OTT: ஓடிடியிலும் இனி நயன்தாராவின் அன்னபூரணி ஓடாது.. இந்து அமைப்பினர் கண்டனம்.. அதிரடி நீக்கம்!
சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த அன்னபூரணி படம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தியதாக அந்த படக்குழுவினரின் மீது சமீபத்தில் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ராம பக்தர்கள் வட இந்தியாவில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்திய நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறது.
வரும் ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எல்லாம் கலந்து கொள்கிறார். இந்நிலையில், ராமர் குறித்து சர்ச்சை கருத்துக்களை இந்த படம் பேசுவதாக சர்ச்சை வெடித்தது.

தியேட்டரில் ஓடல: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அன்னபூரணி திரைப்படம் வெளியான போது சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக தியேட்டரில் அந்த படம் ஓடவே இல்லை. இந்நிலையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான படத்தை நாடு முழுவதும் பலர் பார்த்தனர். அதன் பின்னர் தான் இந்த சர்ச்சை வெடித்தது.
நயன்தாரா மீது வழக்கு: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 75வது படமான அன்னபூரணி ஓடிடியில் சமீபத்தில் வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்த ராம பக்தர்கள் ராமர் அசைவ பிரியர் என்றும் பிராமண வீட்டுப் பெண் அதுவும் கோயிலுக்கு பிரசாதம் செய்துக் கொடுக்கும் நபரின் மகள் அசைவம் சமைப்பது, சாப்பிடுவது மற்றும் இஸ்லாமியரான ஜெய்யை காதலிப்பது என அமைக்கப்பட்ட திரைக்கதையில் எப்படி நடித்தார் என்கிற சர்ச்சை வெடித்துள்ளது. இந்து அமைப்பினர் நயன்தாரா, ஜெய், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் திறக்கும் நேரத்தில் இந்த வழக்கில் நயன்தாரா வசமாக சிக்கி உள்ளார் என்றும் அவருக்கு எதிராக வட இந்தியாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
மன்னிப்பு கேட்ட ஜீ ஸ்டூடியோஸ்: நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து இந்து மதத்தினரை டார்கெட் செய்து படங்களை வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு நயன்தாராவுக்கும் அவரது அன்னபூரணி படத்துக்கும் எதிராக சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், அந்த படத்தை தயாரித்த ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தற்போது மத நம்பிக்கை புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திடம் இருந்து படத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
ஓடிடியில் இருந்து நீக்கம்: பல கோடி ரூபாய்க்கு நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜீ ஸ்டூடியோஸ் படத்தை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அந்த படத்தை நீக்கி உள்ளது. இதனால், படக்குழுவுக்கு பயங்கர நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். நெட்பிளிக்ஸில் நயன்தாராவின் திருமண வீடியோ ரிலீஸ் ஆகாமல் தடைப்பட்டு போனது. இந்நிலையில், தற்போது வெளியான அன்னபூரணி படமும் நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











