அமேசானில் வெளியாகும் இரவின் நிழல்… ஒருவழியாக ஓடிடி ரிலீஸ் அப்டேட் கொடுத்த பார்த்திபன்
சென்னை: பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான இரவின் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இரவின் நிழல் இதுவரை ஓடிடியில் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது அதுகுறித்து அப்டேட் கிடைத்துள்ளது.

பார்த்திபனின் புதிய முயற்சி
எப்போதுமே தனது படங்களில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் பார்த்திபன், கடைசியாக இரவின் நிழல் படத்தை இயக்கியிருந்தார். சிங்கிள் ஷாட்டில் உருவான இந்தப் படம், ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். பார்த்திபனுடன் வரலக்ஷ்மி சரத்குமார், பிரிஜிதா சாகா, ரோபோ சங்கர், ஆனந்த கிருஷ்ணன், ரேகா நாயர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்ற பெருமைக்கு சொந்தமான இரவின் நிழல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஓடிடி ரிலீஸ் அப்டேட்
நான்-லீனியர் சிங்கிள்-ஷாட் படமான 'இரவின் நிழல்' முதல் பாதியில் மேக்கிங் வீடியோவுடனும், இரண்டாம் பாதியில் மொத்தப் படமுமாக திரையரங்குகளில் வெளியானது. ரெட் ஜெயன்ட் வெளியிட்ட இந்தப் படம் பார்த்திபனின் புதிய முயற்சிக்காக பாராட்டைப் பெற்றாலும், கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனால், இரவின் நிழல் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ரசிகர்கள் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது இரவின் நிழல் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்.

அமேசானில் வெளியாகிறது
அதன்படி இரவின் நிழல் இன்று அல்லது நாளை முதல் அமேசான் பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பார்த்திபன், அதில் "காலை வணக்கம்! அமேசானில் இன்றோ நாளையோ இரவின் நிழல் வந்தே விடும்! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் இருக்கிறோம். பார்ப்போம்! நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இதனால், இரவின் நிழல் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த சர்ச்சைகளுக்கு விடை கிடைத்துள்ளது. முன்னதாக இரவின் நிழல் ஓடிடி ரிலீஸ் குறித்து கொஞ்சம் அதிருப்தியாகவே பதிலளித்து வந்தார் பார்த்திபன்.

சர்ச்சைகளும் விமர்சனமும்
முன்னதாக இரவின் நிழல் வெளியாகியிருந்த போது, இது உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருந்தார். அதற்கு பார்த்திபனும் விளக்கம் கொடுக்க, ஒருகட்டத்தில் இந்த மோதல் கோலிவுட்டில் ரொம்பவே பரப்பரப்பை ஏற்படுத்தியது. பார்த்திபன் எவ்வளவு தான் விளக்கம் கொடுத்தாலும், அதனை ப்ளூ சட்டை மாறன் இல்லை என மறுத்து வந்தார். ஒருவழியாக அந்த பஞ்சாயத்தும் முடிவுக்கு வர, இப்போது இரவின் நிழல் ஓடிடி ரிலீஸ் தேதியும் உறுதியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











