ஒரு தெக்கன் தள்ளு கேஸ் சினிமா விமர்சனம்… ஓடிடி ரசிகர்களுக்கான கிளாஸிக் திரை விருந்து!
சென்னை: மலையாளத்தில் ஸ்ரீஜித் இயக்கிய 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' திரைப்படம் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்ற இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஈகோவையும் வன்மத்தையும் எளிமையான அழகியலோடு திரை மொழியாக கொண்டு வெளியாகியுள்ள 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்.'

சிறுகதையில் இருந்து திரையில்
எழுத்தாளர் இந்துகோபனின் 'அம்மிணி பிள்ளை வெட்டு கேஸ்' என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' திரைப்படம். பிஜு மேனன், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஶ்ரீஜித் இயக்கியுள்ளார். இதுதான் இவருக்கு முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் அடர்த்தியான பாத்திரங்களும் வீரியமான கதையும் ஒன்றிணைந்தால் இதுபோன்ற கிளாஸிக்கான திரைப்படங்கள் சாத்தியமாகும் என்பதற்கு 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' சான்றாகும்.

அழகியலோடு திரை பயணம்
கேரளாவின் வர்கலா அருகேயுள்ள சிறு கிராமத்தை பின்னணியாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. படம் மொத்தமும் அந்த சிறிய கடற்கரை கிராமத்திற்குள் அகப்பட்டுக்கொண்டாலும், காட்சிகளும் அதன் போக்கும் கொஞ்சம் கூட ரசிகர்களை அயர்ச்சிக்குள்ளாக்கவில்லை. ஒரு மினி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து ரவுண்டு அடிப்பதைப் போல கேமரா அங்கேயே தான் சுற்றிக் கொண்டு இருக்கிறது. ஆனால், திரைக்கதையின் பாய்ச்சலில் மகா யுத்தமே நடந்தேறிவிடுகிறது.

ஈகோவும் பின்னே வன்மும்
அம்மிணி பிள்ளையான பிஜு மேனனுக்கும், ஊதாரியாக சுற்றித் திரியும் ரோஷன் மேத்யூக்கும் இடையில் ஏற்படும் ஈகோவும், அதன் விளைவுகளும் தான் படத்தின் ஒருவரிக் கதை. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் 'டிரைவிங் லைசென்ஸ்', 'அய்யப்பனும் கோஷியும்' ஆகிய படங்கள் இதேமாதிரியான ஈகோ மோதலை பின்னணியாக வைத்து மலையாளத்தில் வெளியாகியுள்ளன. அப்படியிருக்கும் போது மீண்டும் அதே ஜானரில் ஒரு கதையை கையில் எடுப்பதே கொஞ்சம் சவாலான காரியம் தான். ஆனாலும், கொஞ்சமும் பிசிறு தட்டாமல் தூள் கிளப்புகிறது 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்.'

வன்மம் தானே மனித மனம்
அம்மிணி பிள்ளையான பிஜு மேனன் ஒரு பிரச்சினையில் பொடியன் ரோஷன் மேத்யூவை அடித்து விடுகிறார். அந்தச் சம்பவம் கிராம மக்கள் அனைவருக்கும் தெரியவர, அதனால் ரோஷன் மேத்யூவுக்கு அவமானமாக போய்விடுகிறது. அதுமட்டுமா! அவன் ஆழ்மனம் முழுவதும் பிஜூ மேனனை பழிவாங்க வேண்டும் என்ற வன்மத்தை சூடிக் கொள்கிறது. ஒருகட்டத்தில் பொடியனும் அவனது நண்பர்களும் சேர்ந்து அம்மிணி பிள்ளையை வெட்டி விடுகிறார்கள். அடர் இருட்டில் கடற்கரையோரம் நடக்கும் இந்த சண்டைக் காட்சி சிலிர்க்க வைக்கிறது. பிஜு மேனன் ஒரு யானையைப் போல பொடியனையும் அவனது கூட்டத்தையும் தூக்கிப் போட்டு பந்தாடுகிறார். தன்னை வெட்டியவர்கள் யார் என தெரிந்தும் போலீஸாரிடம் கேஸ் கொடுக்காமல் விட்டுவிடுகிறார் பிஜு மேனன். அது ஏன், அதன் பின்னர் அவர் பொடியனையும் அவனது நண்பர்களையும் பிஜு மேனன் பழிவாங்கினாரா என்பது தான் மீதிக் கதை.

திரைக்கதையில் மேஜிக்
ஈகோவும் வன்மமும் முற்றிவிட்டால் அங்கே எதிரியின் உயிருக்கே உத்தரவாதம் கிடையாது. ஆனால், பிஜு மேனனிடம் இருப்பது அவ்வளவு பெரிய வன்மமோ பழிவாங்கும் திட்டமோ இல்லை. இந்த இடத்தில் தான் ரொம்பவே கிளாஸிக் தரத்துடன் நகர்கிறது திரைக்கதை. பிஜு மேனனின் முடிவு இதுதான் என தெரிந்ததும், பொடியனின் நண்பர்கள் வரிசைக் கட்டி வந்து தங்களது கணக்கை தீர்த்துவிட்டு போகும் இடமெல்லாம் குபீர் சிரிப்புக்கு பஞ்சமில்லாத காட்சிகள். போலீஸாக வரும் குஞ்சுபக்கி, குஞ்சுகுஞ்சு, பிரபாக்குட்டன், லோபேஸ் - பொடியனின் நண்பர்களாக நடித்துள்ள இவர்களின் கேரக்டர்கள் யதார்த்தமான வெள்ளந்தி மனிதர்களின் சாயல்களை அப்படியே பிரதிபலிக்கிறது. முதலில் ரோஷன் மேத்யூவுடன் சேர்ந்து பிஜு மேனனை தீர்த்துக் கட்ட பொங்கி எழுவதும், பின்னர் அடிவாங்கி நொந்துப்போவதும் காமெடி மஜா.

