Stephen Review: ஸ்டீபன் விமர்சனம்.. இது சைக்கோ கொலைகாரனின் கதை.. படம் எப்படி இருக்கு?
சென்னை: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் ஸ்டீபன் படம், ஓடிடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் மிதுன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார் கோமதி சங்கர். தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
படத்தின் கதையை பொறுத்தவரையில் சைக்கோ கொலைகாரன் ஒருவன் 9 பெண்களைக் கொலை செய்துவிட்டு, 10வது கொலையை செய்வதற்கு ஒரு பெண்ணையும் தேர்வு செய்துவிட்டு, அந்த பெண் சொன்ன ஒற்றை வார்த்தையால், அந்த பெண்ணைக் கொல்லாமல், விட்டுவிடுகிறான். இது மட்டும் இல்லாமல், மொத்த காவல்துறையும் அவனைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இருக்கும் போது, அவனே காவல் நிலையத்திற்கு சென்று சரணடைகிறான். இந்த சைக்கோ கொலைகாரன் ஏன் சரணடைந்தான்? எதற்காக இத்தனை கொலைகளை செய்தான்? அதன் தொடக்கப்புள்ளி எது என்பதை விசாரிக்கையில் அவன் மேலும் மூன்று கொலைகள் செய்தது வெளியே வருகிறது. அந்த மூவரும் அவனது அம்மா, அப்பா மற்றும் மனைவி. இதையெல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது மீதிக்கதை. காவல்துறையினர் கண்டுபிடித்து காரணங்களைச் சொல்லி, அவர்களது பார்வையில் திரைக்கதையை அமைக்காமல், சைக்கோ கொலைகாரனே எல்லா உண்மைகளையும் போகிற போக்கில் ஓபன் செய்வதால் ஷாக் மேல் ஷாக் இருந்து கொண்டே உள்ளது.

படக்குழு: தமிழ் சினிமாவில் வந்த சைக்கோ கொலைகாரன் படங்களில் காலத்திற்கும் நின்னு பேசும் படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் மிதுன். மொத்த படத்தின் திரைக்கதையில் தொடங்கி, நிறத்தை வைத்து குறியீட்டில் கதை சொல்வது வரை என ஒரு பக்காவான படத்தை கொடுத்துள்ளார். சைக்கோ கொலைகாரன் படம் என்றாலே பின்னணி இசையை விட, சைலன்ஸ் தான் ரசிகர்களுக்கு பயத்தை அதிகரிக்கும், அதை திறமையாகவே கையாண்டுள்ளார், இசையமைப்பாளர் ராகவ் ராயன். ஒரு சைக்கோ கொலைகாரனாக கோமதி சங்கர் செம்மையாக ஸ்கோர் செய்துள்ளார். அவரது மேக்-அப், அவரது முக பாவனைகள், டயலாக் டெலிவரி உள்ளிட்டவை உண்மையிலேயே பயத்தை உருவாக்கியது.
படம் எப்படி இருக்கு?: மொத்தமாக ஒரு பத்து கதாபாத்திரங்களை வைத்து படத்தை மிகவும் சிறப்பாகவும் குவாலிட்டியாகவும் கொடுத்துள்ளார்கள். அதேபோல் படத்தின் மற்றொரு பலம் என்றால் அது ஒளிப்பதிவுதான். சில காட்சிகளில் கேமரா ஆங்கிள்களில் ரசிகர்களுக்கு திகிலை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்கள். மிகவும் குறைந்த அளவிலான பட்ஜெட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதில் மிகவும் திருப்திகரமான படத்தைக் கொடுத்துள்ளார்கள். அம்மா - அப்பா ஃப்ளாஷ் பேக் காட்சிகள் ஒவ்வொன்றும் அட்டகாசம்.

பாராட்டு: படத்தின் கிளைமாக்ஸ் உண்மையிலேயே யாரும் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸாக படமாக்கிய விதத்திற்கு பாராட்டு. படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படத்தின் கதைக்குள் இருந்தே லீட் கொடுத்துள்ளார்கள். அந்த லீட் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. இரண்டு மணி நேரத்தில் பக்காவான ஒரு சைக்கோ திரில்லர் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த படம் நல்ல படமாக இருக்கும். மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











