OTT: இந்தியன் 2 முதல் விடாமுயற்சி வரை.. தமிழ் சினிமாவில் பல கோடி முதலீடு செய்த நெட்பிளிக்ஸ்!
சென்னை: இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட பெரும் தொகையை தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. கடந்த ஆண்டு விஜய்யின் லியோ உள்ளிட்ட பல பெரிய படங்களை வாங்கிப் போட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு என்ன என்ன படங்களை வாங்கி உள்ளது என்கிற லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.
அதற்காக அந்த நிறுவனம் செலவு செய்துள்ள தொகை தான் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே தற்போது வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பெரிய ஸ்க்ரீனில் தான் படம் பார்க்க வேண்டும் என்றும் சின்ன ஸ்க்ரீனில் வந்தாலே அது திருட்டு டிவிடி என கருதப்பட்டு வந்த நிலையில், 4 வாரங்களில் புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகி விடும் பொறுமையாக குடும்பத்துடன் பார்க்கலாம் என மக்கள் மனதையே மாற்றி விட்டன ஓடிடி நிறுவனங்கள்.

இந்தியன் 2 முதல் விடாமுயற்சி வரை: இந்த 2024ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பல பெரிய படங்களை வாங்கி மலை போல குவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா நடித்து வரும் விடாமுயற்சி, பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான், சிவகார்த்திகேயனின் எஸ்கே 21, விஜய்சேதுபதியின் மகாராஜா, கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட பல படங்களை வாங்கி இருக்கிறது நெட்பிளிக்ஸ்.
இத்தனை கோடிகள் முதலீடா?: இந்தியாவில் அதி விரைவாக நம்பர் ஒன் இடத்தை பிடித்தாக வேண்டும் என அதிக முதலீடுகளை செய்து வருகிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம். படத்தயாரிப்பாளர்களுக்கு ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல தியேட்டர் வசூல் ஒன்றும் ஓடிடி வசூல் ஒன்றும் என டபுள் தமாக்கா தான். இந்தியன் 2 படத்திற்கு 150 கோடி ரூபாய் வரை நெட்பிளிக்ஸ் கொடுத்திருப்பதாகவும், விடாமுயற்சி படத்துக்கு 80 கோடி ரூபாய், தங்கலான், எஸ்கே 21 உள்ளிட்ட மற்ற படங்களுக்கும் நல்ல தொகையை கொடுத்து புக் செய்துள்ள நெட்பிளிக்ஸ் 350 முதல் 400 கோடி ரூபாயை தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒதுக்கியிருப்பதாக கூறுகின்றனர்.
கோட், கங்குவா எதில்?: விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் சூர்யாவின் கங்குவா, ரஜினிகாந்தின் வேட்டையன் உள்ளிட்ட பெரிய படங்கள் அமேசான் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்து அமேசான் பிரைம் கடும் போட்டியை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











