OM Kaali Jai Kaali: பக்தி பரவசத்தோட தசரா ஆட்டம்.. கொலைக்கு அஞ்சாத கிராமம்.. பரபரக்கும் ட்விஸ்ட்
சென்னை: விலங்கு வெப் தொடருக்கு பிறகு விமல் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் சுட சுட தயாராகி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. இதில் புகழ், பாவனி ரெட்டி, குயின்சி, கஞ்சா கருப்பு, ஜி.வி.குமார், திவ்யா துரைசாமி, ஷிவின் கணேசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த சீரிஸில் 5 எபிசோடுகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஓம் காளி ஜெய் காளி பார்வையாளர்களை கவர்ந்ததாத, சோதித்ததா என்பதை இதில் காணலாம்.
ஓம் காளி ஜெய் காளி கதை: தசரா பண்டிகை கொண்டாடும் நேரத்தில் நிறைமாத கர்ப்பிணி கிணற்றில் விழுந்து கிடக்கிறார். அந்த கிணற்றுக்குள் சாமி வேடமிட்டு பூஜை செய்ய செல்கிறார் விமல். பிடாரி அம்மன் கிணற்றில் கர்ப்பிணி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடையும் விமல், அப்பெண்ணை காப்பாற்றுகிறார். கிணற்றுக்குள் விழுந்த பெண் யார்?, வனதேசம் கிராம மக்களுக்கும் கர்ப்பிணி பெண்ணிற்கும் என்ன சம்மந்தம், அவரை கொலை செய்ய வரும் ரவுடிகள் யார் என்பதை சஸ்பென்ஸ் கலந்த கதையுடன் இந்த வெப் தொடரை இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கியுள்ளார்.

நடிகர் விமல், பாவனி ரெட்டி, புகழ் என அனைவரும் தங்களது கதாப்பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். விமல் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவராகே வாழ்ந்திருக்கிறார். தசரா பண்டிகையை வைத்து வந்த மகான், சுழல், சுழல் 2 வெப் தொடரை போன்று ஓம் காளி ஜெய் காளி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் வனதேசம் கிராமத்தை சுற்றியே திரைக்கதை அமத்திருக்கின்றனர். ரத்தம் தெறிக்க வரும் முதல் கொலை சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. இக்கதை 80களில் நடப்பது போன்று எடுக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி பேச்சு: இயக்குநர் ஹரி அல்லது நெல்லையை மையப்படுத்தி வரும் படங்களில் மக்களை ரசிக்க வைப்பதற்காக ஏலே என்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெறுவது உண்டு. ஆனால், ஓம் காளி ஜெய் காளி தொடரில் அதுபோன்ற சித்தரிப்புகள் இல்லை. மிக இயல்பாக எதார்த்த வாழ்வியலோடு திருநெல்வேலி மக்களின் வட்டார வழக்கை இயக்குநர் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக வில்லன் குடும்பங்கள் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் அவர்கள் பேசும் வழக்கு வட்டாரமும் கதையில் கூடுதல் பலத்தை தருகிறது.

வில்லன்கள்: கம்மட்டிபாடத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மணிகண்டன் ஆச்சாரி, பேட்ட படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் தோன்றினார். பின்பு தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஓம் காளி ஜெய் காளியில் இவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ஈரக்கொலையை நடுங்க வைக்கிறது. குமரவேல் சாந்தமான முகம், மிரட்டும் பார்வையால் வில்லத்தனத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். எம்எல்ஏ-வாக வரும் பவன் பயந்த சுபாவம் பெண்கள் மீது சபலம் என மிகச் சாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமாக அவரது கதாப்பாத்திரம் மிரட்டும் வில்லத்தனம் எதிர்பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார்.
காத்தாடி - கூத்தார்: காத்தாடியாக வரும் சீமா, கூத்தாராக வரும் ஆர்.எஸ்.பாலாஜி ஆகிய இருவரும் மிகச் சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள், ராஜதுறையிடம் இருந்து தப்பி சென்ற நீலாவை கண்டுபிடிக்க வனதேசம் தேடி செல்லும் காத்தாடி -கூத்தார், மல்லிகா என்ற பெயரோடு அந்த கிராமத்தில் இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். பின்னர், நீலாவின் குழந்தையை கொல்ல திட்டமிடும் நேரத்தில் அவர்களது மகளின் நிச்சயதார்த்தம் நெருங்குகிறது. கூத்தார் இறந்தது தெரியாமல் இருக்கும் காத்தாடி (சீமா) தனது மகளின் நிச்சயதார்த்தத்தை நடத்த முடியாமல் திணறுகிறார். கணவன் இறந்த செய்தியறிந்து தம்புரானையும், ராஜதுரையையும் வனதேசம் மக்களோடு சேர்ந்து பழிவாங்க துடிக்கிறார். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் இரவுக்கே பயம் தரும் நடிப்பை தந்திருக்கிறார் காத்தாடி சீமா.

