This week Ott release: லவ்வர் to பிரமயுகம்.. இந்த வார ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
சென்னை: திரையரங்கில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால், சினிமா பிரியர்களின் ஒட்டுமொத்த கவனமும் ஓடிடி பக்கம் திரும்பி உள்ளன. இதைசரியாக புரிந்து கொண்ட ஓடிடி தளங்களும் போட்டி போட்டுக்கொண்டு வரிசையாக படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்று பார்க்கலாம்.
வடக்குபட்டி ராமசாமி: சந்தானம் நடிப்பில் வெளியாகி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சந்தானத்தின் டைமிங் நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த இத்திரைப்படம் இன்று முதல் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், லொள்ளு சபா சேசு, நிழல்கள் ரவி, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, லொள்ளு சபா மாறன், பக்கோடா பாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

லால்சலாம்: ஜெயிலரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் லால் சலாம். தனது மகள் ஐஸ்வர்யாவுக்காக கேமியோ ரோலில் நடித்திருந்தார். முதல் நாளில் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் அடுத்தடுத்த நாளில் தோல்வி அடைந்தது. இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், ரஜினிகாந்த், செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த வாரமே ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் 15ந் தேதி வெளியாக உள்ளது.
Lover: குட்நைட் படத்தால் பிரபலமான மணிகண்டன் ஹீரோவாக நடித்த திரைப்படம் லவ்வர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருக்கிறார். புதுமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ், இந்த படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஒருவர் மீது நாம் வைக்கும் அளவுக்கு அதிகமான காதல் ஒரு கட்டத்திற்கு மேல் எப்படி டாக்சிக் காதலாக மாறுகிறது என்பதை லவ்வர் படத்தில் இயக்குநர் அழகாக சொல்லி இருப்பார். இப்படத்திற்கு காதலர்களிடம் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், இப்படம், தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் மார்ச் 15ந் தேதியன்று வெளியாக உள்ளது.

Bramayugam (தமிழ்) : மம்முட்டியின் மிரட்டலான நடிப்பில் பிப்ரவரி 15ஆம் தேதி மலையாளத்தில் வெளியான திரைப்படம் பிரமயுகம். பாக்ஸ் ஆபிஸில் 75 கோடி வரை வசூல் செய்து அசத்திய படம் பிரம்மயுகம். கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் வசூலில் கல்லாக்கட்டி வருகிறது. மலையாள பட உலகில் தியேட்டரில் வெளியான ஒரு படம் குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளிவர வேண்டும் என்ற விதிப்படி பிரம்மயுகம் திரைப்படம் வரும் மார்ச் 15ஆம் தேதி சோனி லைவில் வெளியாக உள்ளது.
Murder Mubarak (இந்தி): எழுத்தாளர் அனுஜா சௌஹானின் கிளப் யூ டு டெத் நாவலை அடிப்படையாக கொண்டு மர்டர் முபாரக் என்ற இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற ராயல் டெல்லி கிளப்பில் நடந்த ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் மர்மத்தைத் தீர்க்கும் பணியில் ஏசிபி பவானி சிங்காக பங்கஜ் திரிபாதி நடிக்கிறார். மேலும், சாரா அலி கான், விஜய் வர்மா, கரிஷ்மா கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் மார்ச் 15ந் தேதி வெளியாக உள்ளது.

Hanuman (இந்தி): ரூ.300 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்த ஹனுமான் திரைப்படத்தின் இந்தி வெர்ஷன் வரும் மார்ச் 15ந் தேதி முதல் ஜியோ சினிமாவில் பார்க்கலாம். இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் கடந்த ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில், அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி, வினய் ராய், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











