Naked OTT Movie Review: அந்த படம் மட்டுமில்லை.. வெங்கட் பிரபு இந்த படத்தையும் சுட்டுருக்காரு டோய்!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக தளபதி விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் வெளியாக காத்திருக்கிறது. ஆனால், அது எந்த ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் என தெரியவில்லை. வெங்கட் பிரபுவுக்கு விஜய் படம் கிடைக்க காரணமான 'மாநாடு' திரைப்படம் சில ஹாலிவுட் படங்களில் இருந்து அப்படியே சுடப்பட்டு எடுக்கப்பட்ட படம் தான்.
மாநாடு டீசரை பார்த்த ரசிகர்கள் வெங்கட் பிரபு 'டெனட்' படத்தை போல எடுத்துள்ளாரா என நினைத்தனர். டீசரிலும் ஒய்.ஜி. மகேந்திரன் அந்த வசனத்தை சொல்லி ரசிகர்களை நல்லாவே டைவர்ட் பண்ணியிருப்பார். ஆனால், உண்மையில் படம் வெளியான பின்னர் இது டெனட் போல இல்லை வேறுமாதிரி சுவாரஸ்யமாக இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

ஏற்கனவே ஹாலிவுட்டில் வெளியான 'Two Distant Strangers' படத்தில் இருந்து சுட்ட படம் தான் மாநாடு எனக் கூறப்பட்டது. ஆனால், இன்னொரு படமும் மாநாடு படம் போலவே 2017ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. அந்த படத்தின் டைட்டில் தான் 'Naked' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக ரசிகர்களை கவர்ந்த இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
நேக்கட் கதை: பார்ட் டைம் டீச்சராக வேலை பார்க்கும் ராப் ஆண்டர்சன் (மார்லன் வயான்ஸ்) மேகன் எனும் தனது பணக்கார காதலியை திருமணம் செய்துக் கொள்ள உள்ள நிலையில், ஒரு சரக்கு அடித்தால் ஒன்றும் குடி முழுகி போய் விடாதே என திருமணத்துக்கு முதல் நாள் இரவு தனது நண்பனுடன் சரக்கடிக்கிறார். விடிந்து பார்த்தால், லிப்ட்டுக்குள் ஆடையின்றி முழு நிர்வாணமாக கண் விழிக்கும் கதாநாயகன் அதிர்ச்சி அடைகிறார். லிப்ட் திறந்தவுடனே பிறந்தமேனியாக இருக்கும் ஹீரோவை பார்த்து ஆண்கள், பெண்கள் என பலர் அதிர்ச்சியடைகின்றனர். எப்படியாவது அங்கிருந்து போராடி சர்ச்சில் நடக்கும் தனது திருமணத்துக்கு செல்லத் துடிக்கும் ஹீரோவுக்கு சர்ச் பெல் அடித்த உடன் மீண்டும் பழையபடி லிப்ட்டுக்குள் நிர்வாணமாக வந்து விழுகிறார்.

மாநாடு படத்தை போல வந்தான் சுட்டான் ரிப்பீட் போல தேவாலய மணி அடிக்கும் போதெல்லாம் ஹீரோவுக்கு சாவு மணி அடிப்பது போல மீண்டும் முதலில் இருந்து லிப்ட்டுக்குள் ஆடையில்லாமல் வந்து விழுகிறார். ஒவ்வொரு முறையும் தான் சந்திக்கும் நபர்களை பற்றி புரிந்துக் கொள்கிறார். தனக்கு இது ஏன் இப்படி நடக்கிறது. தன்னுடைய ஹோட்டல் அறையை விட்டு விட்டு வேறு ஒரு ஹோட்டலில் ஆடையில்லாமல் எப்படி வந்து கிடக்கிறேன். எப்படியாவது தனது காதலியை அந்த சர்ச் பெல் அடிப்பதற்கு முன்பாக திருமணம் செய்து விட வேண்டும் என ஹீரோ பல முறை போராடும் கதை தான் இந்த நேக்கட் படத்தின் கதை.
வொர்த்தா? இல்லையா?: ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களை கதைக்குள் காட்சிகளின் வாயிலாகவும் ஹீரோ மார்லன் வயான்ஸின் நடிப்பு மூலமாகவும் ஈர்த்து விடுகிறது படம். ஹீரோவுக்கு நடக்கும் விஷயம் கடைசி வரை ஹீரோவுக்கு மட்டுமே தெரிகிறது. கஷ்டப்பட்டு திருமணத்துக்கு சென்ற பின்னரும் பல முறை அவர் மீண்டும் லிப்ட்டுக்குள் சென்று விட்டு திருமணம் நடைபெறும் இடத்திலும் அரங்கேறும் கூத்துகள் எல்லாம் வாய் விட்டு சிரிக்கும் காமெடிகளை அடுக்கி கொடுத்து இருக்கிறது. ஆனால், கடைசி வரை அவனுக்கு ஏன் அந்த விஷயம் ரிப்பீட் மோடில் நடக்கிறது என்பதற்குத்தான் சரியான விளக்கத்தை இயக்குநர் மைக்கேல் டிட்டஸ் கொடுக்கத் தவறிவிட்டார்.

அடல்ட் கன்டென்ட்: படத்தின் டைட்டிலே நேக்கட் என வைக்கப்பட்ட நிலையில், படத்தில் அதிகளவில் ஆபாச காட்சிகள் இருக்குமா என்றால் அதுதான் இல்லை. ஆரம்பத்தில் பேக் சைடு முழுவதும் நிர்வாணமாக ஹீரோ லிப்ட்டில் இருந்து வெளியே வரும் காட்சிகள் காட்டப்படும் அதன் பின்னர் ஒவ்வொரு உடைகளாக அவர் வெளியே வந்ததும் மற்றவர்களிடம் இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு இருப்பது போலத்தான் காட்டப்படும். அவரை தவிர்த்து வேறு யாரும் இந்த படத்தில் ஆடையின்றி நடிக்கவில்லை.
மாநாடு: Two Distant Strangers படம் 2020ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் ஹீரோவும் போலீஸ் அதிகாரியும் என இருவரும் டைம் லேப்ஸில் சிக்கிக் கொள்வது மாநாடு படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யா காட்சிகள் போலவே இருக்கும். ஆனால், அதற்கு முன்பாகவே 2017ம் ஆண்டே இப்படியொரு படம் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் விமான நிலையத்தில் ஹீரோ அணிந்திருக்கும் உடை போலத்தான் சிம்புவும் விமான நிலையத்திற்கு வரும் காட்சிகளில் உடை அணிந்திருப்பார். அதே போல டைம் காட்டுவது, பல முறை போய்ட்டு வந்து அந்த விஷயத்தை தெளிவாக கற்றுக் கொண்டு செய்வது என பல விஷயங்களை வெங்கட் பிரபு இந்த படத்தில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுத்திருக்கிறார் என தெரிகிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தாராளமாக இந்த காமெடி படத்தை ஒருமுறை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











