Salman Khan on OTT - ஓடிடி கன்டெண்ட் எப்படி இருக்கிறது?.. பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் ஓபன் டாக்
மும்பை: Salman Khan (சல்மான் கான்) ஓடிடியில் கன்டெண்ட் எவ்வளவு தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவு பார்வையாளர்கள் கூடுவார்கள் என தெரிவித்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவிய காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடியின் மவுசு அதிகரித்தது. நேரடியாக பல படங்கள் ஓடிடிக்களில் வெளியாக ஆரம்பித்தன. குடும்பத்தோடு குறைவான செலவில் ஒரு படத்தை வீட்டில் இருந்தபடியே பார்த்துவிடலாம் என்பதால் ஓடிடிக்களின் தாக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது. படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களுக்கான மோகமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதால் அதிக வெப் சீரிஸ்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

ஓடிடியில் எல்லை மீறும் ஆபாச காட்சிகள்; வலுக்கும் எதிர்ப்புகள்
பாலிவுட், கோலிவுட் என வெப் சீரிஸ்கள் ஓடிடிக்களில் பல வர ஆரம்பித்திருக்கின்றன. அவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவும் இருந்துவருகிறது. அப்படி ஆதரவுகள் பெருகினாலும் அதேசமயம் எதிர்ப்புகளும் கிளம்புகின்றன. குறிப்பாக சமீபமாக வந்த வெப் சீரிஸ்களில் ஆபாச காட்சிகள் அளவுக்கு மீறி இருப்பதாக பலர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

உதாரணமாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியான ராணா நாயுடு வெப் சீரிஸில் ஆபாச காட்சிகள் எல்லை மீறி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. திரையுலகை சேர்ந்தவர்களே தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பதிவு செய்தனர். எனவே ஓடிடி தளங்களுக்கு கட்டாயம் தணிக்கை வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற தொடங்கியிருக்கின்றன. மேலும், ஓடிடி தளங்களில் வெளியாகும் ஆபாசத்தையும் தவறான நோக்கம் உடைய கன்டெண்ட்டுகளைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும் தெரிவித்திருந்தார்.
ஓடிடி கன்டெண்ட்டுகள் குறித்து சல்மான் கான் கருத்து
இந்நிலையில் ஓடிடி குறித்தும், அதில் வெளியாகும் கன்டெண்ட்டுகள் குறித்தும் சல்மான் கான் பேசுகையில், "ஓடிடி தளங்களுக்கு தணிக்கை வேட்னும். நல்ல உள்ளடக்கம் கொண்ட கன்டெண்ட்டுகள் தயாரிக்கப்பட வேண்டும். உள்ளடக்கம் தூய்மையாக இருக்கும்போது அது சிறப்பானதாக இருக்கும். எல்லாமே இப்போது ஃபோனில் வந்துவிடுகின்றன. 15- 16 வயதுள்ள குழந்தைகளும் இதனைப் பார்க்கலாம். உங்கள் பெண் தனது தொலைபேசியில் படிப்பதற்கு பதிலாக இவைகளை பார்ப்பதை பெற்றோர்களாகிய நீங்கள் விரும்புகிறீர்களா?

கன்டெண்ட் தூய்மையாக இருந்தால்தான் பார்வையாளர்கள் கூடுவார்கள்
கன்டெண்ட்டுகள் எவ்வளவு தூய்மையாக இருக்கின்றனவோ அந்த அளவு பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கூடும். தற்போது நாம் நல்ல கன்டெண்ட்டுகளை தர தொடங்கியிருக்கிறோம் என்றார். மேலும் பேசிய அவர், நீங்கள் (நடிகர், நடிகைகள்) உங்கள் உடலை வெளிப்படையாக காண்பிப்பது, இன்ட்டிமேட் காதல் காட்சிகள் என அனைத்தையும் செய்துவிட்டீர்கள். அதன் பிறகு நீங்கள் வீட்டுக்குள் நுழையும்போது உங்கள் வாட்ச்மேன் நீங்கள் நடித்ததை பார்க்கிறார். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். இது உங்கள் பாதுகாப்புக்கு நல்லதா. நாம் இந்தியாவில் இருக்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











