புல்லட் டிரெயினில் குண்டு.. வேகம் குறைந்தால் மரணம்.. புல்லட் டிரெயின் எக்ஸ்ப்ளோஷன்
சென்னை: உலக சினி்மாக்களில் பார்த்து வியந்து ரசித்த காட்சிகள் ஒரு படங்களை பார்க்கும் போது நினைவுக்கு வரும். கார், பேருந்து, விமானங்களில் குண்டு வைப்பது போன்ற காட்சிகளை பார்த்தால் பரபரப்பும் தொற்றி கொள்ளும். உலகின் அதிவேக ரயிலான ஜப்பானின் புல்லட் டிரெயினில் வில்லன் ஒருவன் பாம் வைத்து மிரட்டுவது போன்ற படங்கள் 80களில் வெளியாகி சக்கை போடு போட்டன. உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்திய படம் தான் தி புல்லட் டிரெயின். ஸ்பீடு படங்களையும் மறக்க முடியாது. இப்படமும் அதே போன்ற திரைக்கதை தான். தற்போது அதே பாணியில் புல்லட் டிரெயின் எக்ஸ்ப்ளோஷன் என்ற திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
டோக்கியோவை நோக்கி செல்லும் ஹயபுஸா 60 என்ற புல்லட் டிரெயின். நூறு கிலோமீட்டருக்குக் கீழே அதன் வேகம் குறைந்தால் அதில் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்து ஊரே இரண்டாக மாறிவிடும். பயணிகளும் மடிந்து போவார்கள. இந்த அசம்பாவிதத்தை தடுக்க 100 கோடி பில்லியன் வரை பேரம் பேசப்படுகிறது. கொலை மிரட்டல் விடுக்கும் வில்லனிடம் இருந்து டிரெயின் காப்பாற்றப்பட்டதா அந்த வெடிகுண்டு என்ன ஆனது என்பது தான் புல்லட் ட்ரெயின் எக்ஸ்ப்ளோஷன் கதை.

நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தின் முடிவு இப்படித்தான் நடக்கும் என்பது தெரிந்தது தான். ஆனால், அதில் இருக்கும் முடிச்சுகளை சாமர்த்தியமாக ஹீரோ எப்படி நகர்த்தி சென்றார் என்பது சவாலாக இருக்கும். படத்தின் முதல் காட்சியிலேயே விறுவிறுப்போடு கதை நகர்கிறது. கதாப்பாத்திரத்தின் அறிமுகம் இல்லாமல் படம் தொடங்குகிறது. புல்லட் ட்ரெயின் எக்ஸ்ப்ளோஷன் படம் நகர நகர கதாப்பாத்திரங்களின் பெயர்கள் அறிமுகமாகிறார்கள். ஒரு கதாப்பாத்திரங்களை பார்க்கும்போது இவன்தான் வில்லன், இந்த நபர் இறந்துவிடுவார் என்ற உள்ளுணர்வு சொல்லும். ரசிகர்களை சந்தேகத்தோடு உலாவ செய்து கதையில் மாற்றத்தை கொண்டு வரும் ட்விஸ்ட்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும்.
தீவிரவாதி மிரட்டல்: நான் கேட்கும் 100 பில்லியன் பணத்தை அரசாங்கம் தர வேண்டாம். நாட்டு மக்களின் சொந்த பணத்திலிருந்து எனக்கு தர வேண்டும் என கெடு வைக்கிறான். அரசாங்கத்தை கேள்வி எழுப்புவது போலவே அவனது அதிகார மிரட்டல்கள் இருக்கிறது. பிறகு அந்த ரயிலில் பயணிக்கும் எழுத்தாளர் ஒருவர் பணத்தை மக்களிடம் இருந்து திரட்ட சமூகவலைதளம் ஒன்றை உருவாக்குகிறார். பிறகு இதில் இருந்து பணங்களை மக்கள் அனுப்பி வைக்கிறார்கள். அப்போது ஒரு அரசியல்வாதியை பார்த்து அந்த எழுத்தாளர், நான் சாதாரண மனிதன். நீங்கள் பதவியில் இருக்கும் அரசியல்வாதி, நீங்கள் செய்வதை நான் செய்துக்கொண்டிருக்கிறேன். உங்களை பழி வாங்க மக்கள் தான் கிடைத்தார்களா என டக்கு டக்கு என்று கேள்விகளால் அரசியல்வாதியை திணற வைக்கிறார். இந்த காட்சியை பார்க்கும் போது விஜயகாந்த் அரசியல்வாதிகளிடம் சண்டை போடும் காட்சிகள் நினைவுக்கு வந்து சென்றன. உலக அளவில் அரசியல்வாதிகளின் கோரமுகம் இப்படித்தான் இருக்கிறது என்பது இப்படத்தை பார்க்கும் போது உணர முடிகிறது.

