This Week OTT Release: சிங்கப்பூர் சலூன் முதல் மலைக்கோட்டை வாலிபன் வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ்
சென்னை: இந்த வாரம் திரையரங்குகளில் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகவுள்ளன. இதனால் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள படங்கள், வெப் சீரிஸ்கள் என்னென்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்களுக்காக இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் லிஸ்ட் இதோ.
இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்: சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்களில் பெரிதாக சர்ப்ரைஸ் ஏதும் இல்லை. இதனால் ஓடிடி தளங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விருந்தாக அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாகின்றன.

அதன்படி தமிழில் ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. கோகுல் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரித்த இந்தப் படம், ஜனவரி 25ம் தேதி ரிலீஸானது. சிம்பு நடிக்கவிருந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்திருந்தார். அவருடன் சத்யராஜ், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்திருந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிங்கப்பூர் சலூன் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
அதேபோல் மலையாள சினிமா ரசிகர்களுக்கு மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் வெளியாகவுள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய இந்தப் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அங்கமாலி டைரீஸ், நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற தரமான படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இதனால் மலைக்கோட்டை வாலிபனும் சூப்பர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நெகட்டிவான விமர்சனங்களால் தோல்வியடைந்த மலைக்கோட்டை வாலிபன், ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
அதேபோல் இந்தி வெப் சீரிஸ்ஸான போச்சர் (Poacher) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்காகிறது. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள Poacher வெப் சீரிஸ் ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரியாமணி லீடிங் ரோலில் நடித்துள்ள பாமகலாபம் 2ம் பாகம் ஆஹா தளத்தில் வெளியாகிறது. காமெடி ப்ளஸ் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள பாமகலாபம் 2 ஓடிடி ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
நெட்பிளிக்ஸ் தளத்திலும் ஓடிடி ரசிகர்களுக்காக சில வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. இந்தி வெப் சீரிஸ்ஸான தி இந்திராணி முகர்ஜி ஸ்டோரி, கொரிய மொழியில் உருவாகியுள்ள ஸ்கூல் டேய்ஸ், ஆங்கிலத்தில் Saw X, Mea Culpa, Can I Tell You A Secret, Avatar The Last Airbender, ஸ்பானிஷ் மொழியில் Through My Window 3 ஆகிய வெப் சீரிஸ்களும் இந்த வாரம் வெளியாகின்றன.


Click it and Unblock the Notifications











