வெப் சீரிஸ் எடுக்க ரெடியாகும் வெற்றிமாறன்... இதுவும் உண்மை சம்பவம் தான்... அப்போ ஜூனியர் NTR படம்?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன், தற்போது விடுதலை படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இரண்டு பாகங்களான விடுதலை படத்தின் முதல் பாகத்தில் இருந்து 'ஒன்னோட நடந்தா' என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது.
இந்நிலையில், வெற்றிமாறன் அடுத்து சூர்யாவின் வாடிவாசல், ஜூனியர் என்.டி.ஆர் உடன் ஒரு படத்தில் இணையள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே முக்கியமான ஒரு வெப் சீரிஸ் எடுக்கும் முடிவிலும் வெற்றிமாறன் தீவிரமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

எதிர்பார்ப்பில் விடுதலை
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. விஜய் சேதுபதியும் சூரியும் லீடிங் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விடுதலை விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இளையராஜா இசையில் தனுஷ் பாடியுள்ள ஒன்னோட நடந்தா என்ற விடுதலை படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.

பிஸி ஷெட்யூலில் வெற்றிமாறன்
விடுதலை போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் முடிந்ததும் உடனடியாக வாடிவாசல் படத்தை தொடங்க ரெடியாகவுள்ளார் வெற்றிமாறன். சிவா இயக்கும் சூர்யா 42 படத்தை முடித்ததும் உடனடியாக வாடிவாசல் சூட்டிங்கில் கலந்துகொள்ள சூர்யாவும் ரெடியாகிவிட்டாராம். அதுமட்டும் இல்லாமல் தெலுங்கு டாப் ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருடனும் வெற்றிமாறன் கூட்டணி வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் புதிய வெப் சீரிஸ்
இந்நிலையில், வெற்றிமாறன் வெப் சீரிஸ் எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளின் 30 ஆண்டுகால போராட்டம் தான் இந்த வெப் சீரிஸ்ஸாக உருவாகவுள்ளதாம். பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலையாகும் வரை 30 ஆண்டுகள் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தியவர் அற்புதம்மாள். அவரின் இந்த பயணத்தை படமாக எடுக்க ஆசை உள்ளதாக ஏற்கனவே வெற்றிமாறன் தனது பேட்டிகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்டேட் எப்போது..?
விடுதலை ரிலீஸ், சூர்யாவின் வாடிவாசல், ஜூனியர் என்.டி.ஆர் உடன் கூட்டணி என வெற்றிமாறனின் படங்கள் லைன்-அப்பில் இருக்கும் போது இந்த வெப் சீரிஸ் எப்படி சாத்தியம் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், அற்புதம்மாள் வெப் சீரிஸின் ரைட்டிங் பணிகளோடு தயாரிக்க மட்டுமே உள்ளதாகவும், வெற்றிமாறனின் உதவியாளர் தான் இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இதுகுறித்த அப்டேட் விரைவில் வெளியாக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப் சீரிஸை பிரபல ஓடிடி தளத்துக்காக வெற்றிமாறனே தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











