நீண்ட நாட்கள் கழித்து சமந்தா.. எப்படி இருக்கு சிட்டாடல்?.. ட்விட்டர் விமர்சனம் இதோ
சென்னை: சமந்தா நடிப்பில் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் சிட்டாடல் ஹனி பன்னி. ஏற்கனவே இவர்கள் சமந்தாவை வைத்து ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸை எடுத்திருந்தார். அந்த சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த சூழலில் இப்போது சிட்டாடல் மீதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில் இன்று வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது.
சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். நாக சைதன்யாவுடனான அவரது விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடினார். அந்த கவர்ச்சி நடனம் அவரது கரியரை மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அப்படிப்பட்ட சமயத்தில் திடீரென அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. இதன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்து சிகிச்சையை மேற்கொண்டார். ஒருவழியாக அந்த நோயிலிருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: அதன்படி இரண்டாவது இன்னிங்ஸில் சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் சரியாக போகவில்லை. குறிப்பாக சமந்தாவின் கரியரில் மிகப்பெரிய தோல்விப்படங்களாகவும் அது அமைந்தது. அதனையடுத்து மீண்டும் சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக அறிவித்து அதன்படியே செய்தார். இதனால் சமந்தாவுக்கு என்னதான் ஆச்சு என்று ரசிகர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். சூழல் இப்படி இருக்க ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து ஹிட்டடித்த சிட்டாடல் வெப் சீரிஸை இந்தியாவில் எடுக்க ராஜ் & டிகே முடிவு செய்தார்கள்.
சமந்தாவின் ஆட்டம்: ஏற்கனவே ஃபேமிலி மேன் சீரிஸ் மூலம் ஹிட்டடித்த அந்தக் காம்போ சிட்டாடல் ஹனி பன்னி சீரிஸில் சமந்தாவை நடிக்க வைத்திருக்கிறது. சமந்தாவும் நடிக்க ஒத்துக்கொண்டு சின்சியராக நடித்தார். உடல்நல பிரச்னைகளையும் கடந்து அவர் இந்த சீரிஸுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தச் சூழலில் சிட்டாடல் வெப் சீரிஸ் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அமேசானில் வெளியாகியிருக்கிறது சிட்டாடல்.
ட்விட்டர் விமர்சனம்: இந்நிலையில் வெப் சீரிஸை பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்களது கருத்தினை தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் இந்த ரசிகர் 37 வயதில் சமந்தா எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் பாருங்கள். சண்டை காட்சிகளில் எல்லாம் சமந்தா அபாரமாக நடித்திருக்கிறார். நம்பவே முடியவில்லை. சண்டைக்கு பிறகு நடிகர் மட்டும்தான் தனது Muscleஐ காண்பிக்க வேண்டுமா. ஹீரோயின் காண்பிக்கக்கூடாதா என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வருண் தவான் நிரூபித்துவிட்டார்: அடுத்ததாக இந்த ரசிகர், 'பாலிவுட்டில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை வருண் தவான் நிரூபித்திருக்கிறார். அடுத்தடுத்து அவர் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்த ப்ளாக் பஸ்டராக பேபி ஜான் படமும் இருக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ரகசியத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள்: மேலும் இந்த ரசிகர், 'சிட்டாடல் அற்புதமான வெப் சீரிஸ். செம பொழுதுபோக்காக இருந்தது. ஒரு சீனில்கூட எனக்கு சலிப்பு ஏற்படவில்லை. ராஜ்&டிகே ரசிகர்களை வசீகரிக்கும் ரகசியத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள். அனைத்து நடிகர்களுமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள் 10க்கு எட்டு மதிப்பெண்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படி சிட்டாடல் வெப் சீரிஸுக்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. மேலும் சமந்தாவின் நடிப்பையும் பலரும் பாராட்டிவருகிறார்கள். முக்கியமாக சமந்தா நடித்த லிப்லாக் சீன் ஒன்று சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவுக்கு இது ஒரு வெல்கம் பேக்தான்.


Click it and Unblock the Notifications











