இந்த வாரம் தியேட்டர்ஸ், ஓடிடி ரிலீஸ் அப்டேட்: ரசிகர்களோட எதிர்பார்ப்பு எந்த படத்துக்குன்னு பாருங்க!!
சென்னை: ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் புதிய படங்கள் வெளியாகி வருகின்றன.
ஓடிடி தளங்களில் சில படங்கள் நேரடியாகவும், சில படங்கள் தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னரும், மேலும் வெப் சீரிஸ்களும் வெளியாகின்றன.
இந்த வாரம் மிக முக்கியமான திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாகின்றன, அதேபோல் ஓடிடியிலும் சில படங்கள் வெளியாகின்றன.

ரசிகர்களின் முதல் விருப்பம்
சினிமா ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த படங்களை தியேட்டருக்குச் சென்று பார்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர். அதிலும் பிடித்த ஹீரோக்களின் படங்கள் என்றால், திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த வாரம் இந்தியிலும் தமிழிலும் இரண்டு முக்கியமான முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகின்றன. அதேபோல், ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன.

அமீர் கானின் லால் சிங் சத்தா
இந்தியில் சமீபத்தில் வெளியான பல படங்கள் தோல்வியைத் தழுவின. மேலும், அமீர் கானும் 'தங்கல்' படத்திற்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில், அமீர் கான், கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படம், நாளை ( ஆக.11) திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது. 'லால் சிங் சத்தா' படம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அமீர் கானுக்கு எதிராக நெட்டிசன்கள் பாய்காட் செய்து வருகின்றனர். இதனால், பாலிவுட் திரையுலகம் பரபரப்பாகவே இருக்கிறது.

கார்த்தியின் விருமன்
தமிழ் ரசிகர்களுக்கு இந்த வாரம் அட்டகாசமான கிராமத்து திருவிழா விருந்தாக காத்திருக்கிறது. முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம், கிராமத்துப் பின்னணியில் கமர்சியலாக உருவாகியுள்ளது. யுவன் இசையில் வரும் 12ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை காண, ரசிகர்கள் ஆரவராமாக காத்திருக்கின்றனர். இதனால், 'விருமன்' நிச்சயம் ஹிட் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

கடமையை செய், கடாவர்
வில்லன் பாத்திரங்களில் அசத்தி வரும் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் 'கடமையை செய்.' வெங்கட் ராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இப்படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதேபோல், அமலா பால் தயாரித்து அவரே நடித்துள்ள 'கடாவர்' திரைப்படம், வரும் 12ம் தேதியன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகிறது. இந்தப் படம் க்ரைம் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ளது. 'கட்டம் சொல்லுது' என்ற படமும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஓடிடி ரசிகர்களுக்கு சபாஷ் மித்து
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்ஜின் பயோபிக் படமாக உருவாகியிருந்த ''சபாஷ் மித்து', கடந்த மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் டாப்ஸி நடித்திருந்த இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், 'சபாஷ் மித்து' படம், வரும் 12ம் தேதி Voot ஓடிடியில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ஓடிடி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு ரசிகர்களுக்கு கார்த்திகேயா 2
தெலுங்கில் நிகில் சித்தார் நடித்துள்ள 'கார்த்திகேயா 2' வரும் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தூ மொண்டேடி இயக்கியுள்ள இந்தப் படம் சூப்பர் நேச்சுரல் திரில்லர் ஜானரில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. அட்வென்சர்ஸ் திரைப்பட ரசிகர்களுக்கு 'கார்த்திகேயா 2' படம் பிடிக்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications