This Week OTT release :இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்க்க ரெடியா மக்களே?
சென்னை : ஓடிடியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பான பல படங்களை பார்க்க முடிகிறது. திரையரங்குகளில் பார்க்க முடியாத ரசிகர்கள் காத்திருந்து ஓடிடியில் படங்களை பார்ப்பதும் நிகழ்ந்து வருகிறது.
இநத் வாரமும் சிறப்பான பல படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தசரா, பத்து தல உள்ளிட்ட படங்களும் இந்த வாரம் ரிலீசாகவுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளை சேர்ந்த படங்களும் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன. வெளிநாடுகளை சேர்ந்த படங்களை பார்க்கும் ஆர்வம் கொண்ட ரசிகர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் : சினிமா என்பது கொண்டாட்டமாக மட்டுமே பார்க்கப்படுவதில்லை. அது பல்வேறு தேடல்களின் முடிவாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ரசிகர்கள் பல திரைப்படங்களை தேடித் தேடி பார்த்து வருகின்றனர். தங்களது மொழிகளில் மட்டுமில்லாமல் பல நாட்டு மொழிப் படங்களையும் இந்தத் தேடல் மூலம் அவர்கள் பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஸ்பானிஷ், கொரியன் போன்ற மொழிப் படங்கள் சினிமா காதலர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன.
ஒவ்வொரு படத்தையும் இவ்வாறு தேடி தேடி பார்ப்பதற்காக அவர்கள் அதிகமாக மெனக்கெட வேண்டியது இருந்த நிலையில், தற்போது உள்ளங்கையில் உலகம் என்பதை சாத்தியமாக்கும் வகையில், ஓடிடியில் அவர்கள் விரும்பும் படங்களை பார்த்துக் கொள்ள முடிகிறது. குறைந்த அளவில் கட்டணம் செலுத்தி, அவர்களுக்கு தேவையான ஓடிடி தளங்களை பெறுவதால், அவர்களின் விருப்பத்திற்குரிய படங்களை பார்ப்பது சாத்தியப்படுகிறது.
முன்னமே கூறியது போல, அவர்களின் சொந்த மொழிப் படங்கள், விரும்பிய ஹீரோக்களின் படங்களை மட்டுமில்லாமல் உலகத்தரத்தில் கவனம் ஈர்த்த மற்ற நாடுகளின் படங்களையும் பார்த்து, அதன் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. பிரபல இயக்குநர்கள்கூட இந்த வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அதனால்தான் அந்தப் படங்களின் தாக்கங்கள் அவர்களது படங்களில் பிரதிபலிப்பதை தவிர்க்க இயலாமல் போகிறது.
ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் பிரபலமான பல படங்கள் வெளியாகின்றன. இந்த வாரமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமில்லாமல் ஸ்பானிஷ், ப்ரெஞ்ச், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் அதிகமான படங்கள் வெளியாகியுள்ளன. முதன்மையாக சிம்புவின் பத்து தல படம் நாளைய தினம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது.

தொடர்ந்து திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்த நானியின் தசரா மற்றும் வியாவஸ்தா போன்ற படங்கள் தெலுங்கில் முறையே நெட்பிளிக்ஸ் மற்றும் ஜீ5ல் வெளியாகவுள்ளன. இதையடுத்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிட்டாடல் வெப் தொடர் பிரைம் சீரிசில் நாளைய தினம் வெளியாகவுள்ளது. இதேபோல இந்தியில் நாளைய தினம் யூ டர்ன் படமும் வெளியாகவுள்ளது. மலையாளத்தில் தாராமுகம், அந்தாரம் போன்ற படங்களும் வெளியாகவுள்ளன.
தொடர்ந்து மராத்தியில் வேத் என்ற படமும் அராபிய மொழியில் தி மேட்ச் மேக்கர் படமும் வெளியாகவுள்ளது. பிரெஞ்சில் அகா படமும் தனிஷில் தி நர்ஸ், ஆங்கிலத்தில் பீட்டர் பான் அண்ட் வெண்டி, தாய்வானில் வேவ் மேக்கர்ஸ் போன்ற படங்களும் நாளைய தினம் வெளியாகவுள்ளன. இந்த வாரம் தமிழ், தெலுங்கில் குறைவான படங்கள் இருந்த போதிலும் மற்ற நாடுகளை சேர்ந்த படங்களும் அதிகளவில் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











