பீப் சவுண்டு, மியூட்டுக்கெல்லாம் வேலை இல்ல.. இது நெட்ஃப்ளிக்சின் துணிவு.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை: ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து கடந்த ஜனவரி 11 ஆம் ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான துணிவு படம் தற்போது நெட்ஃப்ளிக்சில் வெளியாகியுள்ளது.
ராஜுமுருகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு சதுரங்க வேட்டை படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஹெச்.வினோத். எந்தவித ஆர்ப்பாட்டமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான அப்படத்தை பார்த்துவிட்டு யார் இந்த இயக்குநர் என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.
அந்தப் படத்தின் காட்சியமைப்பும், வசனங்களும் ஹெச்.வினோத் எவ்வளவு கூர்மையான சிந்தனையுடைய இயக்குநர் என்பதை எடுத்துக்காட்டியது. வேலையில்லா பட்டதாரியோடு வெளியாகி அதிரிபுதிரி ஹிட்டும் அடித்தது.

கோலிவுட்டின் முக்கிய இயக்குநர் வினோத்
ஒரு இயக்குநருக்கு முதல் படம் எவ்வளவு முக்கியமோ அதைவிட இரண்டாவது படம் மிகவும் முக்கியம். இரண்டாவது படத்தின் ரிசல்ட்தான் அவர்கள் இண்டஸ்ட்ரியில் நிலைத்திருக்கிறார்களா இல்லையா என்பதை முடிவு செய்யும் என்ற பேச்சு உண்டு. இப்படிப்பட்ட சூழலில் வினோத் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என தனது இரண்டாவது படத்தை இயக்கினார். சதுரங்க வேட்டை கொடுத்த இயக்குநரின் அடுத்த படம் என்ற எதிர்பார்ப்போடு வெளியான தீரன் படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. அதேசமயம் காவல் துறைக்கு வினோத் கண்ணைமூடிக்கொண்டு ஆதரவு கொடுத்திருக்கிறார். என்கவுண்ட்டரை ஆதரிக்கிறார் என்ற விமர்சனமும் எழாமல் இல்லை. இருந்தாலும் தீரன் இன்றளவும் பலரது ஃபேவரைட்.

வினோத் - அஜித் கூட்டணி
இப்படி முதல் இரண்டு படங்களும் பெரும் ஹிட் கொடுத்த கையோடு அஜித்துடன் கூட்டணி வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். பிங்க் படத்தின் ரீமேக்கான அந்தப் படம் சமூக அக்கறையுள்ள படமாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் அது ரீமேக் படம் என்பதால் வினோத் டச் குறைவாகவே இருந்தது என ரசிகர்கள் கூறினர். இதனையடுத்து வலிமை என்ற படத்தை இயக்கினார் வினோத். கொரோனா போன்ற காரணங்களால் எந்த அப்டேட்டும் வெளியிடப்படாமல் இருந்து ஒரு வழியாக கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது வலிமை. வினோத்தின் சொந்த கதையில் அஜித் நடித்திருக்கிறார் என பெரும் எதிர்பார்ப்போடு சென்ற ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்தையே கொடுத்தது.

துணிவுடன் களமிறங்கிய அஜித், வினோத்
தொடர்ந்து, அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கினார். முதல் இரண்டு படங்களும் கொடுத்த ஏமாற்றத்தை இந்தப் படம் தீர்க்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்றனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே படமும் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. குறிப்பாக அஜித்தின் வில்லத்தனமான நடிப்பும், வினோத்தின் சில மிரட்டலான காட்சியமைப்புகளும், பழைய வினோத் வந்துவிட்டார் என்ற நினைப்பை உருவாக்கியது. படமும் நூறு கோடி க்ளப்பில் சேர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நெட்ஃப்ளிக்சில் அன் சென்சார்டு வெர்ஷன் துணிவு
இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த துணிவு நேற்று நள்ளிரவு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக திரையரங்குகளில் வெளியான வெர்ஷனில் அஜித் பேசும் சில வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஓடிடியில் வெளியாகியிருக்கும் துணிவு அப்படி எந்த மியூட்டும் செய்யப்படாமல் அன் சென்சார்டு வெர்ஷனாக வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் படத்தை பார்த்த பலரும் அதுதொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











