OTT Gem: பட்டியலின இந்துவுக்கும்.. இஸ்லாமியருக்கும் நடக்கும் கொடுமைகள்.. Homebound விமர்சனம்!
சென்னை: இயக்குநர் நீரஜ் கைவான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர் மற்றும் விஷால் ஜெத்வா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்குள் நுழைந்திருக்கும் படமான Homebound திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி உலகளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
12த் ஃபெயில் படத்தை போல தமிழ் டப்பிங்கில் இல்லையென்றாலும், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த படம் காணக்கிடைக்கிறது. இந்தி அல்லது ஆங்கிலம் என எந்த மொழியில் பார்த்தாலும், கடைசி வரை திரையுடன் ரசிகர்களை கண்டிப்பாக இந்த ஹோம்பவுண்ட் பவுண்ட் (கட்டிப்போட்டு) செய்து விடும்.

இந்தியாவில் சாதாரணமாக பட்டியலின இந்து இளைஞர் ஒருவரும், அவரது நண்பரான இஸ்லாமியரும் வாழ்வதற்கு எவ்வளவு சிரமங்களை சந்திக்கின்றனர். சமூக அவமானங்களில் இருந்து மீள்வதற்காக போலீஸ் வேலைக்குச் சேர முயற்சி செய்வதும், அது முடியாமல் போக, கொரோனா லாக்டவுனில் அவர்களுக்கு என்ன நேர்கிறது என்பதை சொல்வது தான் இந்த ஹோம்பவுண்ட் திரைப்படம்.
ஹோம்பவுண்ட் கதை என்ன?: சந்தன் குமார் வால்மிகி (விஷால் ஜெத்வா). முகமது ஷோயப் அலி (இஷான் கட்டர்) இருவரும் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். போலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக அரசு தேர்வுக்கு எழுத செல்வார்கள். ஆனால், பட்டியலின சமூகத்தை சார்ந்தவன் என்பதால் கோட்டாவில் இடம் பிடிக்க நினைக்கிறாயா என ஒரு அதிகாரி அசிங்கப்படுத்துவார். இருவருக்கும் அரசு வேலை கிடைக்காத சூழல் உருவாக குடும்ப கஷ்டத்தை போக்க சந்தன் அப்பாவுக்கு பதிலாக சூரத்துக்கு வேலைக்குச் செல்வார். சேல்ஸ் ரெப்பாக வேலை பார்க்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஷோயப் அலியை ஒரு பார்ட்டியின் போது உயர் அதிகாரிகள் கிண்டலாக கலாய்க்க அந்த வேலையில் இருந்து வெளியேறி தனது நண்பன் வேலை செய்யும் இடத்துக்கே வந்துவிடுவான்.
திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட ஃபேக்டரியை இழுத்து மூடிவிடுவார்கள். சொந்த ஊருக்குச் செல்ல 1200 கி.மீ., பயணிக்க வேண்டும். இருவரும் மீண்டும் வீடு திரும்பினார்களா? அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பது தான் ஹோம்பவுண்ட் படத்தின் கதை.

ஓடிடி ஜெம்: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த ஆண்டு வெளியான பல மொக்கையான பெரிய பட்ஜெட் படங்களுக்கு இடையே ஒரு ஜெம்மாக வந்திருப்பது தான் ஹோம்பவுண்ட். ஜான்வி கபூருக்கு இந்த படத்தில் பெரிதாக வேலையில்லை. சந்தனை காதலிக்கும் காதலியாக மட்டுமே வந்து செல்கிறார். ஆனால், இஷான் கட்டர் மற்றும் விஷால் ஜெத்வா தான் படத்தின் உயிர்நாடியே.
சாமானிய மக்கள் எங்கெல்லாம் புறக்கணிக்கப்படுகிறார்கள், அவர்கள் அனுபவிக்கும் உண்மையான வலி மற்றும் வேதனையை ஆழமாகவும் அழுத்தமாகவும் இந்த படம் சொல்லியதால் தான் இன்று ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வானது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை இஸ்லாமியர் இந்தியாவுக்கு ஆதரவாக பார்த்தாலும், அந்த போட்டி வெற்றிப் பெற காரணமாக ஒரு இஸ்லாமியர் இருந்தாலும், அவன் டீம் தோத்துடுச்சுன்னு வருத்தத்தில் இருப்பான் என கலாய்க்கும் இடத்தில் இஷான் கட்டரின் நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்த பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த வலியை படம் எடுத்துக் கூறியுள்ள விதமும் கண் கலங்க வைக்கிறது. கண்டிப்பாக நேரமிருந்தால் ஓடிடியில் ஹோம்பவுண்ட் படத்தை ஒருமுறை பார்த்து விடுங்கள். நிச்சயமாக சினிமா மொழிக்கு முன்பாக எந்த மொழியும் ஒரு தடையாக இருக்காது. படம் நெடுகிலும் காட்டப்படும் அம்பேத்கர் புகைப்படம் ஒரு மிகப்பெரிய சமூக குறியீடாக மாறி நிற்கிறது.


Click it and Unblock the Notifications











