ZEE5 தமிழில் உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'தடயம்' – பரபரப்பான க்ரைம் த்ரில்லர் பிப்ரவரி 27 முதல்!
சென்னை: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தனது புதிய தமிழ் ஒரிஜினல் சீரிஸான 'தடயம்' குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிரடி க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த திகில் தொடர், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதுடன், பிப்ரவரி 27 முதல் ZEE5 தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
'தடயம்' சீரிஸ், 1999ஆம் ஆண்டில் தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நிகழ்ந்த அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. நிஜ வாழ்க்கையில் நடந்த பயங்கரமான தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி, பார்வையாளர்களை திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்திற்குள் அழைத்துச் செல்லவிருக்கிறது.

அந்த காலகட்டத்தில், எல்லையோர கிராமங்களில் நடு இரவுகளில் தொடர் கொலைகள் நிகழ்ந்தன. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பயத்தையும், பல மாதங்கள் நீடித்த மர்மத்தையும் உருவாக்கின. இந்தக் கொடூர சம்பவங்கள் சமூகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, பல பதிலற்ற கேள்விகளை எழுப்பின.
குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்தக் கொலைகளில் பணம் அல்லது நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை. மாறாக, ஒவ்வொரு வீட்டிலும் திருமணத்தின் புனித அடையாளங்களான கணவரின் அரைஞாண் கயிறும், மனைவியின் தாலியும் மட்டுமே திருடப்பட்டிருந்தன. இது, வழக்கமான கொள்ளை இல்லாததால், குற்றங்களை மேலும் பயங்கரமாக்கியது.
நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள 'தடயம்' சீரிஸில், சமுத்திரக்கனி SI ஆதியமான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஷிவதா இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி வேடத்தில் இணைந்துள்ளார். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புறப் பின்னணியில் இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
கூர்மையான புத்திசாலித்தனமும் உறுதியும் கொண்ட காவல் அதிகாரி ஆதியமான், இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் முடிச்சைக் கண்டறியும் தீவிர விசாரணையில் களமிறங்குகிறார். வழக்கமான பேராசையால் உந்தப்பட்ட கொலைகள் இவை அல்ல என்பதை அவரது விசாரணை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.
மாறாக, இந்தக் கொலைகள் ஆவேசம், சடங்கு நம்பிக்கைகள் அல்லது அதைவிட பயங்கரமான ஏதோ ஒன்றால் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அவர் துப்புகிறார். கிராமங்களைப் பயம் ஆட்கொள்ள, அமானுஷ்யக் கதைகள் பரவ, விசாரணை ஒரு பெரும் ஆபத்தான மனித வேட்டையாக மாறுகிறது.
இது யாரும் எதிர்பாராத அளவுக்கு இருண்ட உண்மையைக் வெளியே கொண்டு வந்து, அனைவரையும் உலுக்கும் திருப்பங்களை ஏற்படுத்தும். இதன் மூலம் பார்வையாளர்கள், அந்த காலகட்டத்தின் பயத்தையும் மர்மத்தையும் நேரடியாக உணர்வார்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தொடரின் இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் கூறியதாவது: "'தடயம்' என்பது ஒரு க்ரைம் த்ரில்லர் மட்டுமல்ல, நமக்கு நெருக்கமான கிராமிய சமூகத்தில் நிலவும் பயம், நம்பிக்கை, ஆவேசம் ஆகியவற்றை ஆராயும் ஒரு முயற்சியாகும். இந்த உண்மை சம்பவத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அந்தக் குற்றங்கள் எவ்வளவு ஆழமான, உணர்ச்சிப்பூர்வமான, புனிதமான விஷயங்களை இலக்காகக் கொண்டன என்பதுதான். இந்தக் கதையை நேர்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் பார்வையாளரின் மனதில் அழுத்தமாக பதியும் வகையில், அச்சமூட்டும் நிஜத்துடன் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்." அது நிறைவேறியதில் மகிழ்ச்சி.
எஸ்ஐ ஆதியமான் வேடத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி கூறுகையில், "'தடயம்' சீரிஸில் என்னை ஈர்த்தது அதன் உண்மைத்தன்மைதான். இது ஒரு வழக்கமான போலீஸ் கதை அல்ல. பொறுமை, நம்பிக்கை மற்றும் மனித மனதைப் புரிந்து கொள்வது பற்றிய கதை. பயமும் பதிலற்ற கேள்விகளும் நிறைந்த ஒரு சூழலுக்குள் நுழைகிறான் அதிகாரி ஆதியமான். அந்த சிக்கலான மனநிலைதான் இந்த கதாபாத்திரத்தை எனக்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாக மாற்றியது" என்று தெரிவித்தார்.
நடிகை சிவாதா கூறியதாவது: "இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி வலிமையானவர், உள்ளுணர்வு கொண்டவர், தொடர்ந்து எதிர்கொள்ளும் பயங்கரமான சூழல்களிலும் தளராதவர். 'தடயம்' சீரிஸ் அதன் கதாபாத்திரங்களுக்கு கேள்வி எழுப்பவும், அவர்கள் எதிர்கொள்கின்ற அழுத்தத்தின் பாரத்தை உணரவும் தனித்தன்மையான இடமளிக்கிறது. நிஜத்தன்மையையும், அச்சமூட்டும் சூழலையும் இவ்வளவு சமநிலையாகக் கையாளும் க்ரைம் சீரிஸ் அரிதானது" என்று குறிப்பிட்டார்.
இந்த அதிர்வூட்டும் உண்மை சம்பவங்களின் பயங்கர அனுபவத்தை ZEE5 தமிழ் தளத்தில் பிப்ரவரி 27 முதல் நேரடியாக கண்டு ரசித்திடலாம்.


Click it and Unblock the Notifications











