நம்பர் ஒன் இடத்தில் நானி படம்.. ரெட்ரோவுக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் எத்தனையாவது இடம் தெரியுமா?
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த மே 30ம் தேதி வெளியானது. அதற்கு ஒரு நாள் முன்பு தான் நானியின் ஹிட்: தி தேர்ட் கேஸ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், அந்த 2 படங்களில் நானியின் ஹிட் 3 படம் இந்தியளவில் நம்பர் ஒன் இடத்தை இந்த வாரம் பிடித்து டிரெண்டாகி வருகிறது.
தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கடந்த வாரம் பெரிதாக எந்தவொரு படமும் வெளியாகவில்லை. சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியான நிலையிலும், எந்த படமும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

கடந்த மே 1ம் தேதி வெளியான படங்களில் சூர்யாவின் ரெட்ரோ படத்தை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜூன் 2ம் தேதியான இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
நானி தான் நம்பர் ஒன்: ஓடிடி தளத்திலும் சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு இந்த வாரம் பெரிய போட்டி கிளம்பி இருக்கிறது. நானி, ஸ்ரீனிதி ஷெட்டி, கார்த்தி நடிப்பில் வெளியான ஹிட்: தி தேர்ட் கேஸ் திரைப்படம் மே 1ம் தேதி வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. அந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த மே 29ம் தேதி வெளியான நிலையில், இந்தியளவில் நெட்பிளிக்ஸ் டாப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் வெளியான சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படத்தை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
ரெண்டாம் இடத்தில் ரெட்ரோ: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சூர்யா ரசிகர்களுக்கு பிடித்த படமாகவே அமைந்தது. 240 கோடிக்கும் அதிகமாக லாபம் கிடைத்ததாக 2டி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஓடிடியில் மே 30ம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் 3 நாட்கள் ஆகியும் முதலிடத்தை பிடிக்க முடியாமல் 2வது இடத்திலேயே உள்ளது. சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படம் 3வது இடத்துக்கு சென்று விட்டது. அஜித் குமாரின் குட் பேட் அக்லி 6வது இடத்திலும், ராஷ்மிகா மந்தனா, விக்கி கவுஷல் நடித்த சாவா திரைப்படம் 9வது இடத்திலும் உள்ளன.
நம்பர் ஒன்னை பிடிப்பாரா சூர்யா: நானியின் ஹிட் 3 திரைப்படம் ஒரு நாள் முன்பு வெளியான நிலையில், அதற்கு முதலிடம் கிடைத்திருக்கும் என்கிற வாதங்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த வார இறுதிக்குள் தி ஒன் சூர்யா நம்பர் ஒன் இடத்தை ஓடிடியில் பிடிப்பாரா என்பதை வெயிட் பண்ணிப்பார்ப்போம்.
ஜியோ ஹாட்ஸ்டாரிலும் சரவெடி: மோகன்லாலின் பிளாக்பஸ்டர் படமான தொடரும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் கடந்த மே 30ம் தேதி வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த நிலையில், அதற்கு போட்டியாக இன்று ஜூன் 2ம் தேதி சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. அமேசான் பிரைமில் இந்த வாரமும் ரசிகர்களை கவரும் அளவுக்கு பெரிய படங்கள் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











