ஓடிடியில் வெளியாகும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம்!
சென்னை : ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.
இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் ரியோ ராஜ்க்கும் இதேபோன்றதொரு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்தப் படம் வரும் 17ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம்
ரியோ ராஜ், விஜே விக்னேஷ், ஷெரின் காஞ்ச்வாலா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2019ல் வெளியான படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. அறிமுக இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பு
கனா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஷபிர் இசையில் பாடல்கள் தகுந்த வரவேற்பை பெறவில்லை. ஆயினும் பின்னணி இசையில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருந்தார் ஷபீர்.

கலவையான விமர்சனங்கள்
புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற சிறப்பான நோக்கத்தில் சிவகார்த்திகேயன் இந்த வாய்ப்பை இயக்குநருக்கு கொடுத்த நிலையில், அதை சிறப்பாக செய்ய அவர் தவறியுள்ளார் என்ற விமர்சனம் எழுந்தது. கார்த்திக் வேணுகோபாலன் தான் எடுத்துக் கொண்ட கதையை சிறப்பாக காட்சிப்படுத்த தவறியதாகவும் குறிப்பிடப்பட்டது.

வித்தியாச டாஸ்க்குகள்
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் ரியோ ராஜ் மற்றும் விக்னேஷிற்கு 3 வித்தியாசமான டாஸ்க்குகளை கொடுக்கிறார் ராதாரவி. அந்த டாஸ்க்குகளை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டு முடிக்கிறார்கள் என்பதை கதைக்களமாக கொண்டு வெளியானது இந்தப் படம்.

வாய்ப்பை பயன்படுத்த தவறிய ரியோ
சின்னத்திரையில் சிறப்பாக தன்னை வெளிப்படுத்திய ரியோ, முதல் பட வாய்ப்பான இதை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். விறுவிறுப்பான கதையாக இருந்தும் திரைக்கதையை சிறப்பாக செய்திருந்தால் இன்னும் சிறப்பாக படம் வெளியாகியிருக்கும் என்றும் கூறப்பட்டது.

ஓடிடியில் ரிலீஸ்
இந்நிலையில் இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்க்க முடியாதவர்கள் தற்போது இதை ஓடிடியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











