The Monkey OTT Review: தி மங்கி விமர்சனம்.. கொடூரக் கொலைகளை செய்யும் குரங்கு பொம்மை..மிஸ் பண்ணாம பாருங்க
சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ள படம் தி மங்கி. 1980இல் எழுத்தாளர் ஸ்டீபன் கிங் மூலம் எழுதப்பட்ட ஒரு பேய்க் கதைதான் தி மங்கி படத்தின் மூலக்கதை. பேய்க் கதையை அப்படியே படமாக எடுக்காமல், சம காலத்திற்கு ஏற்ற சில மாற்றங்களைச் செய்து படத்தை கொடுத்துள்ளது படக்குழு. இந்த கதையை வைத்து ஏற்கனவே 'மங்கி ஷைன்ஸ்' என்ற படம் 80களிலேயே வெளியாகி இருந்தாலும், கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த படம் எப்படி உள்ளது. படம் பயத்தை உருவாக்கியதா இல்லையா என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இரட்டைக் குழந்தைகள் உள்ளார்கள். அப்பா விட்டுச் சென்ற பின்னர் அவர்களை அவரது அம்மாதான் பராமரித்து வருகிறார். அப்பா அவர்களை விட்டுச் சென்றாலும் அவரது பழைய பொருட்கள் வீட்டில் அப்படியே உள்ளது. அப்படி அப்பா விட்டுச் சென்ற பொருட்களில் ஒரு பொருளாக இருக்கிறது, ஒரு குரங்கு பொம்மை. இந்த குரங்கு பொம்மையை எடுக்கும் அந்த இரட்டையர்கள் அதன் சாவியை இயக்குகிறார்கள். சாவி இயக்கப்பட்ட பின்னர் குரங்கு பொம்மை எப்போது இயங்கினாலும், அது இயங்கி முடிந்த பின்னர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுவார்.

சபிக்கப்பட்ட குரங்கு பொம்மை: அதே நேரத்தில் அந்த சாவியை முதலில் இயக்கியவரை அந்த குரங்கு பொம்மை கொல்லாது. இரட்டைச் சகோதர்கள் என்றாலும் அவர்களுக்குள் ஒருவரை ஒருவருக்கு பிடிக்காது. எனவே இந்த குரங்கு பொம்மை வைத்தை ஒருவரை ஒருவர் கொல்லப் பார்க்கிறார்கள். இதற்கிடையில் குரங்கு பொம்மையை அவர்களே ஒரு கிணற்றில் போட்டுவிடுகிறார்கள். இறுதியாக குரங்கு பொம்மையை வைத்து யார் யாரைக் கொன்றார்கள் என்பதுதான் மீதிக்கதை.
வித்தியாச வித்தியாசமா கொலைகள்: படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை ஹாரர் படங்களை விரும்புகிறவர்களுக்கு விருந்துதான். ஒவ்வொரு கொலையும் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு காட்சியாக காட்டியுள்ளார் படத்தின் இயக்குநர் ஆஸ்குட் பெர்கின்ஸ். படத்தில் கதாநாயகனாக நடித்த தியோ ஜேம்ஸ் இரட்டையர்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். இரட்டையர்களில் ஒருவர் கொல்லப்பட்டுவிட்டார் இனி அவ்வளவுதான் என நினைக்கும் போது கிளைமாக்ஸில் ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு காட்சியை வைத்து முடித்திருப்பார் இயக்குநர்.

படம் எப்படி இருக்கு?: ஹாரர் படத்திற்கு ஏற்ற திகிலை தனது இசை மூலம் ரசிகர்களுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல் படத்திற்கும் பலம் சேர்த்துள்ளார், ஈடோ வான் பிரீமென். அதேபோல் தனது கேமராவால் படத்தின் திரைக்கதையை பலமாக்கியுள்ளார் நிகோ அகுய்லர். மொத்தத்தில் படம் தரமான ஹாரர் படமாக உள்ளது. படத்தில் ஒவ்வொரு கொலையும் வித்தியாச வித்தியாசமாக கொல்லப்படுவது மட்டுமல்லாமல் கொலைகள் நடப்பதை காட்சிப்படுத்தியதும் திகிலை அதிகரிக்கும் ஒன்றாக உள்ளது. வீட்டில் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் இரவு நேரத்தில் இந்த படத்தை, தரமான ஹோம் தியேட்டர் சவுண்ட் சிஸ்டத்துடன் பார்க்க பக்கவான படம். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த படத்தை குழந்தைகள், இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பமாக உள்ள பெண்கள் தவிர்ப்பது ரொம்பவும் நல்லது. இந்த படம் தமிழ் டப்பிங்கிலும் உள்ளது.


Click it and Unblock the Notifications











