OTT Gem: Thalaivar 173 கதைனு சொல்லப்படும் தி அவுட்ஃபிட் படம் எப்படி இருக்கு? தலைவர் ரசிகர்களுக்கு பிடிக்குமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 172 வது படமான ஜெயிலர் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைவர் 173 படம் குறித்த அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்குகிறார்.
சமீபத்தில் தலைவர் 173 படத்தின் கதை கடந்த 2022ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான படமான தி அவுட்ஃபிட் படத்தின் கதையை தழுவி உருவாகிறது என்று கூறப்பட்டது. தி அவுட்ஃபிட் படத்தின் மையக் கதாபாத்திரம் ஒரு தையல்காரர், அதனால் தான் தலைவர் 173 படத்தின் அறிவிப்பில் ஐந்து கத்தரிக் கோல்களை வைத்தும், பட்டன்கள், நூல்கள் உள்ளிட்டவற்றை வைத்தும் போஸ்டரை உருவாக்கி உள்ளார்கள் என்ற பேச்சும் எழுந்தது. தி அவுட்ஃபிட் படம் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகிறது. அதுவும் 99 ரூபாய் கூடுதலாக செலுத்தித்தான் இந்த படத்தை பார்க்க முடியும்.

இந்த படத்தின் கதையைத் தழுவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படம் உருவாகிறது என்ற பேச்சுக்கள் பலமாக அடிபடும் போது, படத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா? தி அவுட்ஃபிட் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். படத்தின் ஒன்லைனைப் பொறுத்தவரை, ஒரு தையல் கடைக்காரர் இருக்கிறார், அவரது கடையில் உயர் ரக ஆடைகளும் கோட்டுகளும் மட்டுமே தைக்கப்படுகிறது. இதனால் அவர் பெரிய பெரிய கேங்ஸ்டர்களுக்கும் ஆடைகள் தைத்து கொடுக்கிறார். அவரது கடை சிட்டியை விட்டு கொஞ்சம் தள்ளி இருப்பதால் ஒரு கேங்ஸ்டர் அந்த கடையின் வியாபாரத்தை பாதிக்காமல் தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தகவல் பரிமாற்ற மற்றும் பொருட்களை பரிமாற்றும் வேலையைச் செய்து வருகிறார்.
கதை: அந்த கேங்ஸ்டரின் மகனை, அந்த கேங்ஸ்டரிடம் வேலை பார்க்கும் ஒருவன் சுட்டுக் கொலை செய்கிறான். இந்த கொலை சம்பவம் தையல் கடையிலேயே நடக்கிறது. கொலை நடந்த கொஞ்ச நேரத்திற்குள் தனது மகனைத் தேடி கேங்ஸ்டரே நேரடியாக கடைக்கு வருகிறார். அதற்குள் அவரது உடலை மறைத்து வைக்கிறார், கொலை செய்தவர். காணாமல் போனதாக கருதும் தனது மகனின் கோட் அந்த கடையில் இருப்பதை பார்த்து தனது மகனுக்கு என்னமோ நேர்ந்து விட்டது என்பதை கண்டுபிடிக்கிறார் கேங்ஸ்டர். அதன் பின்னர் தனது மகனுக்கு என்ன ஆனது? கேங்ஸ்டரிடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா? கொலை செய்யப்பட்ட கேங்ஸ்டர் மகனின் உடலை எங்கு மறைத்து வைத்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

திரைக்கதை: மிக மிக மிக மிக பொறுமையாக நகரும் திரைக்கதை. அந்த தையல் கடைக்குள்ளே தொடங்கும் கதை அதே தையல் கடைக்குள் முடிந்துவிடுகிறது. கதையை நகர்த்தும் கதாபாத்திரங்கள் மொத்தமாகவே படத்தில் ஒன்பது கதாபாத்திரங்கள் தான். இது இல்லாமல் கடைக்கு கஸ்டமர்களாக வருபவர்கள் என மொத்தமாக 20 கதாபாத்திரங்களுக்குள் படம் முடிந்துவிடுகிறது. படத்தில் சண்டைக் காட்சிகள் என்று ஒன்று இல்லவே இல்லை. கிளைமாக்ஸில் வரும் சில நிமிட காட்சியும் கதாநாயகன் தன்னை காப்பாற்றிக் கொள்ள ஓடுவதாகவே உள்ளது. பொறுமையாக பார்த்தால் தரமான படம். இயக்குநர் கிரஹாம் மூர் படத்தின் ஒரு காட்சியைக் கூட இன்னும் சொல்லப்போனால் ஒரு ஃப்ரேமைக் கூட வீணடிக்காமல் படத்தை பார்த்து பார்த்து உருவாக்கி உள்ளார்.
ஆவல்: இப்படியான கதையை வைத்து, தமிழ் சினிமா போன்ற திரையுலகிற்கு அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற கமர்ஷியல் நாயகனுக்கு எப்படி மாற்றி படமாக்கப்போகிறார் என்ற ஆவல் ஏற்படத்தான் செய்கிறது. அதேபோல், இந்த படத்தை அப்படியே ரீ மேக் செய்தால் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனோ, பார்த்திபனோ நடித்தால் கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.


Click it and Unblock the Notifications











