தங்கம் படத்தின் ஓடிடி திரை விமர்சனம்... அமேசான் சப்ஸ்கிரைபர்களுக்கு பரபரக்கும் க்ரைம் த்ரில்லர்!
சென்னை: மலையாளத்தில் உருவான தங்கம் திரைப்படம் ஜனவரி 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பிஜு மேனன், வினித் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கிரிஷ் குல்கர்னி, கலையரசன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தங்கம் படத்தின் கதையை ஷ்யாம் புஷ்கரன் எழுதியுள்ள நிலையில், அவருடன் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
சஹீத் அராபத் இயக்கியுள்ள இந்தப் படம் திரையரங்குகளை தொடர்ந்து அமேசான் ப்ரைம் தளத்திலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரகசியமான கோல்டு மார்க்கெட்டிங்
வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து படங்கள் இயக்குவதில் சேட்டன்மார்கள் எப்போதுமே கெட்டிக்காரர்கள். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக புதுமையான கதைகளை படமாக்கி வரும் மலையாள திரையுலகில் இருந்து, கோல்டு மார்க்கெட்டிங் குறித்த பல ரகசியங்களை பேசும் படமாக வெளியாகியுள்ளது தங்கம். ஷ்யாம் புஷ்கரனின் கதைக்கு இயக்குநர் சஹீத் அராபத் திரையில் உயிர் கொடுத்துள்ளார் எனலாம்.

தங்கம் படத்தின் கதை இதுதான்
முத்து என்ற பாத்திரத்தில் பிஜு மேனன், கண்ணன் கேரக்டரில் வினீத் ஸ்ரீனிவாசன். இவர்களில் பிஜு மேனன் தங்க நகைகள் செய்து வருகிறார், வினீத் ஸ்ரீனிவாசன் அவைகளை மார்க்கெட்டிங் செய்து பணம் கலெக்ஷன் செய்து வருகிறார். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் கோவை உள்ளிட்ட சில பகுதிகள் முதல் மும்பை வரை விரிந்து கிடக்கிறது இவர்களின் சாம்ராஜ்யம். பிஜு மேனன், வினீத் ஸ்ரீனிவாசன் அவர்களது நண்பர் என மூன்று பேரும் ஒருநாள் கோவை செல்கிறார்கள்.

மும்பையில் மர்ம மரணம்
அங்கிருந்து வினீத் மட்டும் தங்கம் சப்ளை செய்ய போகும் போது முத்துப்பேட்டை போலீஸாரிடம் மாட்டிக் கொள்கிறார். அங்கே என்ன நடந்தது என்ற மர்மங்கள் பிஜு மேனனுக்கு தெரியவரும் முன்பே, மும்பை செல்லும் வினீத் ஸ்ரீனிவாசன் மர்மமான முறையில் அவர் தங்கியிருந்த லாட்ஜில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்படுகிறார். வினீத் கொலை செய்யப்பட்டரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா?. கொலை என்றால் அதனை யார் செய்திருக்க வேண்டும், தற்கொலை என்றால் ஏன் வினீத் ஏன் அப்படி செய்ய வேண்டும்?. இந்த மர்ம முடிச்சுகளுக்கு விடை தெரியும் கதை தான் தங்கம்.

பரபரக்கும் க்ரைம் திரில்லர்
முதல் அரை மணி நேரம் மெதுவாக நகரும் திரைக்கதை, வினீத் ஸ்ரீனிவாசன் மும்பை சென்றதும் ஜெட் வேகத்தில் பறக்கிறது. கேரளா - கோவை - முத்துப்பேட்டை - மும்பை - மீண்டும் முத்துப்பேட்டை என ரங்கராட்டினமாக சுற்றுகிறது திரைக்கதை. கேரளாவைச் சேர்ந்த வினீத் மும்பையில் சடலமாக மீட்கப்படுகிறார். விசாரணையை தொடங்கும் மும்பை போலீஸ், கேரளா, தமிழ்நாடு என ரவுண்டு கட்டி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கின்றனர்.

போட்டிப் போட்டு நடிப்பு
உடலில் தங்க நகைகளை கட்டிக்கொண்டு மார்க்கெட்டிங் போகும் வினீத், அந்த பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இயல்பாகவும் கலகலப்பாகவும் நடித்து ரசிக்க வைக்கிறார். தனது குடும்பத்திற்காக அவர் எடுக்கும் விபரீத முடிவு க்ளைமேக்ஸ் காட்சியில் கண்கலங்க வைக்கிறது. நண்பனுக்காக நள்ளிரவில் முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் செல்வதாகட்டும். நண்பனை யார் கொலை செய்திருப்பார் என்ற தவிப்பில் மும்பை போலீஸாருடன் சுற்றி வரும் காட்சிகள். இறுதிக் காட்சியில் மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டருடன் விரக்தியில் பேசும் காட்சிகள் என பல இடங்களில் அப்ளாஷ் அள்ளுகிறார்.

கலக்கும் கிரிஷ் குல்கர்னி
முக்கியமாக மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சகல்கர் கேரக்டரில் வரும் கிரிஷ் குல்கர்னி நடிப்பில் மிரட்டியுள்ளார். முத்துப்பேட்டை போலீஸ் அதிகாரிகளை மடக்கும் காட்சிகள், சிறையில் விசாரணை நடத்தும் சீன், இறுதிக் காட்சியில் பிஜு மேனனிடம் உண்மையை விவரிக்கும் இடம் என பல இடங்களில் சிங்கிளாக ஸ்கோர் செய்துள்ளார். ரஃப் அன்ட் டஃப்பாகவும் அதேநேரம் பிரில்லியண்டாகவும் விசாரணை நடத்தும் காட்சிகள் தான் தங்கம் படத்தின் மாஸ் எனலாம்.

ஓடிடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்
வினித் ஸ்ரீனிவாசனின் மனைவியாக அபர்ணா பாலமுரளி, அப்பாஸ் கேரக்டரில் கலையரசன் என ஒவ்வொரு கேரக்டரும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. கெளதம் சங்கரின் ஒளிப்பதிவு, பிஜிபாலின் பின்னணி இசை, கிரன் தாஸின் எடிட்டிங் என அனைத்துமே தங்கம் படத்திற்கு தரம் கூட்டியுள்ளன. அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் தங்கம் ஓடிடி ரசிகர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











