Thalaimai Seyalagam Review: ’தலைமைச் செயலகம்’ விமர்சனம்.. ஓடிடியில் வெற்றிப் பெற்றாரா வசந்தபாலன்?
சென்னை: 'அங்காடித் தெரு', 'அரவாண்', 'காவியத் தலைவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் கடைசியாக அநீதி படத்தை இயக்கி இருந்தார். ஷங்கரின் உதவி இயக்குநரான வசந்தபாலன் 'முதல்வன்' பட பாணியில் அரசியல் கதையை கையிலெடுத்திருக்கிறாரே அவரது வெப்சீரிஸ் எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், அதனை தலைமை செயலகம் வெப்சீரிஸ் பூர்த்தி செய்ததா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே காணலாம்.
வசந்தபாலன், ஜெயமோகன் இணைந்து எழுதிய இந்த தலைமைச் செயலகம் வெப்சீரிஸில் பரத், தர்ஷா குப்தா, ஆடுகளம் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள இந்த வெப்சீரிஸ் மொத்தம் 8 எபிசோடுகளாக ஒரே மூச்சில் வெளியானது.

தலைப்பே 'தலைமைச் செயலகம்' என வைக்கப்பட்டுள்ள நிலையில், வெப்சீரிஸ் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தையும் பல குறியீடுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
'தலைமைச் செயலகம்' கதை: மேற்கு வங்கத்தில் ஒரு இளம் பெண்ணை பலர் சித்ரவதை செய்து வரும் நிலையில், ஒரு கட்டத்தில் அந்த பெண் வெகுண்டு எழுந்து அனைவரையும் வெட்டி சாய்க்கிறது. அதன் பின்னர் அந்த பெண் என்ன ஆனார் என்பதை காட்டாமல் அங்கிருந்து கட் செய்தால் 15 ஆண்டுகள் கழித்து தமிழக அரசியல் களத்தில் முதல்வராக இருக்கும் கிஷோர் ஊழல் குற்றச்சாட்டுக்கு காரணமாக அவரது பதவி பறிபோகும் சூழல் உருவாகிறது. அவருக்கு நிழலாக ஸ்ரேயா ரெட்டி செயல்பட்டு வருகிறார். கிஷோரின் மகளாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பரத் மற்றும் தர்ஷா குப்தா இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர்.
தனக்கு பிறகு ஆட்சியில் யாரை அரசியல் வாரிசாக அமர்த்தலாம் என்கிற சிந்தனையில் ஆடுகளம் கிஷோர் உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கு வங்கத்தில் பலரை வெட்டி சாய்த்து விட்டு தப்பித்த பெண் என்ன ஆனார் என்கிற விசாரணையை சிபிசிஐடி நடத்தி வருகிறது. இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும் விதமாக இந்த கதையை அருமையாக எழுதி இயக்கி உள்ளார் வசந்தபாலன்.
வெப்சீரிஸ் எப்படி இருக்கு?: தமிழில் சமீப காலமாக சூழல், விலங்கு, வதந்தி போன்ற பல நல்ல வெப்சீரிஸ்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. சினிமா இயக்குநர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் நடிக்கும் வெப்சீரிஸ்களை பார்க்கவே தரமாகவும் கவனம் ஈர்க்கும் விதமாகவும் உள்ளது. அரசியல் கதைக்களம் கொண்ட வெப்சீரிஸ் என்பதால் கடைசி வரை அந்த போர்ஷன் ரொம்பவே சுவாரஸ்யமாகவும் அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டும் விதமாகவே செல்கிறது. நடிகர்கள் அனைவரும் பிரபலமான நடிகர்கள் என்பதால் யாருடைய நடிப்பிலும் எந்தவொரு குறையும் இல்லாமல் வெப்சீரிஸ் முழுக்கவே த்ரில்லிங்காகவே நகர்கிறது.

பிளஸ்: ஆடுகளம் கிஷோர் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டுகிறார். ஷீ வெப்சீரிஸை தொடர்ந்து இந்த வெப்சீரிஸிலும் அவருக்கு லீடு ரோல் என்பதால் ஒவ்வொரு சீனிலும் மனுஷன் நடிப்பில் மிரட்டுகிறார். பரத், தர்ஷா குப்தா, ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன் என பலரது நடிப்பு மற்றும் ஜெயமோகனின் வசனங்கள் வெப்சீரிஸுக்கு பலமாக உள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசையும் பக்க பலமாக உள்ளது.
மைனஸ்: வழக்கம் போல எல்லா வெப்சீரிஸ்களுக்கும் நடக்கும் அதே லெந்த் பிரச்சனை இந்த வெப்சீரிஸிலும் உள்ளதை தவிர்க்க முடியவில்லை. 6 எபிசோடுகளில் முடிக்க வேண்டிய கதையை நீளத்துக்காக நீட்டி 8 எபிசோடுகளாக கொண்டு சென்றதை தவிர்த்து இருக்கலாம். மேலும், சில இடங்களில் சில குழப்பங்களும் கதை ஓட்டத்துக்கு தடையாக இருக்கிறது. சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் அரசியல் த்ரில்லர் வெப்சீரிஸாக இந்த வெப்சீரிஸை நிச்சயம் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். இந்த வாரம் தியேட்டரில் விஜய் குமார் நடித்த எலக்சன் படமும் வெளியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. தேர்தலை மையப்படுத்தி பல அரசியல் படங்கள் உருவான நிலையில், இந்த அரசியல் வெப்சீரிஸும் உருவாகி இருக்கிறது. கடந்த வாரம் அமீர் நடித்த உயிர் தமிழுக்கு படமும் அரசியல் நய்யாண்டி படமாக வெளியாகி ஓடாமல் போனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