பிக்பாஸ் குயின்சி: ஓம் காளி ஜெய் காளி தொடர் முழுக்கு பிக்பாஸ் குயின்சியை சுற்றியே தொடர்கிறது. நீலாவும் (குயின்சி), காதலனும் தனது அண்ணன்களிடமிருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள். அப்போது நீலா (குயின்சி) காதலன் எரித்து கொல்லப்படுகிறான். பிறகு வனதேசம் மக்களோடு நீலா மல்லிகா என்ற பெயரில் தனது மகளோடு வாழ்ந்து வருகிறார். இவரை சுற்றியே கதை நகர்வதால் அதன் ஆழம் தெரிந்து குயின்சி நடிப்பை தந்திருக்கிறார்.
கதையின் சிறப்பு: குலசேகரப்பட்டினத்தில் இருக்கும் காளி அம்மனுக்காக தசரா எடுக்கும் கிராம மக்கள் விரதம் இருந்து எப்படி தங்களது காணிக்கையை செலுத்துகிறார்கள். விமல், புகழ், தங்கதுரை ஆகியோர் வேஷம் கட்டி ஆடும் காட்சிகளை பார்க்கும் போது நேரில் பார்த்த அனுபவத்தை தருகிறது. முதல் 2 எபிசோடுகளில் தசரா விழா எதற்காக நடத்தப்படுகிறது. முத்தாரம்மன் கோயிலின் சிறப்பை வரலாற்றோடு மக்களுக்கு புரிய வைக்க முயற்சித்த விதத்தை பாராட்டலாம். கிராமத்து பெண்ணாக வரும் பாவனி ரெட்டி தனது காதலனை கரம் பிடிப்பதற்காக கையிலேயே தாலியோடு வலம் வருகிறார்.
முத்தாரம்மனுக்கு வேஷம் போடுகிறவர்கள் யாரும் சாதி பார்ப்பதில்லை. எல்லோரும் சமம் என ஊர் பூசாரியாக வரும் ஜி.வி.குமார் சம்மட்டி அடி அடிக்கிறார். முடிந்தவரை தனது கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை அளிக்க முயற்சித்திருக்கிறார். 40 வயது ஆனாலும் திருமணம் ஆகாமல் இருக்கும் கஞ்சா கருப்பின் கதாப்பாத்திரம் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.

மைனஸ்: ஒரு தெய்வீக சக்தி எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துகிறது என்று நம்மை நம்ப வைக்க மிகவும் கடினமாக முயற்சிக்கும் போது கதை தடுமாறுகிறது. மூக்கனின் (புகழ்) வெளிநாட்டு வேலை கனவு, அதற்காக அவர் மதுவிலக்கு சபதம் எடுத்தாலும், ஆர்.எஸ். சிவாஜியின் கூத்தரின் மரணம், அல்லது அடுத்தடுத்த நிகழ்வுகள் என எதுவாக இருந்தாலும், நிகழ்வுகளின் இயற்கையான வரிசையையோ அல்லது தெய்வீக அதிசயத்தையோ எதுவும் நியாயப்படுத்தவில்லை. கிராம மக்கள் பழிவாங்கும் காட்சிகள் ஒரு பக்கம் நடந்தாலும் ரத்தக்காட்சிகள் அதிகம் இடம்பெறுவது முக சுழிப்பை ஏற்படுத்துகிறது.
சபாநாயகர் அப்பாவு: தசராவிற்கு வேஷம் கட்டி ஆடும் நேரத்தில் மழை வந்து மக்களின் வேண்டிக்கையை சீர்குலைத்து விடும் என ஊர் பூசாரி பேசிக்கொண்டிருப்பார். அப்போது மழையை தடுத்து நிறுத்த கஞ்சா கருப்பு தேங்காய் வேஷம் போடுவார். அப்போது மழை இல்லைனா கஷ்டம் என ஒரு பெண் கூற அப்போது, அப்பாவு எம்எல்ஏ தான் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி தண்ணீர் வருவதற்கு காரணம். இதனால்தான் அவரை தாமிரபரணி நாயகன் என்று அழைக்கப்படுகிறார். ஓம் காளி ஜெய் காளி வெப் தொடரிலும் விமல் வசனமாக சொல்லியிருப்பார். விலங்கு வெப் தொடருக்கு பிறகு விமலுக்கு சிறப்பான வெற்றியாக ஓம் காளி ஜெய் காளி அமைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











