OTT Gem: Lovers Day 2026.. தியேட்டர் வேணாம்.. வீட்லயே 'உருகி உருகி' லவ் பண்ண இதோ டாப் OTT லிஸ்ட்
சென்னை: திரைப்படங்கள் என்பது வெறுமனே பொழுதுபோக்கு மட்டும் கிடையாது. மாறாக அது ரசிகர்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பும் திறன் வாய்ந்தது. நிம்மதியை கொடுக்கும், தூக்கத்தை கெடுக்கும், மொத்தமாக வாழ்க்கையையே மாற்றிய படங்கள் எல்லாம் உண்டு. அப்படி இருக்கையில் காதலர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் காதல் படங்கள் தொடர்ந்து பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அப்படி காதலர்கள் இணைந்து ஓடிடி தளத்தில் பார்க்க காதலை ததும்ப ததும்ப சொல்லும் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
1. 20th Century Girl : இது ஒரு சுவாரஸ்யமான காதல் கதையை மையமாக கொண்ட கொரியன் டிராமா. ஒரு பள்ளி மாணவி தனது தோழிக்காக அவளின் மனதிற்கு பிடித்த ஒரு பையனை பின் தொடருகிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த தோழிக்கே அந்த பையன் மீது காதல் ஏற்பட்டுவிடுகிறது. இந்த படம் 1999ஆம் ஆண்டு நடைபெறும் கதைக்களம் என்பதால் 90ஸ் கிட்ஸ்களுக்கு படம் மிகவும் பிடிக்கும். படத்தின் கிளைமாக்ஸ் மனதை உளுக்கும் அளவுக்கு இருக்கும். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது.
2. Portrait of a Lady on Fire: இது இரு பெண்களுக்கு இடையிலான காதல் கதையை அழகாக கவிதை போல விவரிக்கிறது. பிரான்ஸ் நாட்டு படமானாலும் படத்தில் இருக்கும் வசனங்களை விட பார்வை மற்றும் மௌனத்தால் கதை அழகாக சொல்லப்பட்டு கதை நகர்த்தப்படுகிறது. படத்தின் கதையை பொறுத்தவரையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை ரகசியமாக ஓவியம் வரைய செல்கிறார் ஒரு பெண் ஓவியர். அவர்களுக்குள் ஏற்படும் காதல் தான் இந்த படத்தின் கதை. இது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது.
3. The Worst Person in the World: தனது காதல் மற்றும் வாழ்க்கை என இரண்டையும் தேடித் தவிக்கும் ஒரு பெண்ணின் நான்கு ஆண்டு கால போராட்டத்தை விவரிக்கும் படம் இது. இன்றைய காலகட்டத்தின் குறிப்பாக தலைமுறையின் குழப்பங்களையும் உறவுச் சிக்கல்களையும் நேர்மையாக படம் பிடித்திருக்கும் படம் இது. நார்வே நாட்டைச் சேர்ந்த அழகான காதல் கதை. இதை அமேசான் பிரைம் வீடியோவில் ரெண்டுக்கு வாங்கி பார்க்கலாம்.

4. My Sassy Girl : ஒரு காதல் கதையை நகைச்சுவையாக பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த படம் ஏதுவான படமாக இருக்கும். கொரியன் டிராமாவான இந்த படத்தின் கதை அப்பாவியான ஆணுக்கும் முரட்டுத்தனமான குணம் கொண்ட பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் எதிர்பாராத சந்திப்பு எப்படி காதலை நோக்கி நகர்கிறது என்பதுதான் கதை. இந்த படத்தை யூடியூப் தளத்திலேயே பார்க்கலாம்.
5. Cold War: போலந்து நாட்டு படமான Cold War படம், பனிப்போர் காலகட்டத்தில் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த இரு கலைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட காதல் எப்படி பல நாடுகளை கடந்தும் நீடிக்கிறது என்பதுதான். இந்த படத்தின் மொத்த நேரமே 88 நிமிடங்கள் தான். ஆனால் படத்தின் முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரைக்கும் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்ட ஒரு காதல் காவியம் இந்த படம். இது அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