அழகிய காதல்
தம்பதிகளான பிஜு மேனனுக்கும் பத்மப்ரியாவுக்கும் இடையேயான காதல் காட்சிகள், திரையின் பின்னணியில் ஜிலீர் விடும் கடற்கரை காற்றின் இதத்துக்கு ஈடாக ரசிக்க வைக்கிறது. சாமியாரின் பேச்சைக் கேட்டு பிஜு மேனன் அவமானப்படுவதும், அடுத்தக் காட்சியிலேயே பத்மப்ரியா வந்து அவரை முறுக்கிவிட்டதும் நடக்கும் வேடிக்கையும், ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமாகும் என்பதைப் போன்ற ரகளையானக் காட்சி. இருவருக்குமான காதலின் மையப்புள்ளியாக இந்தக் காட்சியை சொன்னால், க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் ரோஷன் மேத்யூவுக்கான கணக்கை பிஜு மேனனுக்குப் பதிலாக பத்மப்ரியா தீர்க்கும் இடம் இன்னும் தரம். அதேபோல், விதிகளை மீறிய விடலைப் பருவத்து காதலின் திண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு விடையாக ரோஷன் மேத்யூ, நிமிஷா சஜயன் இருவரும் சந்திக்கும் காட்சிகளைக் கூறலாம்.

மதம்கொண்ட யானை
'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் மதம்கொண்ட யானைப் போல மிரட்டிய பிஜு மேனன், இந்தப் படத்திலும் அதே வீரியத்துடன் பொளந்து கட்டுகிறார். சந்தையில் அசால்டாக ராஜநாகம் பாம்பை பிடித்து சுழட்டும் காட்சியில் அங்கிருக்கும் கூட்டத்தோடு சேர்ந்து ரசிகர்களும் விழுந்தடித்து ஓட வேண்டியிருக்கும். ஆக்சன், காதல், பிடிவாதம், வஞ்சம், வன்மம் என அத்தனை உணர்வுகளையும் வெற்றிலையை மென்று துப்புவதைப் போல எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடித்து பிரமிக்க வைக்கிறார். பொடியன் கேரக்டரில் ரோஷன் மேத்யூவின் நடிப்பும் படத்துக்கு பெரிய பலமே. முகத்தில் வன்மத்தை வெளிக்காட்டிக் கொண்டு, உள்ளுக்குள் தொடை நடுங்கியாக பிஜு மேனனுக்கு பயந்து ஒளிந்துகிடப்பதெல்லாம் யதார்த்தத்தை மீறாத அழகியல்.

பத்மப்ரியா, நிமிஷா சஜயன்
பத்மப்ரியாவும் நிமிஷா சஜயனும் வரும் காட்சிகளும், அவர்களுக்கு இடையேயான உரையாடல்களும் மிக முக்கியமானவை. பெண்களின் உணர்வுகளையும் அவர்களது இன்னொரு பக்கத்தையும் விரசம் இல்லாமல் பகிர்ந்துக்கொள்ளும் வசனங்கள் எல்லாமே கதைக்குள் சரியாக ஒன்றி நிற்கிறது. இவர்கள் தவிர இன்னும் நிறைய பாத்திரங்கள் 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' படத்தை உயிர்ப்புடன் தாங்கியுள்ளனர். கள்ளுக் கடையில் நடக்கும் சண்டைக் காட்சியில் மட்டும் பிஜு மேனனுக்கு கொஞ்சம் ஓவர் ஹீரோயிசம் இருப்பதாகத் தோன்றுகிறது. மற்றபடி 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' திரைப்படம் அட்டாகசமான வாழ்வியலோடு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும் என நம்பலாம். மதுநீலகண்டனின் ஒளிப்பதிவு சிறப்பான காட்சி அனுபவத்தை தருகிறது. பாடல்கள், பின்னணி இசை, எடிட்டிங், கலை என அனைத்துமே 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' படத்திற்கான கிளாஸிக் டச்சை கொடுத்துள்ளது. இயக்குநர் ஸ்ரீஜித்துக்கு இந்தப் படம் கொடுத்துள்ள அறிமுகமும் அடையாளமும் இனிவரும் அவரின் படைப்புகளுக்கு கண்டிப்பாக வலு சேர்க்கும். 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' ஓடிடி ரசிகர்கள் தவற விடக்கூடாத சிறப்பான திரைப்படம்.

ஓடிடி ரசிகர்களுக்கான படம்
இயக்குநர் ஸ்ரீஜித்துக்கு இந்தப் படம் கொடுத்துள்ள அறிமுகமும் அடையாளமும் இனிவரும் அவரின் படைப்புகளுக்கு கண்டிப்பாக வலு சேர்க்கும். இன்றைய காலக்கட்டத்தில் நடப்பது போல் இந்தக் கதையை எடுத்திருந்தால் இந்தப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்காது. காரணம் சாதாரண சம்பவத்தை சுற்றியே கதை நகர்ந்தாலும், அதன் பின்னணியில் 1980 களில் நடப்பதாக இருக்கும் காட்சி அனுபவங்கள் தான், ரசிகர்களை கட்டிப்போடுகிறது. 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' ஓடிடி ரசிகர்கள் தவற விடக்கூடாத சிறப்பான திரைப்படம்.


Click it and Unblock the Notifications











