பார்க்க இரண்டு கண்கள் பத்தாது.. அவ்ளோ அழகு - ஆஸ்கர் விருதுடன் The Elephant Whisperers
சென்னை: ஓடிடியில் வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப்படத்தில் நடித்த பொம்மனும், பெல்லியும் ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருக்கிறது முதுமலை புலிகள் காப்பகம். அங்கு தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் மற்றும் பெல்லி என இரண்டு யானை பராமரிப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் ரகு என்ற யானையையும் அம்மு என்ற யானையையும் பராமரித்தார்கள்.

The Elephant Whisperers ஆவண குறும்படம்
தெப்பக்காடு யானைகள் முகாமில் ரகு என்ற யானை குட்டியை வளர்த்த பொம்மனும், பெல்லியும் அந்த யானைக்குட்டியை தங்களது சொந்த பிள்ளை போலவே வளர்த்தனர். அதேபோல் அம்மு என்ற யானைக்குட்டியையும் அவர்கள் வளர்த்தார்கள். இரண்டு யானை குட்டிகளும், பொம்மனும், பெல்லியும் சொல்வதை அச்சு பிசகாமல் கேட்கும் அளவு உணர்வில் கலந்துவிட்டன. அதுதொடர்பான ஆவண குறும்படம் The Elephant Whisperers என்ற பெயரில் கார்த்திகி என்பவரால் உருவாக்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வென்ற ஆவண குறும்படம்
இந்த ஆவண குறும்படமானது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும். மிகச்சிறந்த ஆவண படங்களில் இதுவும் ஒன்று என புகழாரம் சூட்டி ஆருடம் கூறினர். அவர்களது ஆருடம் பலிக்கும்விதமாக The elephant whisperersக்கு சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. அதனை படத்தின் இயக்குநர் கார்த்திகி பெற்றுக்கொண்டார்.

ஆஸ்கர் விருதை தூக்கிய பொம்மன், பெல்லி
இந்நிலையில் ஆவண குறும்படத்தில் நடித்தவர்களும் , யானைகளின் பராமரிப்பாளர்களுமான பொம்மன், பெல்லி ஆகியோர் ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், அந்த ட்வீட்டில், உலகம் முழுவதும் அன்பை பரப்பும் The Elephant Whisperersக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளது. இருவரும் ஆஸ்கருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

இருவரும் ஆஸ்கர் மேடையில் ஏன் இல்லை?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்தான் சிறந்த ஆவண குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை The Elephant Whisperers பெற்றது. எனவே அதனை இயக்குநர் கார்த்திகி மேடை ஏறி பெற்றுக்கொண்டார். அவருக்கு வாழ்த்துகள் பலரும் தெரிவித்தாலும், ஆஸ்கர் விழாவுக்கு பொம்மனையும், பெல்லியையும் எப்பாடு பட்டாவது கார்த்திகி அழைத்து சென்றிருக்க வேண்டும். அவர்களை மேடை ஏற்றி சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என சிலர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஊக்கத் தொகை அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்
இதற்கிடையே ஆஸ்கர் வென்ற ஆவணப் பட இயக்குநர் கார்த்திகியை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். அதேபோல் யானை பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோருக்கு ரூ ஒரு லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











