OTT Review: பேயுடன் கல்யாணம்னு தெரியாம வந்து சிக்கும் ஹீரோயின்.. தி இன்விடேஷன் ஓடிடி விமர்சனம்!
சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏகப்பட்ட ஹாரர் படங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில், ரசிகர்களை அதிகம் கவர்ந்த பேய் படங்களில் ஒன்றுதான் 'தி இன்விடேஷன்'. அப்பா சிறு வயதிலேயே இறக்க, அம்மாவும் சமீபத்தில், கேன்சர் நோயால் உயிரிழந்து விடுகிறார். பெரிதாக வருமானம் எல்லாம் இல்லாமல் தனியாக வாழ்ந்து வரும் ஹீரோயினுக்கு நீங்க ராஜ குடும்பத்தை சேர்ந்தவங்க. உங்க தூரத்து சொந்தக்காரங்க எல்லாம் கூடிய சீக்கிரமே நடக்கப் போற பெரிய திருமண நிகழ்ச்சிக்காக காத்திருக்காங்க. நீங்களும் வரீங்களான்னு நைஸா பேசி ஹீரோயினை அவருக்கே தெரியாமல் அவரது திருமணத்துக்கு கூட்டிக் கொண்டு போகின்றனர்.
சாதாரண வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த எவிக்கு (நாதாலியா இமானுவேல்) தனது அம்மா ராஜ குடும்பத்தை சேர்ந்தவரா என்கிற ஆச்சர்யத்துடன் யாருக்கோ நடக்கப் போற திருமணத்துக்கு விருந்தினராகத்தானே போகணும். சரி போயிட்டு வருவோம் என நினைத்து கிளம்ப, அங்கே அவருக்கு ஏகப்பட்ட திகில் அனுபவங்கள் அடுத்தடுத்து காத்திருக்கிறது.

படம் ஆரம்பத்தில் இருந்தே டாப் கிளாஸ் ஹாரர் படமாக செல்ல, கடைசி வரை அங்கே இருக்கும் மனிதர்கள் எல்லாம் சாமானியர்கள் போல தோற்றமளிக்க கிளைமேக்ஸ்க்கு முன்னதாக அவர்களின் விஸ்வரூபம் ஹீரோயினுக்குத் தெரிய வர அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கிளைமேக்ஸில் படம் முடிய சில நிமிடங்களுக்கு முன்பு வரை ஆடியன்ஸ் பல்லைக் கடித்துக் கொண்டு வேறு ஏதாவது பேய் வந்து காப்பாற்றினால் தான் உண்டு என்கிற நிலைமைக்கே சென்றுவிடுவார்கள். ஆனால், படத்தை இயக்கிய பெண் இயக்குநரான ஜெசிகா எம். தாம்ப்சம் "இருங்க பாய்" என்பது போல ஒரு அட்டகாசமான கிளைமேக்ஸை வைத்து படத்தை முடித்துள்ளார்.

தி இன்விடேஷன் கதை: ஜெசிகா எம். தாம்சன் இயக்கத்தில் நதாலியா இமானுவேல், தாமஸ் டார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் தான் தி இன்விடேஷன். படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண் திருமணம் செய்துக் கொள்ளாமல் அந்த டிராகுலாவிடம் இருந்து தப்பிக்க இசைக்கருவியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொள்வார்.
அதன் பின்னர், பல வருடங்கள் கழித்து அந்த டிராகுலா தனக்கு ஏற்ற பெண்ணை வலை வீசி தேடி தன்னுடைய ஆள் மூலமாக சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு வருவது போல கூட்டிக் கொண்டு வந்து, ஹீரோயினிடம் அந்த இடத்துக்கே சொந்தக்காரன் என்றும் ஆசை வார்த்தைகளை பேசி காதல் வலையில் வீழ்த்தி அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியில் திருமண அறிவிப்பை அறிவிக்கும் போதுதான் உண்மையான ராட்சத ரூபம் வெளியே வரும். 400 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அந்த டிராகுலாவிடம் இருந்து ஹீரோயின் எப்படித் தப்பித்தார் என்பது தான் இந்த தி இன்விடேஷன் படத்தின் கதை.

பார்க்கலாமா? வேண்டாமா?: இரவு நேரத்தில் பார்த்தால் எஃபெக்ட்ஸ் எல்லாம் செம சூப்பராக இருக்கும். திருமண நிகழ்ச்சிக்காக வேலைக்கு வெளியே இருந்து அழைத்து வரப்படும் பணிப் பெண்களை எல்லாம் பேய் வேட்டையாடும் காட்சிகள் எல்லாமே திகிலை கிளப்பிவிடும். ஹீரோயினின் அறையில் நடக்கும் அமானுஷ்யங்கள், அதிலிருந்து மெயின் வில்லனே அவரை பாதுகாப்பது போல செய்து காதல் வலையில் விழ வைப்பது போன்ற காட்சிகளை எல்லாம் ரசிகர்களை அப்படியே நம்ப வைத்துவிடுவார்கள். ஒரு சில நிர்வாணக் காட்சிகள் இருந்தாலும், பெரிதாக எக்ஸ்போஸ் செய்யாத விதமாக கதைக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள நிலையில், ஹாரர் விரும்பிகள் தாராளமாக இந்த படத்தை பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications











