ஃபர்ஸ்ட் நைட்ல வரும் பிரச்னை... கலகலப்பான ஒரு பீல் குட் காமெடி படம்
மும்பை: காதலர் தினத்தையொட்டி பிப்.14ஆம் தேதி வெளியன தூம் தாம் திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் ரிஷப் சேத் இயக்கத்தில் உருவாகியுள்ள தூம் தாம் திரைப்படத்தில் யாமி கெளதம், நடிகர் பிரதிக் காந்தி ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். படம் தொடங்கும் 10 நிமிடம் கதை என்னவென்று புரியாமல் நகர்ந்தாலும், கலகலப்பான காமெடியுடன் படம் நெடுக சிரிப்பு வெடி சத்தம் பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.
நடிகை யாமி கெளதம்: தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தின் மூலம் யாமி கெளதம் நடிகையாக அறிமுகமானார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மட்டும் நடித்து வந்தார் யாமி கெளதம். பின்னர், காபில், சர்கார் 3, உரி சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற படங்களின் மூலம் பிரபலம் ஆனார். பின்னர், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள தூம் தாம் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கலகலப்பான காமெடி கதை: தூம் தாம் படத்தை பார்க்கும் போது நீண்ட நாள் கழித்து ஒரு கலகலப்பான காமெடி படத்தை பார்த்தது போன்ற உணர்வை தரும். இப்படி விழுந்து விழுந்து சிரித்தபடி ஒரு படம் பார்த்து எத்தனை நாட்களானது என்பது கூட மறந்து போயிருக்கும். ஒரு அம்மாஞ்சி பையனுக்கும் அடக்க ஒடுக்கமான (அப்படி நம்பப்படும்) பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது.
முதலிரவிலேயே இருவருக்கும் ஒரு பிரச்சினை வந்துவிடுகிறது. அந்த பிரச்சினையை இருவரும் சேர்ந்து தீர்க்க வேண்டிய அவசியம். தேடி வந்த பிரச்னையில் இருந்து இருவரும் தப்பினார்களா இல்லையா என்பதே கதை. சுமாரான கதைதான், போரடிக்காமல் காதல், துரோகம் என நிமிடத்திற்கு நிமிடம் சிரித்து கொண்டே இருக்கலாம். 90ஸ் ஸ்கேம் வெப் தொடர் மூலம் பிரபலமானவர் பிரதிக் காந்தி. இப்படத்தில் தன் கதாபாத்திரத்தல் பயந்த சுபாவம் கொண்ட இளைஞராகவும், வெளியுலகத்தை காணாத ஒரு வெட்னரி டாக்டராகவும் நடித்துள்ளார்.

பர்ஸ்ட் நைட்டில் வரும் பிரச்னை: இருவீட்டார் சம்மதத்துடன் வீர் பட்டாருக்கும் - கோயலுக்கும் திருமணம் சீரும் சிறப்புமாக முடிகிறது. ஃபர்ஸ் நைட்டின் போது யாரோ ஒருவர் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறக்கும் வீர் - கோயல் தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. சார்லி எங்கே என்று வீரிடம் வில்லன்கள் கேட்க, யார் அந்த சார்லி எனக்கு தெரியாது என குழம்பி போகிறார். பின்னர், வில்லன்களிடம் இருந்து சமாளித்து இருவரும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து தப்பித்து ஓடுகிறார்கள், வில்லன்கள் துரத்துகின்றனர்.
வில்லன்கள் துரத்தும் நேரத்தில் நாயகி கோயல் (யாமி கெளதம்) சாதுர்யமாக செயல்பட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டி தப்பிக்கின்றனர். பின்னர், யார் அந்த சார்லி என தேட ஆரம்பிக்கின்றனர். இதனிடையே, வில்லன்களில் ஒருவன் வீர், கோயல் குடும்பத்தினரை சந்தித்து இரவு முழுக்க ப்ளே கார்ட்ஸ் விளையாட செய்து டார்ச்சர் செய்கிறான். வில்லன்களும் சார்லியை மரியாதையாக கொடு என மிரட்டுகின்றனர்.
பெண் சுதந்திரம் பேசும் நாயகி: படம் தொடங்கும் முன்பே நடக்கும் ஒரு கொள்ளை சம்பவம், அதற்கும் இந்த சார்லிக்கும் என்ன தொடர்பு என்பது தான் க்ளைமாக்ஸ். சார்லி என்பது Pendrive. இதை ஒரு பக்கம் வில்லன்கள் குரூப்பும், மறுபக்கம் நாயகன் வீர், நாயகி கோயலும் சேர்ந்து தேடி வருகின்றனர். அப்போது, கோயலின் உண்மை முகம் தெரிய வருகிறது. அவர், நல்ல ரேஸர் மற்றும் ஒருவரை காதலித்து பிரேக் அப் செய்துள்ளார் என்பதை அறிந்து வீர் அதிர்ச்சியடைகிறார். ஏன் என்னிடம் மறைத்தாய், உண்மையை சொல்லியிருக்கலாம் என நாயகியிடம் துருவி துருவி கேட்கும் போது, கோயல் கோபமடைந்து நான் மட்டும் இல்லை, இங்க இருக்கும் பல பெண்கள் வீட்டுக்குள் நடித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.
எங்கே பெண்களுக்கு பிடித்ததை செய்ய விடுகின்றனர். எனக்கு ரேஸிங் போறது ரொம்ப பிடிக்கும், இரவு நேரத்துல தான் வீட்டை விட்டு வெளியே வந்து எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்கிறேன் என தெரிவிக்கிறார். எல்லா தவறுகளை செய்வது ஆண்கள் தான், ஆனால், தண்டனை அனுபவிப்பவது பெண்கள் என கோயல் நாயகன் வீரிடம் தெரிவிப்பார். பிடிக்காமல் தான் நடிகை யாமி கெளதம் (கோயல்) தன்னை திருமணம் செய்துகொண்டதை வீர் தெரிந்துகொள்கிறார். பின்னர், நான் உனக்கு விவாகரத்து தருகிறேன், முதலில் இந்த Pendrive-ஐ தேடி கண்டுபிடிக்க முயற்சிப்போம் என தெரிவிக்கிறார்.
ஆண் பெண் இருவருக்கும் இருக்க வேண்டிய பரஸ்பர புரிதல். போலீஸ் திட்டமிடும் குற்றங்கள், அதில் மாட்டிக் கொள்ளும் அப்பாவிகள் என்று அட்டகாசமான திரைக்கதையை விழுந்து விழுந்து சிரித்தபடி பார்க்கலாம். இந்தி தெரிந்தவர்களுக்கு இன்னும் என்ஜாய்மென்ட்டாக இருந்திருக்கும். தமிழ் டப்பிங் திருத்தமாக, அந்தப் படத்தின் தன்மையை புரிந்து கொண்டு சிரிக்கும்படி இருந்தது. என்றாலும் இந்தி தெரிந்தவர்களுக்கு இன்னும் இந்தப் படம் நெருக்கமான உணர்வைத் தரும்.
ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் நடிகர்கள் அனைவருக்கும் ஒரே உடை, ஒரு காமெடி புரிந்து சிரித்து முடிப்பதற்குள் அடுத்த காமெடி. அதுவும் நாயகியாக நடித்திருப்பவர் தூள் கிளப்புகிறார்.


Click it and Unblock the Notifications











