The Rings of Power S2 Review: மெகா சீரியலே தோத்துடும் போல.. தி ரிங்ஸ் ஆஃப் பவர் சீசன் 2 விமர்சனம்!
சென்னை: பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் முதல் சீசனே ரசிகர்களை சோதித்து எடுத்த நிலையில், அதன் 2வது சீசன் எல்லாம் வந்தால் ஓடவே ஒடாது என கலாய்த்து எடுத்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி எடுத்து வைத்த படத்தை எடிட் செய்து அமேசான் பிரைமில் மீண்டும் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை இரண்டாவது சீசனின் 3 எபிசோடுகள் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகி இருக்கிறது. 4வது எபிசோடு அடுத்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. அதன் பின்னர், வாரம் ஒரு எபிசோடை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

முதல் சீசனின் முடிவில் கலாட்ரியல் உடன் நட்பு பாராட்டி வந்து ஹால் பிராண்ட் எனும் பெயரில் டிராமா போட்டதே, கதையின் மெயின் வில்லன் சவுரான் என்பது ரிவீல் செய்யப்பட்ட நிலையில், இந்த சீசனில் சவுரான் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை காட்டியுள்ளனர்.
முதல் சீசன் ரீகேப்: இரண்டாவது சீசனின் விமர்சனத்துக்குள் செல்வதற்கு முன்பாக ரிங்ஸ் ஆஃப் ஃபயர் முதல் சீசனின் கதைச்சுருக்கத்தை பார்த்து விடுவோம். ஒரு பக்கம் எல்வ்ஸ், இன்னொரு பக்கம் ராட்சதர்கள், மற்றொரு இடத்தில் மக்கள், இன்னொரு உலகில் டார்ஃப் எனப்படும் குள்ள மனிதர்கள் என வாழ்ந்து வருகின்றனர். அரக்கனான சவுரான் மத்திய பூமியை ஆட்சி செய்ய முடிவெடுக்கிறான். அதற்காக எல்வ்ஸ்களின் படை தளபதியான கலாட்ரியல் உடன் நட்பு பாராட்டி அவரையே ஏமாற்றி தனக்கு எதிராக தயாரிக்கப்படும் 3 சக்தி வாய்ந்த மோதிரங்கள் பற்றி அறிந்துக் கொள்கிறான்.
2வது சீசன் கதை: 3 எபிசோடுகள் வெளியாகி உள்ள நிலையில், அதன் கதை மற்றும் விமர்சனத்தை இங்கே காணலாம். ஹால் பிராண்ட் தான் சவுரான் என்பதை அறிந்துக் கொள்ளும் கலாட்ரியல் 3 மோதிரங்களின் சக்தியை வைத்து அவனை எதிர்க்க வேண்டும் என நினைக்க, அவருடைய நண்பனான எல்ராண்ட் இந்த மோதிரங்களை உருவாக்கும் போது நம்முடனே சவுரான் இருந்த நிலையில், அவனது சூழ்ச்சி இதில் ஒளிந்திருக்கும். அதனால் இந்த மோதிரங்களை அழித்து விட நினைக்கிறார். ஆனால், அவருடைய எண்ணம் பலிக்கவில்லை. எல்வ்ஸ்களின் அரசன், கலாட்ரியல் மற்றும் யாரிடம் அந்த மோதிரத்தைக் கொடுத்து அழிக்க எல்ராண்ட் சொன்னாரோ அவர் என மூவரும் 3 மோதிரங்களையும் அணிந்துக் கொண்டு எல்வ்ஸ்களுக்கு ஒளியை கொண்டு வருகின்றனர்.

இந்த மோதிரங்களை உருவாக்கிய கேலம்பரிடம் ஹால் பிராண்ட் ஆகவே வேஷம் போட்டு நடித்து செல்லும் சவுரான் அவரிடம் தான் பரிசுகளின் அரசன் அனாட்டர் என இன்னொரு பொய்யை சொல்லி அவரை நம்ப வைத்து மனிதர்களுக்கான சக்தி வாய்ந்த மோதிரத்தை செய்ய சொல்கிறான்.
வானில் இருந்து கீழே விழுந்த அந்த ஐ ஸ்டார் எனும் வினோதமான நபரை மாயாவிகள் சிலர் பிடித்துச் செல்கின்றனர். டார்ஃப்களின் ராஜ்ஜியத்தில் நடந்த விபத்தில் அவர்கள் ஒளியை இழக்க அவர்களுடன் நட்புக் கொண்டு மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த மோதிரத்தை உருவாக்க கேலிம்பரை சவுரான் பயன்படுத்துவதாக 3 எபிசோடுகள் நகர்கின்றன.

பார்க்கலாமா? வேண்டாமா?: பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல அரசர் காலத்து கதையாக உருவாகியிருக்கிறது. வெப்சீரிஸின் பிரம்மாண்ட கதை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினாலும், ஒவ்வொரு சீனையும் ஸ்லோ மோஷனிலும் மெகா சீரியல் போல ரொம்பவே ஸ்லோவாக கொண்டு செல்லும் விதம் ரசிகர்களை ஒரு எபிசோடு முடியவே ஒரு யுகம் ஆனது போல நினைக்க வைத்து விடுகிறது.
பரபரப்பாகும் விறுவிறுப்பாகவும் இல்லாதது மட்டும் தான் பெரிய குறையாக உள்ளது. மாயாஜால ஃபேண்டஸி கதைகளை அதன் பிரம்மாண்டத்துக்காக பார்ப்பேன் என நினைப்பவர்கல் தாராளமாக பார்க்கலாம். முதல் சீசன் பார்த்து விட்டேன் என மாட்டிக் கொண்டவர்களும் 2வது சீசனை பார்க்கலாம். அவ்வளவு எல்லாம் பொறுமையோ, டைமோ இல்ல பாஸ் என்பவர்கள் இந்த பிரம்மாண்ட மெகா சீரியல் வெப் சீரிஸை ஸ்கிப் செய்து விடலாம்.


Click it and Unblock the Notifications











