ஊர்வசியின் எதார்த்தமான நடிப்பு.. ஓடிடியில் வெளியானது ஜே பேபி.. படம் எப்படி?
சென்னை: நடிகை ஊர்வசி நடித்த ஜே.பேபி திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. சுரேஷ் மாரி இயக்கிய இந்த படத்தில், ஊர்வசி, தினேஷ், மாறன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.
மார்ச் 8ந் தேதி தியேட்டரில் வெளியானத் திரைப்படம் ஜே பேபி, இந்த படத்தில் ஊர்வசி ஜே.பேபியாக நடித்து படத்தைத் தன் தோளில் தூக்கி சுமந்துள்ளார். மன அழுத்தத்தில் இருக்கும் பேபி (ஊர்வசி) திடீரென தொலைந்து போகிறாள். அம்மா தொலைந்து போனது கூட தெரியாத அவரது மகன்கள் சங்கர் (தினேஷ்), செந்தில் (மாறன்) வேலையில் பிஸியாக இருக்கின்றனர். காவல் துறை அழைத்துச் சொல்லும்போதுதான் தாய் தொலைந்துபோனதே இருவருக்கும் தெரிய வருகிறது.

ஊர்வசி நடித்த ஜே பேபி: இதையடுத்து இருவரும், அம்மாவை தேடி கொல்கத்தா செல்கின்றனர். அப்போது அவர்களுக்கு அங்கிருக்கும் தமிழர் ஒருவர் உதவுகிறார். குடும்ப பிரச்சினையால் பேசிக்கொள்ளாமல் இருக்கும் சங்கரையும், செந்திலையும் இந்தப் பயணம் என்னவாக மாற்றியது? அம்மா பேபி கிடைத்தாரா இல்லையா என்பதுதான் ஜே பேபி படத்தின் கதை. இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் பணத்தை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். இதனால் அன்பான பல உறவுகளை நாம் தொலைந்து விடுகிறோம் என்பதையும், மனஅழுத்தத்தின் ஆபத்தையும், அன்பின் தேவையையும் எளிய கதையின் வழியே அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுரேஷ் மாரி.
ஓடிடியில்: தியேட்டரில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். தியேட்டருக்குச் சென்று இந்த படத்தை பார்க்கத் தவறிய ரசிகர்கள் குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டுக்கு இந்த படத்தை பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.


Click it and Unblock the Notifications











