Parasakthi OTT Release: 8 வாரம் கழிச்சுன்னு சொன்னாங்க.. பராசக்தி ஓடிடி ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான பராசக்தி திரைப்படம் ஓடிடிக்கு உடனடியாக எல்லாம் வராது என்றும் 8 வாரங்கள் கழித்து தான் வரும் என்றும் கமல்ஹாசன் தக் லைஃப் படத்துக்கு சொன்னது போலவே பேசினர்.
ஆனால், தக் லைஃப் படத்தை போல பராசக்தி படமும் தியேட்டரில் பாக்ஸ் ஆபீஸில் பலத்த அடி வாங்கிய நிலையில், தற்போது பெரிய தொகை கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்த நிலையில், உடனடியாக வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொங்கலுக்கு வெளியான கார்த்தியின் வா வாத்தியார் 2 வாரத்திலேயே ஓடிடியில் வெளியாகி அங்கேயும் ஓடாமல் படுத்துவிட்ட நிலையில், பராசக்தி படத்துக்கும் அதுபோன்ற நிலை வந்து விடக் கூடாது என்பதால் ஒரு மாதத்துக்கும் முன்பாக வெளியாக உள்ளதாக கூறுகின்றனர்.
பொங்கல் படங்கள் வரிசையாக: பொங்கலுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பல படங்களும் ஓடிடிக்கு ஓடி வருகின்றன. முதல் ஆளாக வா வாத்தியார் வந்த நிலையில், பிரபாஸின் தி ராஜாசாப், சிரஞ்சீவியின் மன சங்கர வரபிரசாத் காரு, ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்கள் ஓடிடிக்கு வரிசைக் கட்டி ஓட வர காத்திருக்கின்றன.
பராசக்தி ஓடிடி ரிலீஸ் எப்போ?: பராசக்தி படத்தை எப்படியாவது தியேட்டரில் ஓட வைத்து விட வேண்டும் என்பதற்காக 8 வாரங்கள் ஓடிடியில் வெளியாகாது என படக்குழு 2வது நாளே வைத்த வெற்றி விழாவில் பில்டப் கொடுத்தனர். ஆனால், தற்போது பிப்ரவரி 7ம் தேதி ஜீ5 தமிழ் ஓடிடி தளத்தில் பராசக்தி திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், ஜீ5 தமிழில் வெளியான சிறை மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பராசக்தி ஓடிடி ரிலீஸுக்குப் பிறகு ரசிகர்களை கவருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பராசக்தி ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே படக்குழு அல்லது ஜீ5 தமிழ் வெளியிடும் என்கின்றனர்.
ஜனநாயகன் என்ன ஆகும்?: பிப்ரவரி 6ம் தேதியே ஜனநாயகன் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகாமல் இதுவரை படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்றே தெரியாமல் உள்ள நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்போதைக்கு அந்த படம் வெளியாக வாய்ப்பே இல்லை. தியேட்டரில் ஜன நாயகன் ஜூன் நாயகன் அல்லது டிசம்பர் நாயகனாகவே வெளியாகும் என ஏகப்பட்ட ட்ரோல்களும் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











