OTT Review: சத்ரபதி சிவாஜியின் தங்க சிம்மாசனத்தின் ரகசியம்?.. The Secret of the Shiledars விமர்சனம்!
சென்னை: ஜியோ ஹாட்ஸ்டாரில் ஏகப்பட்ட வெப்சீரிஸ்கள் மற்றும் படங்கள் தமிழில் இடம்பெற்றுள்ளன. கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸையே தமிழில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். மேலும், பல HBO வெப்தொடர்கள், பாராமவுண்ட் படங்கள் எல்லாம் இந்த ஓடிடியில் கொட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில், இந்த வாரம் அதில், சமீபத்தில் வெளியான புதையல் வேட்டை வெப்சீரிஸ் குறித்த விமர்சனத்தை தான் இன்று பார்க்கப் போகிறோம்.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கதைகள் சமீப காலமாக வட இந்தியர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இந்த வாரம் வெளியான சாவ்வா திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் 164 கோடி வசூலை கடந்துள்ளது. திங்கட்கிழமை வசூலையும் சேர்த்து பார்த்தால் 180 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் என்றும் பாலிவுட்டுக்கு இந்த ஆண்டு பெரிய ஓபனிங் கொடுத்துள்ள படமாக மாறி வருகிறது.

சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி சிவாஜியின் கதை தான் சாவ்வா. அதே போல, சத்ரபதி சிவாஜியின் புதையலை தேடும் வெப்சீரிஸாக இந்தியாவின் இண்டியானா ஜோன்ஸ் போல செம த்ரில்லிங்காகவும் க்ரிப்பிங்காகவும் உள்ள The Secret of the Shiledars வெப்சீரிஸை பார்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
தி சீக்ரெட் ஆஃப் தி சிலேதார்ஸ் கதை: சிலேதார்களின் ரகசியங்கள் என்கிற அர்த்தத்துடன் உள்ள இந்த வெப்சீரிஸை மூஞ்சியா எனும் இந்தி படத்தை எடுத்து ஹிட் கொடுத்த இயக்குநர் ஆதித்யா சர்போதார் இயக்கியுள்ளார். அப்பா, அம்மாவுடன் காரில் செல்லும் சிறுவன் ஒருவன் செல்கிறான். அப்போது அந்த காரை லாரி ஒன்று இடித்து பாலத்தில் இருந்து தள்ள, நீருக்குள் கார் விழுகிறது. அந்த விபத்தில் இருந்து தனது மகனை அப்பா உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார். அந்த மகன் தான் கதையின் நாயகன். கடைசி சிலேதாரான டாக்டர் ரவியிடம் (ராஜீவ் கண்டல்வேல்) சத்ரபதி சிவாஜியின் தங்க அரியணை மற்றும் பொக்கிஷங்களை பாதுகாக்கும் பணியை புகழ்பெற்ற நீதிபதி கிருஷ்ணகாந்த் வழங்குகிறார். அந்த பொக்கிஷத்தை அடைய அந்த மாநிலத்தின் கவர்னரான ராமசந்திரன் (கண்ணன் அருணாச்சலம்) அபகரிக்க திட்டமிடுகிறார். அதற்காக அந்த நீதிபதியை தனது ஆட்களை வைத்து கொலை செய்கிறார். அந்த கொலை குற்றத்தில் ஹீரோவை சிக்க வைக்கிறார். அதிலிருந்து தப்பித்து ஓடும் ஹீரோ வீர சிவாஜியின் பொக்கிஷத்தை கண்டுபிடித்தாரா? அதை வில்லன்களிடம் இருந்து பாதுகாத்தாரா? என்பது தான் இந்த விறுவிறுப்பான வெப்சீரிஸின் கதை.

சிவாஜி மகாராஜாவின் பொக்கிஷம்: சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பொக்கிஷத்தை காலம் காலமாக அவரது மெய்க்காப்பாளர்களான சிலேதார்கள் பாதுகாத்து வருகிறார்கள் என்றும் காரில் முதல் காட்சியில் ஹீரோவின் குடும்பமே உயிரிழக்க காரணமே நாயகனின் அப்பாவும் ஒரு சிலேதார் தான் என்பதால் தான். கடைசி சிலேதார் நீ தான் என்றும் பொக்கிஷத்தை பாதுகாப்பது தான் உனது கடமை என நீதிபதி பொறுப்பை ஹீரோவிடம் ஒப்படைக்கிறார். ஒவ்வொரு புதிரையும் கண்டுபிடித்து தமிழில் வந்த ஐந்தாம் வேதம் வெப்சீரிஸ் பாணியில் ஹீரோ சிவாஜி மகாராஜாவின் பொக்கிஷத்தை தனது தம்பி ஆதி மற்றும் பிரியல் எனும் அண்டர்கவர் போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறார். கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த ஆசிஷ் வித்யார்த்தி சிவாஜி மகாராஜாவின் அரியணை பற்றி கண்டறிய முயலும் வரலாற்று ஆசிரியராக வந்து ஹீரோவுக்கு உதவுகிறார். மாநில கவர்னரையே வில்லனாக்கிய விதம் ராஜ் பவனில் இருக்கும் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள புதையல் குறித்த குறியீடுகள், அதை வைத்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக தேடி அலையும் ஹீரோவின் டீம் என வெப்சீரிஸ் சுவாரஸ்யமாகவே செல்கிறது.

பார்க்கலாமா? வேண்டாமா?: இத்தனை பெரிய வரலாற்று புதையலை கண்டுபிடிக்க ஹீரோ அனைத்தையும் சர்வ சாதாரணமாக செய்வதும், வில்லன் ஆட்கள் எல்லாம் வெறும் டம்மி பீஸாகவும் இருப்பதும் பெரிய குறையாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வெறும் புதிரை தேடி அலையும் கதைக்கு மட்டுமே இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். கிளைமேக்ஸில் சிவாஜி மகாராஜாவின் சிம்மாசனத்தையே காட்டும் காட்சிகள் எல்லாம் புல்லரிக்கும் விதமாக உள்ளது. கவர்னரை தாண்டி ஒரு மெயின் வில்லனை காட்டுவதை எல்லாம் அந்த கேரக்டர் வரும்போதே கெஸ் செய்துவிட முடிகிறது. இப்படி சில குறைகளும் ஓட்டைகளும் வெப்சீரிஸில் இருந்தாலும், புதையல் வேட்டை படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு இதுவொரு பக்காவான படையலாகவே உள்ளதால் கண்டிப்பாக பார்க்கலாம். வெறும் 6 எபிசோடுகளில் ஆரம்பித்தால் முடித்துவிடும் அளவுக்கு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்த வெப்சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது.


Click it and Unblock the Notifications











