இன்று வெளியாகிறது ஸ்குவிட் கேம் 2.. எதில் பார்க்கலாம் தெரியுமா?.. ரசிகர்கள் மரண வெயிட்டிங்
சென்னை: கொரிய சீரிஸான ஸ்குவிட் கேம் சீசன் 1 கடந்த 2021ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற அதனை ரசிகர்கள் அனைவருமே மிகவும் விரும்பி பார்த்தார்கள். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த அந்த வெப் சீரிஸ் வெளியான சில நாட்களிலேயெ பில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றது. சூழல் இப்படி இருக்க அந்த வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் இன்று வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
கொரோனா காலத்துக்கு பிறகு ஓடிடி தளங்களின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகமாகியிருக்கிறது. ரசிகர்களும் பிற மொழி படங்கள், வெப் சீரிஸ்களை பார்ப்பதை அதிகரித்துக்கொண்டனர். அப்படி வெளியான மணி ஹீஸ்ட் உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் எல்லாம் இந்தியாவிலும் சக்கைப்போடு போட்டன. அப்படிப்பட்ட வெப் சீரிஸ் லிஸ்ட்டில் தவிர்க்க முடியாது ஒன்று என்றால் அது ஸ்குவிட் கேம். தென் கொரியாவில் உருவானது இந்த வெப் சீரிஸ்.

சர்வைவல் த்ரில்லர்: பொதுவாக சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வரும் படைப்புகளுக்கு ரசிகர்களுக்கு எப்போதுமே தனி மவுசு இருக்கும். அந்த ஜானரில்தான் இந்த வெப் சீரிஸும் வெளியானது. ஆனால் கொஞ்சம் வித்தியாசத்தோடு வந்தது. அதாவது கண்ணுக்கே தெரியாதவர்களால் மரணத்தோடு விளையாட வைக்கப்பட்டார்கள் கதாபாத்திரங்கள். இதனால் ஒவ்வொரு சீனும் மரண பீதியோடுதான் நகரும். மொத்தம் ஒன்பது எபிசோடுகளை கொண்ட முதல் சீசன் கடந்த 2021ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.
மெகா ப்ளாக் பஸ்டர்: உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் இந்த வெப் சீரிஸுக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. அந்த வெப் சீரிஸ் வெளியான சமயத்தில் சமூக வலைதளங்கள் முழுவதுமே ஸ்குவிட் கேம் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. அதை மையமாக வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் வந்தன. மேலும் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே 1.65 பில்லியன் பார்வைகளை அந்த சீரிஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை கண்டு பலரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள்.
இரண்டாவது சீசன்: அந்த வெப் சீரிஸை பிரபல இயக்குநர் ஹவாங் டாங் - ஹியூக் இயக்கியிருந்தார். லீடு ரோலில் லீ ஜங் ஜே நடித்திருந்தார். சூழல் இப்படி இருக்க முதல் சீசனுக்கு பிறகு இரண்டாவது சீசன் எப்போது வரும் என்ற ஆவல் உலகம் முழுவதும் இருந்த ரசிகர்களுக்கு இருந்தது. அதற்கு தீனி போடும் டிசம்பர் மாதம் இந்த சீசன் வெளியாகும் என்று டீசரோடு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள்.
இன்று ரிலீஸ்: இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்குவிட் கேம் 2 இன்று முதல் ஸ்ட்ரீமாக இருக்கிறது. இந்த சீசனில் யிம் சீ வான், காங் ஹா நியூல், பார்க் யங், லீ ஜின், பார்க் ஹூன், யாங் டங், லீ டேவிட் வோன் ஜியான் உள்ளிட்டோர் புதிதாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து ஏற்கனவே முதல் சீசனில் நடித்தவர்களும் இதில் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தை போலவே இந்த பாகமும் தங்களை திருப்திப்படுத்துமா என்பதை பார்ப்பதற்கு நெட்ஃப்ளிக்ஸில் மொய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் உலக ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











