நெட்பிளிக்ஸ்ல இனி ’பிட்டு’ சீனை ஸ்கிப் பண்ணலாமா?.. அதெப்படி அடிமடியிலேயே கை வைப்பாங்க பாஸ்!
சென்னை: 1997ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஒரு சாதாரண டிவிடி கடையாக இருந்த நெட்பிளிக்ஸ், இன்று
உலக அளவில் 30 கோடிக்கும் அதிகமான கட்டணச் சந்தாதாரர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய OTT தளமாக உருவெடுத்துள்ளது. இது வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி ரசிகர்களையும் கவரக்கூடிய வகையில் ஆடியோ மற்றும் சப் டைட்டில் வசதிகளுடன் கல்லா கட்டி வருகிறது.

அண்மையில் வெளியான குஜராத்தித் திரைப்படமான 'வஷ் லெவல் 2' இதற்கு ஒரு புதிய உதாரணம். குஜராத்திய படத்தைக் கூட உலகளவில் கொண்டு சேர்த்துவிட்டது நெட்பிளிக்ஸ். அதே நேரத்தில் எலான் மஸ்க் சமீபத்தில், நெட்பிளிக்ஸை அன் சப்ஸ்கிரைப் செய்யுங்க என போட்ட பதிவு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதற்கு காரணம், ஏகப்பட்ட ஆபாச காட்சிகள் அடங்கிய வெப்சீரிஸ்கள் மற்றும் படங்களை சர்வ தாராளமாக நெட்பிளிக்ஸ் இளைஞர்களுக்கு வழங்கி வருவது தான். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக, "ஆபாச காட்சிகளைத் ஸ்கிப்" செய்யும் ஆப்ஷனை நெட்பிளிக்ஸ் அறிமுகப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் ஒரு வதந்தி பரவியது. அது முழுக்க முழுக்க வதந்தி தான் என்றும் உண்மையல்ல என நெட்பிளிக்ஸ் நிர்வாகவே விளக்கம் அளித்துள்ளது.
திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் வரும் நெருக்கமான நிர்வாணக் காட்சிகளைத் தவிர்க்கும் பட்டனை நெட்பிளிக்ஸ் அறிமுகப்படுத்தியதாக X மற்றும் இன்ஸ்டாகிராமில் பல பதிவுகள் வெளியாகின. குடும்பத்துடன் திரைப்படம் பார்க்கும் போது திடீரென வயது வந்தோருக்கான காட்சிகள் திரையில் தோன்றுவது சங்கடமாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.
எனவே, இந்த வதந்தி விரைவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பலரும் இதனை நம்பினர். ஆனால், உண்மை மிகவும் எளிமையானது. நெட்பிளிக்ஸ் இதுபோன்ற எந்த அம்சத்தை இதுவரை சேர்க்கவில்லை என்பதுதான்.

"வயது வந்தோருக்கான காட்சிகளைத் தவிர்க்கவும்" ஆப்ஷன் என்ற பட்டனைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்டுகள் முற்றிலும் போலியானவை. அவை ஆன்லைனில் பகிரப்பட்ட எடிட் செய்யப்பட்ட படங்கள் மற்றும் மீம்கள் மட்டுமே.
உலகம் முழுவதும் உள்ள பல பயனர்கள், குடும்பத்துடன் திரைப்படம் பார்ப்பதை எளிதாக்கும் என்று நம்பி, இந்த விருப்பத்தை கொண்டுவர நெட்பிளிக்ஸிடம் கேட்டு வருகின்றனர். ஆனால், தற்போது வரை நெட்பிளிக்ஸ் இதைச் சேர்ப்பதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.
எதிர்காலத்தில் இப்படியொரு ஆப்ஷன் வந்தால் நல்லாத்தான் இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவர்களின் வியாபாரத்தை பெருக்கும் யுக்தியின் அடிமடியிலேயே கண்டிப்பாக கை வைக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம். அதுக்குத்தான் ஏற்கனவே சைல்ட் மோட் என்கிற ஒரு ஆப்ஷன் உள்ளதே அதிலேயே குடும்பத்துடன் அமர்ந்து குழந்தைகள் பார்க்கும் படத்தை பார்த்துக் கொள்ளலாம்.
'Skip Adult Scene' என்ற ஆப்ஷனை வைத்தால், பலருக்கும் நெட்பிளிக்ஸில் இருக்கும் பாதி படமே புரியாது என்பது தான் இதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











