ஒடிடியில் வெளியாகும் மலையாள திரையுலகின் சூப்பர் ஹீரோ மின்னல் முரளி.. எப்போ ரிலீஸ் தெரியுமா?
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் சூப்பர் ஹீரோ படமாக உருவாகி உள்ள மின்னல் முரளி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள மின்னல் முரளி திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் பசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மலையாள சூப்பர் ஹீரோ
ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுக்கு நிகராக இந்தியாவிலும் க்ரிஷ், முகமூடி, சிவகார்த்திகேயனின் ஹீரோ உள்ளிட்ட ஏகப்பட்ட சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் தற்போது மலையாள திரையுலகின் சூப்பர் ஹீரோ படமாக மின்னல் முரளி படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

டொவினோ தாமஸ்
தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக மிரட்டிய பிரபல மலையாள ஹீரோ டொவினோ தாமஸ் நடிப்பில் இந்த மின்னல் முரளி படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை ஃபெமினா ஜார்ஜ் ப்ரூஸ் லீ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினேகா பாபு, ஜோக்கர் பட ஹீரோ குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் ரிலீஸ்
மின்னல் முரளி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 24ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் வெளியாக உள்ளது.

நெட்பிளிக்ஸ் நம்பிக்கை
நெட்பிளிக்ஸில் வெளியான தென்னிந்திய படங்கள் தொடர்ந்து படு தோல்வியை சந்தித்து வருவதால் எதிர்பார்த்த அளவுக்கு சந்தாதாரர்கள் அந்த ஒடிடி தளத்திற்கு வரவில்லை. இந்நிலையில், மின்னல் முரளி படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபிளாஷ்
ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் முதல் ஏகப்பட்ட படங்களில் ஃபிளாஷ் எனும் கதாபாத்திரம் உள்ளது. அதே ஃபிளாஷ் கதாபாத்திரத்தை மையமாக வைத்துத் தான் மின்னல் முரளி படம் உருவாகி உள்ளதா என ரசிகர்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர். சமூக கருத்துக்கள் அடங்கிய சூப்பர் ஹீரோவாகவே மின்னல் முரளியும் வருவார் என மலையாள திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











