K Drama Review: விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத கொரிய வெப்சீரிஸ்.. தி வொர்ஸ்ட் ஆஃப் ஈவில் விமர்சனம்!
சென்னை: உலகளவில் ரசிகர்களை கவர்ந்து வரும் கொரிய வெப்சீரிஸ்கள் தமிழர்களையும் சமீப காலமாக அதிகளவில் கவர்ந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் வெப் சீரிஸ் தான். அதன் முதல் பாகமே கொரிய வெப்சீரிஸ்கள் பக்கம் ரசிகர்களை கடத்திய நிலையில், 2வது சீசனும் அந்த வேலையை இன்னும் அதிகமாக பார்த்து வருகிறது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மட்டுமின்றி அனைத்து ஓடிடி தளங்களும் கொரிய வெப்சீரிஸ்களை அதிகளவில் களமிறக்கி ரசிகர்களை கட்டிப்போட்டு வருகின்றன. கொரிய படங்களை போன்று விறுவிறுப்புக்கும் ஆக்ஷனுக்கும் கொஞ்சம் கூட பஞ்சமே இல்லாத ஒரு வெப்சீரிஸ் குறித்த விமர்சனத்தை தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த வெப்சீரிஸுக்கு IMDB ரேட்டிங்கில் 8.3 ஸ்டார்கள் கிடைத்துள்ளன என்பது கூடுதல் தகவல்.
தி வொர்ஸ்ட் ஆஃப் ஈவில் கதை: விஜய்யின் போக்கிரி படத்தை போல அண்டர்கவர் ஆப்பரேஷன் செய்யும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதை தான் இந்த தி வொர்ஸ்ட் ஆஃப் ஈவில் வெப்சீரிஸின் கதை. சீனாவில் இருந்து போதைப் பொருட்களை ஜப்பானிற்கு விற்கும் ஒரு கொரிய மாஃபியா கும்பலை பிடிக்க அவர்களில் ஒருவராக உள்ளே நுழையும் ஹீரோ ஜி சாங் வூக் எப்படி சீனா, ஜப்பான் மற்றும் கொரிய போதைப் பொருள் மாஃபியாக்களை காலி செய்கிறார் என்பதை சீட் எட்ஜ் த்ரில்லராக மொத்தம் 12 எபிசோடுகளாக நீட்டி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹான் டாங் வூக்.

ஸ்குவிட் கேம் நடிகர்: தென் கொரியாவின் கிரைம் சீரிஸுக்கு உலகளவில் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். இந்த வெப்சீரிஸில் இரண்டு பெரிய கொரிய நடிகர்கள் நடித்துள்ளனர். சவுண்ட் ஆஃப் மேஜிக் மூலம் பிரபலமான ஜி சாங் வூக் மற்றும் ஸ்குவிட் கேம் வெப்சீரிஸில் போலீஸாக வரும் வி ஹா ஜூன் என இருவரும் நடிப்பில் மிரட்டியுள்ளனர். பத்து தல படத்தை போல மாஃபியா டான் பற்றி தெரிந்துக் கொண்டு அவரை வியக்கும் போலீஸ் அதிகாரியாக ஹீரோ மாறுவதும் அதன் பின்னர் நடக்கும் ட்விஸ்ட்டுகளும் என வெப்சீரிஸ் கதை பின்னப்பட்டுள்ள விதம் சிறப்பு.

பார்க்கலாமா? வேண்டாமா?: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த வெப்சீரிஸ் உள்ளது. 1990களின் காலக்கட்டத்தில் அமைக்கப்பட்ட கதையாக உருவாகியுள்ள இந்த டிரக் மாஃபியா கேங்ஸ்டர் கதையில் ஒரு அண்டர்கவர் போலீஸ் என்னவெல்லாம் செய்து அந்த மொத்த யூனிட்டையும் காலி செய்தார். அவர் போட்ட திட்டத்தில் வெற்றிப் பெற்றாரா? கடைசியில் என்ன ஆனது? தீமை தான் வெல்லும் என்கிற தீமில் செம ட்விஸ்ட் மற்றும் திருப்புமுனைகளுடன் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை கண்டிப்பாக இந்த பொங்கல் விடுமுறைக்கு கண்டு ரசிக்கலாம். வொர்த்தான வெப்சீரிஸ் தான்.


Click it and Unblock the Notifications











