Neru OTT Review: சஸ்பென்ஸ் த்ரில்லர்.. மோகன்லாலின் நேரு படம் எப்படி இருக்கு.. OTT திரை விமர்சனம்
சென்னை: மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான நேரு திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸில் 85 கோடி ரூபாய் வரை வசூலித்தது. தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ள நேரு படம் எப்படி இருக்கிறது என இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
நேரு ஓடிடி விமர்சனம்
த்ரிஷயம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி, மீண்டும் நேரு திரைப்படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படமும் த்ரிஷயம் போல கோர்ட் ட்ராமா பின்னணியில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மோகன்லால் வழக்கறிஞராக நடித்துள்ள நேரு திரைப்படம் தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகி, ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சாரா என்ற பார்வையற்ற இளம்பெண் தனியாக வீட்டில் இருக்கும் போது இளைஞன் ஒருவனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார். இதனை செய்தது பெரும் தொழிலதிபர் ஒருவரின் மகனான மைக்கேல் என போலீஸாரால் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால், மைக்கேல் குற்றவாளி இல்லை என வழக்கறிஞர் சித்திக்கும் அவரது மகள் ப்ரியாமணியும் நீதிமன்றத்தில் வாதாடுகின்றனர்.
அவர்களுக்கு எதிராக போராடும் வழக்கறிஞர் மோகன்லால், மைக்கேலின் குற்றத்தை நிரூபித்தாரா, அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா என்பது தான் கதை. சித்திக், ப்ரியாமணி ஆகியோரின் சூழ்ச்சியால் ஒரு வழக்கில் தோற்கும் மோகன்லால், அதன்பின்னர் நீதிமன்றம் பக்கமே செல்வதில்லை. பார் கவுன்சிலும் அவருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கிறது. அதனால் சாராவின் வழக்கில் வாதாட மறுக்கும் மோகன்லால், பின்னர் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
வழக்கமான சாட்சிகளையும் தடயங்களையும் கலைத்துவிட்டு குற்றவாளியை தப்பிக்க வைக்க முயற்சிப்பதை ஹீரோ எப்படி தடுக்கிறார் என்ற கோர்ட் ட்ராமா கதை தான் நேரு. படத்தின் பெரும்பகுதி காட்சிகளும் கோர்ட்டில் நடப்பதாகவே அமைந்துள்ளது. ஆனாலும் ரசிகர்களுக்கு போர் அடிக்காத வகையில் சுவாரஸ்யமாக கதை, திரைக்கதையை வடிவமைத்துள்ளார் ஜீத்து ஜோசப். த்ரிஷ்யம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவருக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை தான்.
அதேநேரம் சாராவாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன் ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளார். முக்கியமாக இறுதிக் காட்சியில் சித்திக் மிரட்டிய போதும், அவரது உருவத்தை சரியாக ஸ்கல்ப்ச்சர் செய்யும் சீன் சிலிர்க்க வைக்கிறது. மோகன்லால் நடிப்பை பற்றியெல்லாம் கேட்கவே வேண்டாம். நீதிமன்றத்தில் வாதாடும் போதும், சிசிடிவி காட்சிகளில் இருக்கும் தடயங்களை நீதிபதி முன் விவரிக்கும் இடங்களிலும் அப்ளாஸை அள்ளுகிறார்.
ப்ரியாமணி அவரது கேரக்டரை சரியாக செய்துள்ளார். அதேபோல் மற்றவர்களுக்கு நடிக்க பெரிய ஸ்பேஸ் இல்லையென்றாலும் கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தியுள்ளனர். ஆபாசம், ரத்தம் வடியும் ஆக்ஷன் போன்ற வன்முறை காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் அட்டகாசமாக உருவாகியுள்ளது நேரு. ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழிலும் கிடைக்கும் நேரு, ஓடிடி ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமே.


Click it and Unblock the Notifications











