சூரியின் மாமன்.. ஓடிடியில் எப்போது ரிலீஸ்?.. தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ் இங்கும் கிடைக்குமா?
சென்னை: நடிகர் சூரி காமெடியனாக தனது பயணத்தை திரைத்துறையில் ஆரம்பித்து இப்போது வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியானது. அதில் அவருடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இந்நிலையில் அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
வெண்ணிலா கபடி குழு திரைப்படம்தான் சூரிக்கு மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. அதற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து காமெடியனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அடையாளப்பட்ட சிறிது காலத்திலேயே முன்னணி காமெடி நடிகர் என்ற இடத்தை அவர் அடைந்துவிட்டார். இப்படிப்பட்ட சூழலில்தான் அவர் கதையின் நாயகனாக மாறினார்.
வெற்றிமாறன் பட்டறை: எந்த ஒரு நடிகருக்குமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. அது சூரிக்கு விடுதலை படத்தில் நிறைவேறியது. அதுவரை காமெடியனாக இருந்த அவரை விடுதலை படத்தில் கதையின் நாயகனாக மாற்றினார் வெற்றி. படம் சூப்பர் டூப்பர் ஹிட். சூரிக்கும் மிகப்பெரிய வரவேற்பு. அதனைத் தொடர்ந்து ஹீரோவாக மட்டும் நடிப்பது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் சூரி. அதற்கு தகுந்தபடிதான் அவரது படங்களும் ரிசல்ட்டை கொடுக்கின்றன.

வரிசையாக ஹிட்டுகள்: விடுதலை படத்துக்கு பிறகு அவர் நடித்த கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவற்றில் கொட்டுக்காளியும் விடுதலை 2வும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. கருடன் திரைப்படமோ அவருக்கு வசூல் ரீதியாக பெரிய ரெஸ்பான்ஸை கொடுத்தது. இதனால் வணிக ரீதியாகவும் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை சூரிக்கு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கதை எழுதிய சூரி: காமெடியன்,ஹீரோவாக இருந்த சூரி மாமன் திரைப்படத்தின் மூலம் கதையாசிரியராகவும் மாறியிருக்கிறார். பிரசாந்த் இயக்கியிருந்த அந்தப் படத்தில் அவருடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அக்கா மகனுக்கும், தாய் மாமனுக்கும் உள்ள பாசத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதையை எழுதியிருந்தார் சூரி. கதை நாயகனாக மாறி மாமனுக்கு முன்பு நடித்த அத்தனை படங்களும் சூரிக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. எனவே இந்தப் படத்தின் மீதும் ஆவல் இருந்தது.
படம் சுமார்தான்: அந்த ஆவலோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு படம் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. பாசம் என்கிற பெயரில் படம் முழுவதும் கிரிஞ்ச்தனத்தை தூவி வைத்திருக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்தது. தோல்வி படம் என்ற பெயர் வாங்காமல் சுமார் என்ற ரகத்தில் இருந்தது. அதேசமயம் இவ்வளவு பிற்போக்குத்தனமான கதையை சூரி எழுதியிருக்கிறாரே போன்ற விமர்சனங்களும் பலமாக எழுந்ததையும் மறுத்துவிட முடியாது.
ஓடிடியில் எப்போது ரிலீஸ்?: இந்நிலையில் அந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜூன் 13ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் 30 கோடி ரூபாய்வரை படம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. எனவே ஓடிடியிலும் தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ் கிடைக்குமா இல்லை மோசமான விமர்சனத்தை பெறுமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் சூரி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











