இவன் சூப்பரா இருக்கானே.. வீட்டு அட்ரஸ் கிடைச்சா நல்லா இருக்குமே.. இப்படி ஒரு பெண் ஏங்கி அலைந்தால்?
சென்னை: அழகான ஒரு இளம் பெண்.. வேண்டாம்.. 17 வயது சிறுமி என்பதுதான் சரியாக இருக்கும்.. பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது புதுசா கிளாசுக்கு வரும் ஆம்பள பசங்களை கொட்ட கொட்ட ரசித்து விழுங்குவதை போல பார்க்கிறது. அதில் யாரை லவ் பண்ணலாம் என மனசு அலைபாய்கிறது.. கொஞ்சம் வெள்ளையாக இருக்கும் பையனை பார்த்து சைட் அடிக்க அந்த சிறுமி தீர்மானிக்கிறாள்.
ஆனால்.. காதலை சொல்ல பயம்.. தன்னுடைய சக சிறுமிகள் பிற சிறுவர்களின் அழகை பார்த்து, சைட் அடித்து, பிறகு காதலை சொல்ல பின்னாடியே சுற்றுவதை பார்த்து ஏக்க பெருமூச்சு விடுகிறாள். ஃபேர்வெல்-டேயில் தனது காதலை சொல்லலாம் என்று பார்த்தால், தனது சக தோழி, அவள் காதலிக்கும் சிறுவனிடம் காதலை சொல்லி, அந்த பையன் இவளை பார்த்து "நீ எனக்கு தங்கச்சி மாதிரி" என சொல்லிவிட.., அவள், சோகத்தில், இவளை இழுத்துக் கொண்டு.. அதாவது.. நமது ஹீரோயின் சிறுமியை இழுத்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்துவிடுகிறாள்.

ஹாஸ்டலுக்கு வந்த பிறகு பாட்டில் நிறைய சாராயம் வாங்கி குடிக்கிறாள். இவளையும் எங்கேயும் போக விடாமல் கூட படுக்க வைத்துக்கொண்டே தனது காதல் வீணாக போனதை பற்றி புலம்புகிறாள். ஆனால் ஹீரோயின் சிறுமிக்கோ தனது காதலன் முகம் மனதில் வந்து வந்து போகிறது.
பிறகு கல்லூரி போகிறாள் இளம் பெண்ணாக மாறிவிட்ட அந்த சிறுமி. அங்கும் பசங்களை பார்த்து மாறி மாறி சைட் அடித்து ஒருவரை செலக்ட் செய்கிறாள். பிறகு தனது கசின் பிரதர் வைத்திருக்கும் ஆடை விற்பனையகம் போகிறார். அங்கு வரும் கஸ்டமர் பசங்களை பார்த்து, "இவன் சூப்பர்ல, இவன் அதை விட சூப்பர்ல, இவனோட அட்ரஸ் கிடைக்குமா" என்றெல்லாம் தனது பிரதரிடம் கேட்கிறாள். அவனும், இவளை பார்த்து, இதெல்லாம் எங்க திருந்தப்போகுது என்று, செல்ல கோபத்தில் முறைக்கிறான். இப்படியாக ஹீரோயின் காதல் கன்னித் தீவு கதை மாதிரி தொடர்கிறது.
இந்தக் காதல், சரக்கடித்தல், சைட் அடித்தல் பயணத்தையே, ஒரு படமாக எடுத்து வெளியிட்டிருந்தால் எப்படி இருக்கும். இவல்லாம் ஒரு பொண்ணா.. காஜி ஃபெல்லோ.. இப்படித்தானே கமெண்ட் அடித்திருப்பீர்கள்.
ஆனால்.. சிறுமிக்கு பதில் அந்த கதாப்பாத்திரத்தில் சிறுவன் நடித்திருந்தால்.. ஹீரோயின் என்று போட்ட இடத்திற்கு பதில் ஹீரோ என எழுதியிருந்தால்.. கசின் பிரதர் என்பதற்கு பதில் கசின் அக்கா என்ற கேரக்டர் வந்திருந்தால்.. ஆஹா.. இன்னொரு ஆட்டோகிராப் என விசிலடித்து கொண்டாடியிருப்போம். அதுதான் சபா நாயகன் (Saba nayagan) படத்திற்கு நடந்துள்ளது.
சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், மேகா ஆகாஷ், அபர்னா தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் (Saba nayagan OTT release) கிடைக்கும் இந்த படம், ஆண்களின், கடந்த காலத்தை அசை போட வைக்கிறது. நாஸ்டாலஜி ஃபீலிங்கை ஒரு 96 மாதிரியோ, ஒரு கோமாளி மாதிரியோ தூண்டி விடுகிறது.
ஆனால் ஆட்டோகிராப் வந்தபோதே எழுந்த கேள்வி இன்னும் எஞ்சி நிற்கிறது. இதையே, ஒரு பெண், தனது காதலின் பயணத்தை சொல்லும் படமாக எடுத்திருந்தால் சமூகம் எப்படி பார்க்கும் என்பதுதான் அந்த கேள்வி. 2004ல் எழுப்பப்பட்ட அதே கேள்வி, 2024 வரை தொடர்கிறது. இதுவரை இதற்கு விடை சொல்லும் படம்தான் வரவில்லை.


Click it and Unblock the Notifications











