80s BuildUp OTT - ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் 80ஸ் பில்ட் அப்.. இப்போதாவது நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்குமா..?
சென்னை: 80s Buildup OTT Release (80ஸ் பில்ட் அப் ஓடிடி ரிலீஸ்) சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 80ஸ் பில்ட் அப் படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது. ஓடிடி தளத்திலாவது நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் படக்குழு இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி ஆக்டர்களில் ஒருவர் சந்தானம். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோர் பீக்கில் இருந்தபோது எப்படி அவர்கள் இல்லாமல் ஒரு படம்கூட வந்தது இல்லையோ அதேபோல்தான் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் அவர் இல்லாமல் ஒரு படம்கூட வெளியாகவில்லை. அந்த அளவுக்கு பிஸியாகவும், வெரைட்டியாகவும் நடித்தார் சந்தானம்.

டைமிங்கில் கில்லி: கவுண்டமணியின் ஃபார்முலாவை ஃபாலோ செய்த சந்தானம் தனது டைமிங் காமெடியால் வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைத்தவர். இன்றுவரை அவர் நடித்த சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி என பல படங்களின் காமெடி ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு பயங்கரமாக சிரிக்க வைத்தாரோ அதே அளவு அவர் சர்ச்சைகளையும் சந்தித்தார். உதாரணமாக என்றென்றும் புன்னகை படத்தில் ஒரு பெண்ணிடம் அவர் சொல்லும் வசனம் பயங்கர விமர்சனத்தை சந்தித்தது.மேலும் அடுத்தவரை ரொம்பவே உருவ கேலி செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ சந்தானம்: தனது கரியரின் உச்சத்தில் இருந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ர படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து ஹீரோவாகவே நடித்துவருகிறார் அவர். அந்தவகையில் அவர் நடித்த இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, டகால்டி, ஏ1 என வரிசையாக நடித்துவருகிறார்.
காமெடி கலந்த கதைதான்: தன்னுடைய பலமான காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளையே தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த டிக்கிலோனா படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருந்தார் சந்தானம். அந்தவகையில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.
80ஸ் பில்ட் அப்: ஆனால் அடுத்ததாக வெளியான கிக் படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சந்தானம் கொஞ்சம் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் கடைசியாக 80ஸ் பில்ட் அப் படம் வெளியானது. படத்தை கல்யாண் இயக்க சந்தானத்துடன் ராதிகா ப்ரீத்தி, ஆர்.சுந்தர்ராஜன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
கலவையான விமர்சனம்: கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி படமானது திரையரங்குகளில் வெளியானது. கண்டிப்பாக இந்தப் படம் வயிறு குலங்க சிரிக்க வைத்து மனதுக்கு நிறைவை தரும் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். ஆனால் படம் எதிர்பார்த்த திருப்தியை தரவில்லை. இதனால் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன.
இந்நிலையில் 80ஸ் பில்ட் அப் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது. தியேட்டரில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் ப்ரைமில் கண்டிப்பாக குட் ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது. இதற்கிடையே சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக நடித்தாலும் விரைவில் நகைச்சுவை நடிகராகவும் மீண்டும் மாற வேண்டும் என்ற கோரிக்கையும் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











