராட்டை பெற்ற இத்திரைப்படம் வரும் 7ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை நெட்பிளிக்ஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
விடாமுயற்சி: அதே போல, மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, யோகி பாபு, ஆரவ் என மற்றும் பலர் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் வியாபார ரீதியாக வெற்றிப் படமாக அமையாமல் தோல்வி அடைந்தது. இப்படம் நாளை ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











