அட இங்கேயும் போட்டியா?.. நானி, மோகன் லாலிடம் வெல்வாரா சூர்யா?.. ரணகளமாகும் ஓடிடி தளம்
சென்னை: ஓடிடியின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. திரையரங்குகளில் வெளியான படங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஓடிடிக்கு வருகின்றன. அதேபோல் சில படங்களும், ஏகப்பட்ட வெப் சீரிஸ்களும் நேரடியாக ஓடிடியில் வருகின்றன. தியேட்டரில் க்ளிக் ஆகாத படங்கள்கூட ஓடிடியில் க்ளிக்கான கதையெல்லாம் உண்டு. இந்தச் சூழலில் நானி நடித்த ஹிட் 3 திரைப்படம் நேற்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் இன்று சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
ஒட்டுமொத்த உலகத்தையும் சில வருடங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தனது பிடிக்குள் வைத்திருந்தது. அதன் காரணமாக தியேட்டர்களும் மூடப்பட்டன. அந்த சமயத்தில் ஓடிடியின் வளர்ச்சி இந்தியாவில் அபரிமிதமாக வளர்ந்தன. ஆரம்பத்தில் பலரின் கருத்தாக இருந்தது என்னவென்றால்; ஓடிடி கலாசாரம் சில காலத்துக்கு பின்பு குறைந்துவிடும் என்பதுதான். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்தியாவில் ஓடிடியின் மவுசு கணிசமாக வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிலும் நல்ல வளர்ச்சி: தமிழிலும் ஓடிடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால் தியேட்டரின் மவுசை குறைக்கும் அளவுக்கு ஓடிடியில் மக்களின் கவனம் அதிகம் திரும்பியிருக்கிறது. சூர்யாவின் ஜெய் பீம், சூரரைப் போற்று, விக்ரமின் மகான் உள்ளிட்ட படங்கள் எல்லாம் நேரடியாக ஓடிடியில்தான் ரிலீஸ் செய்யப்பட்டன. அதேசமயம் ஜெய் பீம் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்திருக்கக்கூடாது என்று சூர்யாவும் சமீபத்தில் வருத்தப்பட்ட சம்பவம் எல்லாம் அரங்கேறியது.
வாரா வாரம் ரிலீஸ்: இதற்கிடையே தியேட்டரில் ரிலீஸாகி குறிப்பிட்ட காலத்துக்கு பிறகுதான் படங்கள் ஓடிடியில் ரிலீஸாக வேண்டும் என்று தியேட்டர் அசோசியேஷனும் கட்டுப்பாட்டினை கொண்டு வந்தது. அந்தவகையில் தமிழில் தியேட்டரில் ரிலீஸான படங்கள் அந்த கால அளவுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸாகின்றன. அந்தவகையில் சூர்யாவின் ரெட்ரோ, நானியின் ஹிட் 3 ஆகிய படங்கள் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதிலும் போட்டியா?: அதன்படி நானி நடித்த ஹிட் 3 திரைப்படம் நேற்று முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த ரெட்ரோ திரைப்படம் இன்று முதல் அதே ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே தியேட்டரில் ரெட்ரோ திரைப்படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. ஹிட் 3யும் அந்த கேஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அடுத்தடுத்த நாட்களில் இரண்டு படங்களை நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்கிறது. எனவே தியேட்டரில்தான் படங்களுக்குள் போட்டி இருக்கும் என்று பார்த்தால் ஓடிடியிலும் போட்டி உருவாகிவிட்டதே என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
யார் வெல்வார்?: அதேபோல் மோகன் லால், ஷோபனா உள்ளிட்டோர் நடித்த தொடரும் திரைபடமோ ஜியோ ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. ரெட்ரோ, ஹிட் 3 ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய்வரை தியேட்டரில் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் தொடரும் திரைப்படமோ 200 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது. இப்படி 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்த மூன்று படங்களும் ஒரே சமயத்தில் ஓடிடியில் ரிலீஸாகியிருக்கின்றன.
எனவே இந்த மூன்று படங்களில் எந்தப் படம் அதிகப்படியான வியூஸ்களை பெறும் என்ற எதிர்பார்ப்பு சூர்யா, நானி, மோகன் லால் ஆகியோரின் ரசிகர்களிடையே எழுந்திருக்கின்றன. முக்கியமாக சூர்யாவுக்கு கடந்த சில காலமாகவே தியேட்டரில் வெளியாகும் படங்கள் பெரிய ரெஸ்பான்ஸை கொடுக்கவில்லை. ரெட்ரோ படமும்கூட சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திடம் தோல்வியைத்தான் சந்தித்தது. எனவே ஓடிடியில் ஏற்பட்டிருக்கும் இந்தப் போட்டியிலாவது சூர்யா வெல்வாரா என்றும்; ஒரே சமயத்தில் ஏன் இரண்டு படங்களை நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்ய வேண்டும்; அந்த நிறுவனம் என்ன பிளானில்தான் இருக்கிறது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