பயணம் படத்தை பார்த்தவர்களுக்கு இப்படத்தில் வரும் சில காட்சிகள் நினைவூட்டலாம். குமரவேல் தீவிரவாதிகளை பார்த்து கேள்வி எழுப்புவது பின்பு சண்டை போடுவது என அதேபோன்ற காட்சிகளும் இப்படத்தில் இடம்பிடிக்கின்றன. அதையும் தாண்டி 100 கிலோ மீட்டர் குறைந்தால் சிதறும் டிரெயின் என்ற பயத்தோடு பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். தேவையில்லாத வாக்காய் தகராறுகளில் செலவிடாமல் இந்தச் சிக்கலிலிருந்து ரயிலை மீட்க அதிகாரிகள் படும் பாட்டை காட்டியதில் கவனத்தை பெறுகிறது இப்படம், இதில் பாதுகாப்பு அதிகாரியாக வரும் கசாகி தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பலமான வசனங்கள்: படத்திற்கு பலமாகவும் பாலமாக இருப்பது வசனங்கள் தான். ரயிலை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்ட பிறகு மக்கள் சாலைகளில் நடனம் ஆடுவது. மோசமடைந்த ரயில் பாதைகளை சரிசெய்ய போராடுவது என அடுத்தடுத்து வரும் காட்சிகள் உண்மையில் ஒரு கோர விபத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன் எடுக்க வேண்டிய தீர்க்கமான முடிவு தேவை என்பதை உணர்த்துகிறது இப்படம். இந்த ரயிலை ஓட்டும் பெண் ஒருவர் பேசும் வசனம் நிஜத்தை கண்முன்னே நிறுத்தியது. ஸ்பீடிங் கியரில் உள்ள கையை எடுக்க முடியாமல் மரத்துப் போய்விட்டது. ஒவ்வொரு விரலாக அதை விடுவிக்க முடியுமா என கேட்கிறார். கண்ணீர் விட்டு அழுக முடியாத குறையாக கைகளை தேட தாெடங்குவது போல உணர்வை அளித்தன.
பொய்யான உலகம்: எல்லாருக்கும் பிடிக்காது என்றாலும் அவர் குற்றம் செய்திருந்தாலும் இந்த ரயிலில் அவர் ஒரு பயணி. அவர் எனது பொறுப்பு என கூறும் நடத்துநர் அப்லாஸை பெறுகிறார். அந்த ரயிலில் பயணித்த மாணவி ஒருவர், அங்கு உயிரை கையில் பிடித்துகொண்டு பயணிக்கும் மக்களிடம் ,உங்களுக்கு பிடித்த பொய்யை நிஜம் என்றே நம்பி வாழ ஆரம்பிக்கும்போது தொடர்கிறது ஊழலும் சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையையும் உருவாகிறது. இந்த சிக்கலில் வெளியேற நான் சொல்ல வந்ததை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். இங்கிருந்துதான் மனிதர்கள் மீதான நம்பிக்கையே பொய்த்து போகிறது. உங்களுக்கு தெரிந்த உண்மை கூட சில நேரங்களில் பொய்யாக இருக்கலாம் என கூறும்போது அமைதியான சூழல் நிலவுகிறது.

அரசியல்வாதி: இந்தியாவில் மட்டும் தான் அரசியல்வாதிகள் இப்படி இருக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தோம். எங்கிருந்தாலும் எம்எல்ஏ முதல் அமைச்சர்கள் வரை ஊழல்வாதிகளாகவே இருக்கிறார்கள். அப்போ அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்வதில் தப்பே இல்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை இயக்குநருக்கு இந்திய படங்களின் தாக்கம் அதிகம் ஏற்பட்டிருக்கலாம். நெத்தி பொட்டில் அடித்தார்போல் கூர்மையான வசனங்களால் புல்லட் ட்ரெயின் எக்ஸ்ப்ளோஷன் திரைப்படம் கவனத்தை பெற்றிருக்கிறது.
மைனஸ்: வேகமாக ஓடும் ரயிலில் ஒரு தீவிரவாதி குண்டு வைத்திருக்கிறான். அவனிடம் இருந்து எப்படி மக்களையும் ரயிலையும் மீட்பது மட்டுமே படமாக இருக்கும். வேகமாக செல்ல வேண்டிய கதையில் ஒரு ஸ்பீட் பிரேக் போட்டது போல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. குண்டு வைத்த தீவிரவாதி ஏன் குண்டு வைத்தேன் என்பதை விளக்கும் போது அந்த காட்சி மனதில் பதியும் அளவிற்கு அழுத்தமானதாக இல்லாமல் போனது ஏமாற்றம். தீவிரவாதி கூறும் காரணம் வலுவாக இருந்திருந்தால் இன்னும் ஸ்பீடு எடுத்திருக்கலாம். டெக்னிக்கலாக இந்தப்படத்திற்கு என்ன தேவையோ அதை ஒளிப்பதிவாளரும், தொகுப்பாளரும் சரியாக செய்திருக்கிறார்கள்.
புல்லட் டிரெயின் படத்தையும் புல்லட் ட்ரெயின் எக்ஸ்ப்ளோஷன் என்ற கதையையும் இந்த படத்தில் இணைத்ததற்கான காரணம் சரியாக இருக்கிறது. அதைக் காட்சிப்படுத்திய விதம் தெளிவில்லாமல் அமைந்திருக்கிறது. வேகத்தை கூட்ட நினைத்த இயக்குநர் இந்த வேகத்தை சரிசெய்ய மறந்துவிட்டார். மேலும், ஸ்பீட், ஸ்பீட் 2, புல்லட் ட்ரெயின், பர்னிங் ட்ரெயின் போன்ற படங்கள் பிடித்தவர்களுக்கு இப்படமும் நிச்சயம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











