பெரிய ஹீரோக்களை நம்பி மோசம் போன நெட்பிளிக்ஸ்.. ஓடிடியில் வியாபாரமாகாத படங்கள்!
சென்னை: விஸ்வரூபம் படம் பிரச்சனையை சந்தித்த போது, கமல் ஓடிடியில் படத்தை வெளியிடுவேன் என்று சொன்னதும். கமல் என்ன சொல்கிறார். அது என்ன ஓடிடி என பலரும் யோசித்தார்கள். ஆனால், கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதும். ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. முதலில் ஒன்று இரண்டு என ஓடிடி தளங்கள் தற்போது ஏகத்திற்கும் அதிகரித்துவிட்டது.
இதனால், பெரிய நடிகர்களின் படத்தை நான், நீ என போட்டி போட்டு பெரும் தொகை வாங்கி வருகின்றனர். தியேட்டரில் வெளியான பின் நான்கு வாரம் கழித்து ஓடிடியில் படத்தை வெளியிடலாம் என்பதால், பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்களின் படம் என்றால், படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் போதே, பெரிய ஓடிடி தளங்கள், அதிக தொகையை கொடுத்து படத்தை வாங்கி விடுகின்றனர். தியேட்டரில் படம் ஒடி விட்டால், அந்த படம் நிச்சயம் ஓடிடியில் போட்ட பணத்தை எடுத்துவிடும். ஆனால், தியேட்டரில் காத்து வாங்கிய படத்தை ஓடிடியில் போட்டால், கிணற்றில் போட்ட கல்லாகத்தான் இருக்கும். அப்படித்தான் பெரிய ஓடிடி நிறுவனமாக நெட்பிளிக்ஸ் பெரிய நடிகர்களின் படத்தை பெரும் தொகைக்கு வாங்கி தற்போது நஷ்டத்தை சந்தித்து உள்ளது.

மோசம் போன நெட்பிளிக்ஸ்: அஜித் நடித்த விடாமுயற்சி படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து வாங்கி விட்டது. ஆனால், படம் தியேட்டரில் வெளியாகி பெரும் தோல்வி அடைந்தது. அதே போல, சூர்யா நடித்த ரெட்ரோ படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தியேட்டரில் ஓடவில்லை. இதனால், நெட்பிளிக்ஸ் மணிரத்னம் இயக்கி கமல், சிம்பு நடித்த தக் லைஃப் படத்தை பெரிதும் நம்பி இருந்தது. ஆனால், அந்த படமும் முதல் நாளே மோசமான விமர்சனத்தை பெற்று தோல்வி அடைந்தது. அஜித், கமல், சூர்யாவின் படங்களால் அதல பாதாளத்திற்கு நெட்பிளிக்ஸ் சென்றுவிட்டதால், தக் லைஃப் படத்திற்கு பேசிய தொகையை தரமுடியாது என நெட்பிளிக்ஸ் முரண்டுபிடித்தது.
பெரும் நஷ்டம்: தக் லைஃப் படத்தின் ஓடிடி உரிமையை ரூ.130 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ், ரூ. 90 கோடி தான் தர முடியும் என்று பிடிவாதமாக இருந்துள்ளது. பின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ரூ. 110 கோடியில் செட்டிலாகியிருக்கிறார்களாம். இந்த மூன்று படங்களையும் நம்பி நெட்பிளிக்ஸ் தங்களது கல்லாவை கரைத்துவிட்ட, இந்த நிறுவனம், இதுக்கு மேலையும் பெரிய நடிகர்களின் படம், பெரிய இயக்குநர்களின் படம் என, கதையை கேட்டாமல் படத்தை வாங்கினால், தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு போக வேண்டியது தான் என்பதை புரிந்து கொண்டு, இப்பொழுது தெளிவான முடிவுக்கு வந்துவிட்டனர். முழு படத்தையும் பார்த்த பின்பு தான் விலை பேசுவோம் என முடிவு எடுத்துள்ளனர்.
வியாபாரம் ஆகாத படங்கள்: இதனால், இந்த ஆண்டு வெளியாக உள்ள ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் சூர்யாவின் கருப்பு திரைப்படமும், கார்த்தி நடித்துள்ள சர்தார் 2, ஜெயம் ரவியின் சீனி, சித்தார்த் நடித்துள்ள 3BHK போன்ற படங்கள் இன்னும் வியாபாரமாகாமல் உள்ளன. இந்த படங்களை நெட்பிளிக்ஸ் வாங்க முன் வரவில்லையாம். 3 BHK திரைப்படம் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என படக்கழு அறிவித்திருந்த நிலையில், நெட்பிளிக்ஸ் அந்த படத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறது. நெட்பிளிக்ஸின் இந்த முடிவு தயாரிப்பாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











