Parasakthi OTT: பராசக்தி தமிழில் தமிழ் வாழ்க.. மற்ற மொழிகளில் என்ன? சுதா கொங்கராவின் பியூர் மாஸ்டர் மைண்ட்
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். இது அவரது 25 வது படமாக உருவாகி வெளியானது. படத்தில் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான 100வது படம் இது. படம் கடந்த 1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கப்பட்டது. படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. கடந்த ஜனவரி 10ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆன இந்த படம், இன்று அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி முதல் Zee5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் பலருக்கும் உள்ள கேள்வி, பராசக்தி படம் தமிழில், தமிழ் வாழ்க என்ற முழக்கத்தை முன் வைத்து படம் வெளியாகி இருந்தது. தற்போது படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி உள்ளதால் இதில் இயக்குநர் எது போல திரைக்கதை வைத்துள்ளார், வசனங்கள் வைத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் பலருக்கும் இருந்தது.
இதில் சிலருக்கு உண்மையாலுமே அந்த ஆர்வம் இருந்தாலும், சிலருக்கு சுதா கொங்கரா தனது படத்தின் வியாபாரத்திற்காக திரைக்கதையை, வசனங்களை அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு மாற்றி வைத்திருப்பார் என்ற விமர்சனங்கள் சில இணையவாசிகளால் முன் வைக்கப்பட்டது. அதுவும் படத்தின் டிரைலர் வெளியானதுமே இந்த விமர்சனங்களை சிலர் முன் வைத்தனர்.

ஆனால், அதற்கு படக்குழுவோ, இயக்குநரோ எந்த பதிலும் அளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் மறுப்பு கூட தெரிவிக்கவில்லை. இதனால் சுதா கொங்கரா மீது விமர்சனத்தை வைத்தார்கள், மேலும் மேலும் விமர்சனத்தை வைத்தனர். ஆனால் படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி சுதா கொங்கரா மீதான தவறான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.
டப்பிங்கில் அருமை: அதாவது தியேட்டரில் ரிலீஸ் ஆன தமிழ் வெர்ஷன் அப்படியே ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. தமிழ் அல்லாத இந்த மூன்று மொழிகளிலும் சுதா கொங்கரா டப்பிங்கில் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. அதாவது, பராசக்தி படத்தில் எங்கு எல்லாம் தமிழ் மற்றும் தமிழ் வாழ்க என்று வசனங்களாக இருந்ததோ, அங்கு எல்லாம் மாத்ரு பாஷை என்ற சொல் பயன்படுத்தபட்டுள்ளது.
அதேபோல் நடிகர் காளி வெங்கட் தமிழில் பேசும் வசனமான, " வெற்றிவேல் வீரவேல்" என்ற வசனத்தை, மாத்ரு பாஷை வர்த்தில்லாலி என்று தெலுங்கில் மாற்றி வைத்துள்ளார். மாத்ரு பாஷை வர்த்தில்லாலி என்றால் தாய்மொழி வாழ்க என்பதுதான் பொருள். இதில் மாத்ரு பாஷா என்பது சமஸ்கிருத சொல் ஆகும். இதில் மாத்ரு பாஷா என்ற சமஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம், இது ஏதோ ஒரு குறிப்பிட்ட மொழிக்கான போராட்டம் மட்டுமல்ல, அந்தந்த மாநில மக்களின் தாய்மொழி உரிமைக்கான போராட்டம் என்பதைக் கடத்தியுள்ளார் சுதா.

விசுவல் டெக்ஸ்ட்: அதேபோல் படத்தில் எழுத்துகளாக காட்சிகளில் காட்டப்பட்டவை அனைத்துமே அப்படியே தமிழில் காட்டப்படுகிறது. குறிப்பாக நீதி பரவட்டும், ஆங்கிலம் வேண்டாம் ஆனால் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த கார் வேண்டுமா?, தமிழ் வாழ்க, இந்தி வாழ்க போன்ற அனைத்துமே அப்படியே காட்டப்பட்டுள்ளது. மொழிப்போர் போன்ற வரலாற்று சம்பவத்தை படமாக உருவாக்கும் போது, அதில் வணிக ரீதியான லாபத்தை எதிர்நோக்கி, அந்ததந்த பிராந்திய மொழிகளுக்கு ஏற்றவகையில் படத்தை மாற்றிக் காட்டாமல், மொழிப்போரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் திரைக்கதை அமைத்த விதம் பாராட்டுக்குரியது.
மாஸ்டர் மைண்ட்: மேலும் தமிழ் அல்லாத மாற்று மொழிகளில், தமிழ் வாழ்க என்பதை பயன்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் மொழிப்போரில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகவே, மாத்ரு பாஷா என்ற சமஸ்கிருத வார்த்தைகளை பயன்படுத்தியது சுதா கொங்கராவின் மாஸ்டர் மைண்டைக் காட்டுகிறது.



Click it and Unblock the Notifications











