OTT: ஹிட்லர்.. சர்வாதிகாரியின் மறுபக்கம்.. நடுங்க வைக்கும் உண்மைகள்! ஓடிடியில் எங்கே பார்க்கலாம்?
சென்னை: உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் அடால்ஃப் ஹிட்லர். முதலாம் உலகப் போரில் போர் கருவிகள், மருந்துகள் போன்றவற்றை முகாமிற்கும் போர் நடக்கும் இடத்திற்கும் கொண்டு செல்வதும் வருவதுமாக இருந்த ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் கதாநாயகன் மற்றும் வில்லனாக மாறுகிறார். முதல் உலகப் போரில் தனது ஜெர்மனி நாடு தோற்றதால் ஏற்றபட்ட வெறி, அவரை இரண்டாம் உலகப்போரை உருவாக்க காரணமாக மாற்றியது. கொத்துக் கொத்தாக லட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்.
ஹிட்லரின் வாழ்க்கை அவர் வாழ்ந்த காலகட்டத்திலேயே படமாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் படமாக்கப்பட்டு வருகிறது. ஹிட்லர் குறித்து பல புத்தகங்கள் இருக்கின்றன, ஒவ்வொன்றும் பல உண்மைகளை கட்டவிழ்கின்றன. அவரது மரணம் தொடர்பாக சொல்லப்படும் தகவல்கள் கூட, நம்பப்படுகிற தகவல்கள் என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் குறித்தும் அவை எந்தெந்த ஓடிடி தளங்களில் உள்ளது என்பது குறித்தும் பார்க்கலாம்.

Downfall: இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் ஹிட்லரின் கடைசி 10 நாட்களை மிகவும் தத்ரூபமாக விவரிக்கும் படமாக உள்ளது. குறிப்பாக ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பதுங்கு குழியில் எப்படி எல்லாம் நாட்களைக் கழித்தார் என்பது குறித்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் இந்த படம் பெரும் பாராட்டைப் பெற்றது. அமேசான் பிரைம் மற்றும் ஆப்பிள் டிவி என இரண்டு ஓடிடி தளங்களில் உள்ளது. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ஹிட்லராக நடித்த புருனோ கான்ஸ் ஹிட்லரின் தனிப்பட்ட பேச்சு மற்றும் உடல் மொழியை பிரதிபலிக்கும் ஒரு ரகசியை டேப்பை பலமுறை கேட்டு பயிற்சி எடுத்து நடித்தாராம்.
Jojo Rabbit: இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டுதான் வெளியானது. இது ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை நேரடியாக பிரதிபலிக்கவில்லை என்றாலும், படமாக்கப்பட்ட விதம் பாராட்டுக்குரியதாக அமைந்தது. ஒரு சிறுவனின் கற்பனை நண்பனாக ஹிட்லர் வருவது போல படமாக்கப்பட்டுள்ளது. படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை நையாண்டி தனமாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் என்றால் இந்த படத்தை இயக்கிய இயக்குநர் தைகா வைதிதி, ஹிட்லர் தேடித் தேடிக் கொன்ற யூத வம்சாவளியைச் சேர்ந்தவர். இது மட்டும் இல்லாமல், இயக்குநர் தைகா வைதிதியே ஹிட்லராகவும் நடித்திருந்தார். இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது.

The Great Dictator: 1940ஆம் ஆண்டு அதாவது ஹிட்லர் உயிருடன் இருக்கும் காலகட்டத்திலேயே அவரை கிண்டல் செய்து உருவாக்கப்பட்டு, வெளியான படம் தான் தி கிரேட் டிக்டேட்டர். ஹிட்லர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் இந்த படம் எடுக்கப்பட்டதால் அவரது கதாபாத்திரத்தின் பெயர் அடினோய்ட் ஹிங்கெல் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இதில் ஹிட்லராக சார்லி சாப்லின் நடித்திருப்பார். இந்தப் படம் உருவானபோது அமெரிக்கா இன்னும் போரில் இறங்கவில்லை. ஹிட்லரின் கொடுமைகளை அப்போதே துணிச்சலாக வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்தப் படம். ஹிட்லர் இந்தப் படத்தை ரகசியமாக பார்த்தார் என்றும் கூறப்படுகிறது. இதை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
Valkyrie: ஹிட்லரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாக நேரடியான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் வால்கெய்ரி. இந்த படத்தின் கதை கடந்த 1944ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி ஹிட்லரை கொல்ல நடைபெற்ற "Operation Valkyrie" என்ற ரகசிய திட்டத்தை மையமாகக் கொண்டது. கிளாஸ் வான் ஸ்டாஃபென்பெர்க் என்ற ஜெர்மனி போர் வீரர் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியால் ஜெர்மனி அழியக்கூடாது என்று நினைக்கிறார். வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் ஹிட்லரைக் கொன்றுவிட்டு ஹிட்லர் இல்லாத ஜெர்மனியை உருவாக்க போடப்பட்ட திட்டம் தான் இந்த படத்தின் கதை. இந்த சதித்திட்டத்தில் இருந்து தப்பிக்கும் ஹிட்லர், திட்டம் தீட்டிய அனைவரையும் கொல்கிறார். உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லை. டாம் குரூஸ் நடித்துள்ளார். படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











