Lal Salaam OTT: முடிவுக்கு வந்ததா ஹார்ட் டிஸ்க் பஞ்சாயத்து.. ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்!
சென்னை: ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்த லால் சலாம் திரைப்படம் கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்கு பின் இந்த படம் வெளியானதால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான முதல் நாளே மோசமான விமர்சனத்தை சந்தித்து தோல்வித்திரைப்படமாக மாறியது. அதற்கு காரணம் படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது தான் என சொல்லப்பட்டது. தற்போது வரை படம் ஓடிடியில் வெளியாகாத நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ், ஸ்ருதி ஹாசனை வைத்து த்ரி படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். இதன்பின், கௌதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற படத்தை எடுத்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றன. அதன்பின் சில ஆண்டுகள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஐஸ்வர்யா, லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் லால் சலாம் படத்தை இயக்கினார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விஷ்னு விஷால், விக்ராந்த் பலர் நடித்திருந்தனர். மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
லால் சலாம்: இந்த படம் தியேட்டரில் வெளியாகி படு தோல்வியடைந்தது. இதனால், ஐஸ்வர்யா கடுமையாக விமர்சிக்கப்பட்டதால், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, லால் சலாம் படத்தின் 21 நாள்கள் ஆயிரக்கணக்கானோரை வைத்து, 10 கேமராக்கள் வைத்துத் கிரிக்கெட் போட்டியை படப்பிடிப்பு செய்திருந்தோம், அந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது. அந்த காட்சியை மீண்டும் எடுக்க முடியாததால், கையில் இருந்த காட்சிகளை வைத்து படத்தை அப்படியே வெளியிட்டுவிட்டோம். அந்த கிளைமாக்ஸ் காட்சித் தான் படத்திற்கு முக்கியமானது. அந்த காட்சி படத்தில் இல்லாததால், படம் தோல்வி அடைந்துவிட்டது என கூறியிருந்தார். பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தின் தோல்வியால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

தள்ளிப்போன ஓடிடி ரிலீஸ்: இதனால் லால் சலாம் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால், நெட்பிளிக்ஸ் நிறுவனம், ஹார்ட் டிஸ்கில் இருந்த காட்சிகள் படத்தில் இருந்தால் தான் படத்தை வாங்குவோம் என கூறிவிட்டது. இதையடுத்து, தொலைந்து போன ஹார்ட் டிஸ்கில் இருந்து சில காட்சிகளை மீட்டுள்ளோம். இந்த காட்சிகளை உள்ளடக்கிய டைரக்டர்ஸ் கட் ஒன்று ஓடிடியில் வெளியாகும் என்றும், தியேட்டரில் வெளியானதை விட ஓடிடியில் வெளியாகும் பிரதி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று படக்குழு கூறியிருந்தது. இதையடுத்து, லால் சலாம் படம் 'சன் நெக்ஸ்ட்' ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், படம் எதிர்பார்த்தபடி வெளியாகவில்லை.
இதையடுத்து, தற்போது லால் சலாம் படம் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஜூன் 6-ம் தேதி 'சன் நெக்ஸ்ட்' ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலான நிலையில், ஹார்ட் டிஸ்க் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளதால், படம் ஓடிடியில் வெளியாகிறதா? இல்லை தியேட்டரில் வெளியான பிரதியே ஓடிடியில் வெளியாகுமா என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











