இன்றிரவே இந்தக் காதல் மறைந்து படுமாயினும்.. கொரிய படத்துக்கு வைரமுத்து கொடுத்த கவிதை விமர்சனம்!
சென்னை: கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் சமீப காலமாக சில கொரிய படங்களை வியந்து பார்த்து அதுகுறித்து தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியான கொரிய படமான 'Even if this Love Disappears tonight' படத்தை பார்த்துவிட்டு அவர் கவிதை நடையில் கொடுத்துள்ள விமர்சனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கோலிவுட் ரசிகர்களும் சமீப காலமாக நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் தமிழ் டப்பிங்கில் வெளியாகும் கொரியன் படங்களையும் வெப்சீரிஸ்களையும் பார்த்து ரசித்து வருகின்றனர். கூடிய சீக்கிரமே பிரியங்கா மோகன் நடித்த 'மேட் இன் கொரியா' படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது.

கொரிய உணவுகளை போல கொரிய படங்களும் கோலிவுட் ரசிகர்களை சமீபகாலமாக அதிகளவில் ஆட்கொண்டு வருகிறது. புதுமையான திரைக்கதைகளை சிறப்பான மேக்கிங் உடன் அவர்கள் கொடுத்து வருவது தான் அதற்கு காரணம் என்கின்றனர்.
வைரமுத்து பாராட்டிய கொரிய படம்:
"ஒரு படம் பார்த்தேன்;
கொரியப் படம்
'Even if this Love
Disappears tonight'
என்பது தலைப்பு
'இன்றிரவே இந்தக் காதல்
மறைந்து படுமாயினும்'
என்று தமிழ்ப்படுத்தலாம்
சிறு கரு
பள்ளிக் காதலர் இருவர்
வெண்பனியில் குளித்து
வெள்ளை மேகத்தில்
துவட்டிவைத்த வெண்மலர்கள்
விபத்தில்
அவளுக்கொரு நோய்;
நேற்று நடந்தது
விடிந்தால் தெரியாது;
அவள் நினைவின் நீளம்
அன்று மட்டும்தான்
இப்படி ஒரு கரு கிடைத்தால்
நம்மூரில் திரைக்கதை
என்ற பெயரில்
வந்தவன் போனவன் எல்லாம்
வைக்கோல் திணித்திருப்பான்
ஆனால்,
எந்தவொரு செயற்கை
சில்மிஷமும் இல்லாமல்
இலையில் நகரும்
நீர்த்துளிபோல
இயல்பாய் அசைகிறது கதை
எல்லாருக்கும் பிடிக்கும்
என்று சொல்லமுடியாது
இத்துனூண்டு
கவிதையை ரசிக்கும்
இதயங்களுக்கு இதுபிடிக்கும்
இதோ
எனது அதிகாலை
காஃபியின் நுரைகளில்
நேற்றிரவு பார்த்த
நிலா முகங்கள்
நொறுங்கும் பிம்பங்களாய்"
என பதிவிட்டு தான் பார்த்து ரசித்த கொரிய படத்தை பாராட்டியுள்ளார். இந்த காதலர் தினத்தை முன்னிட்டு காதலர் தினம், மெளனம் பேசியதே உள்ளிட்ட ரீ ரிலீஸ் படங்களும் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், ஓடிடியில் இந்த கொரிய காதல் படத்தையும் ரசிகர்கள் தாராளமாக ஒரு வாட்ச் போடலாம்.


Click it and Unblock the Notifications











