ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் ஆர்ஜே பாலாஜி படம்.. எப்போன்னு தெரியுமா?
சென்னை : நடிகரும் பிரபல இயக்குநருமான ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசானது.
படத்தில் ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் படம் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்முகத் திறமை
விஜே, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆர்ஜே பாலாஜி. இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்கள் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றன. இந்நிலையில் சமீபத்தில் சரவணன் என்பவருடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியானது வீட்ல விசேஷம்.

வீட்ல விசேஷம் படம்
திருமண வயதில் மகன் இருக்கும்போது அவரது அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சினைகளை இந்தப் படம் பேசியுள்ளது. இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சிறப்பான வசூலையும் விமர்சனங்களையும் பெற்ற பதாய் ஹோ படத்தை தற்போது இந்தப் படம் மூலம் தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.

கலவையான விமர்சனங்கள்
கடந்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்திற்கு கிரீஷ் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக ஆர்ஜே பாலாஜி சிறப்பான பிரமோஷன்களையும் செய்திருந்தார்.

ஓடிடியில் ரிலீஸ்
போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் காமெடியில் கலக்கியது. இதனிடையே ரிலீசாகி சில தினங்களிலேயே தற்போது வீட்ல விசேஷம் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி ஜீ5 தமிழில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இன்றைய தினம் ட்ரெயிலரும் ரிலீசாக உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தி ரீமேக்
பேமிலி ஆடியன்சை மையமாக கொண்டு உருவாகியிருந்த இந்தப் படத்தில் திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்காக மாற்றியமைத்துள்ளதாக முன்னதாக ஆர்ஜே பாலாஜி தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை இயக்க போனி கபூர் கேட்டபோது மறுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











